2 நிமிடத்தில், சுலபமான 2 சட்னி ரெசிபிகளை செய்வது எப்படி? தேங்காய் வேர்க்கடலை இரண்டுமே சேர்க்கப் போவதில்லை.

chutney1
- Advertisement -

முதல் சட்னி ரெசிபி:
ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பழுத்த 2 தக்காளிப் பழங்களை நறுக்கி போட்டு கொள்ளுங்கள். வரமிளகாய் – 3, தோல் உரித்த பூண்டு பல் – 5, மீடியம் சைஸ் பெரிய வெங்காயம் பொடியாக வெட்டியது – 1, தேவையான அளவு உப்பு, இந்த எல்லாப் பொருட்களையும் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் விழுதுபோல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சட்னி அரைக்கும் போது தேவைப்பட்டால் இரண்டு ஸ்பூன் தண்ணீர் ஊற்றிக் கொள்ளலாம்.

chutney4

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு – 1/2 ஸ்பூன், சீரகம் – 1/2 ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 1/2 ஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து போட்டு தாளித்து, அரைத்து வைத்திருக்கும் சட்னியை இந்த தாளிப்பில் கொட்டி ஒரு நிமிடம் சூடு செய்து பரிமாறினால் போதும். சுவையான வெங்காய தக்காளி சட்னி தயார்.

- Advertisement -

இரண்டாவது சட்னி ரெசிபி:
மீடியம் சைஸ் வெங்காயம் பொடியாக நறுக்கியது – 1, பச்சை மிளகாய் – 2, தோல் உரித்த பூண்டு பல் – 3, கொத்தமல்லித் தழை – 4 இனுக்கு, தேவையான அளவு உப்பு, பொட்டுக்கடலை – 1/2 கப், புளி சிறிய நெல்லிக்காய் அளவு, இந்த எல்லா பொருட்களையும் மிக்ஸியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.

இது வித்தியாசமான பொட்டுகடலை சட்னி. தேங்காய் சேர்க்கவில்லை என்றாலும் சுவையாகத்தான் இருக்கும். மிக்ஸியில் இருந்து இந்த சட்னியை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். உங்களுக்கு தேவையான பக்குவத்தில் இந்த சட்னியில் தண்ணீர் ஊற்றி கரைத்து, ஒரு தனியான பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இதற்கு 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, வரமிளகாய் சேர்த்து தாளித்துக் போட்டால் போதும். கமகம வாசத்துடன் வெள்ளை சட்னி தயார்.

இந்த இரண்டு சட்னியும் இட்லி தோசை சப்பாத்தி பொங்கல் எதற்கு வேண்டுமென்றாலும் சைட் டிஷ்ஷாக வைத்துக்கொள்ளலாம். அட்டகாசமான சுவையில் தேங்காய் சேர்க்காமல் வேர்க்கடலை சேர்க்காமல் உடலுக்கு ஆரோக்கியமான வகையில் செய்யக்கூடிய சட்னி வகைகள். உங்களுக்கு இந்த குறிப்பு படித்து இருந்தால் உங்களுடைய வீட்டிலும் முயற்சி செய்து பாருங்கள். மொத்தமாக சிவப்பு சட்னி செய்ய 2 நிமிடம். வெள்ளை சட்னிகும் 2 நிமிடம்.

- Advertisement -