பெங்களூர் ஹோட்டல்களில் இட்லிக்கு சாம்பார் இப்படித்தான் வெப்பாங்க! நீங்களும் இப்படி ஒருமுறை சாம்பார் வச்சிங்கன்னா, பிறகு தினம் தினம் உங்க வீட்டில பெங்களூரு சாம்பாரு தான்.

sambar
- Advertisement -

நம்ம ஊரில் எப்படி சரவணபவன் ஹோட்டல் டிபன் சாம்பார், முருகன் இட்லி கடை டிபன் சாம்பார், பிரபல்யமாக பேசப்படுகிறதோ, அதேபோலத்தான் பெங்களூரில் தர்ஷினி ஹோட்டல் டிபன் சாம்பார் ரொம்பவும் பிரபல்யமாக பேசப்படும். அந்த சாம்பார் ரெசிபியை தான் இன்று நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். நாம் சாம்பார் வைப்பதை விட, இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். ஒரு சில பொருட்களை சாம்பாரில் நாம் சேர்க்க மாட்டோம். ஆனால் பெங்களூரில் மசாலாவாசத்தோடு இந்த சாம்பாரை வித்தியாசமாக எப்படி வைக்கிறார்கள் என்று ரெசிபியை படித்து தெரிந்து கொள்வோம். பெங்களூருக்கு போய் தான் இந்த இட்லி சாம்பார் சாப்பிட முடியல. அதை நம்ம வீட்லையாவது வச்சு சாப்பிடுவோம்.

செய்முறை

முதலில் 1/2கப் துவரம் பருப்பை நாம் வேக வைப்பது போலவே குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், எண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, நான்கு விசில் விட்டு வேக வைத்து கடைந்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன எலுமிச்சம் பழம் அளவு புளியை, 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்து புளி கரைசலை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு பெரிய முருங்கைக்காயை வெட்டி குக்கரில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி, ஒரு விசில் விட்டு வேகவைத்து அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பட்டை 2 இன்ச் – 2 துண்டு, கடலைப்பருப்பு – 1 டேபிள் ஸ்பூன், வர மல்லி – 2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 6, போட்டு இந்த பொருட்களை எல்லாம் பொன்னிறம் வரும் வரை சிவக்க வறுத்து விட்டு, எண்ணெய் வடித்து விட்டு, இந்த பொருட்களை மட்டும் ஒரு தட்டில் கொட்டி ஆரம்பிக்கவும்.

கடாயில் கொஞ்சம் மீதம் எண்ணெய் இருக்கும். தேவைப்பட்டால் இன்னும் 1/2 ஸ்பூன், எண்ணெய் விட்டு தோல் உரித்து சின்ன வெங்காயம் – 6 பல், நறுக்கிய பெரிய தக்காளி பழம் – 2 போட்டு வதக்கவும். இந்த இரண்டு பொருட்களும் பச்சை வாடை நீங்கி நன்றாக வதங்கி வந்த பிறகு, அடுப்பை அணைத்து, ஆறவைத்து விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து முதலில் வறுத்து வைத்திருக்கும் மசாலா பொருட்களையும், வதக்கிய வெங்காயம் தக்காளியையும் ஒன்றாக போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைஸ் பேஸ்ட் ஆக அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 பல், போட்டு நன்றாக வதக்குங்கள். வெங்காயம் வதங்கி வந்தவுடன் கரைத்து வைத்திருக்கும் புளிக்கரைசலை இதில் ஊற்றி, சாம்பாருக்கு தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன், வெல்லம் – 1 ஸ்பூன், சர்க்கரை – 1 ஸ்பூன், போட்டு இதை 2 அல்லது 3 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.

ஆமாங்க பெங்களூர் சாம்பார் என்றாலே அதில் இனிப்பு சுவை கொஞ்சம் தெரியத்தான் செய்யும். அடுத்து நாம் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளி கரைசலில் ஊற்றவும். எல்லாவற்றையும் மீண்டும் கலந்து விட்டு, ஒரு மூடி போட்டு பத்து நிமிடம் கொதிக்க வையுங்கள். அடுத்து வேக வைத்திருக்கும் முருங்கைக்காயை அதில் இருக்கும் தண்ணீரோடு ஊற்றுங்கள். அடுத்து வேக வைத்த பருப்பை ஊற்றி, நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: வெறும் 10 நிமிடத்தில் பாவ் பஜ்ஜி சுவையில், மசாலா பிரட் டோஸ்ட் எப்படி செய்வது? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த யம்மியான டிஷ்ஷை விருப்பமாக சாப்பிடுவார்கள்.

சாம்பார் ஐந்து நிமிடம் தளதளவென கொதித்து வரட்டும். இதற்குள் மிக்ஸி ஜாரில் 1/2 – கப் அளவு தேங்காய் துருவல், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நைஸ் பேஸ்ட் ஆக அரைத்து, இதையும் சாம்பாரில் கொட்டி அடுப்பை மிதமான தீயில் வைத்து 3 லிருந்து 4 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். (இந்த இடத்தில் உப்பு சரி பார்த்து தேவை என்றால் சேர்க்கவும்).

இறுதியாக தாளிப்பு கரண்டியில் 2 ஸ்பூன் – நெய், கடுகு – 1 ஸ்பூன், இரண்டாக உடைத்த பச்சை மிளகாய் – 2, கருவாப்பிலை – 2 கொத்து, பெருங்காயம் தாளித்து இந்த தாளிப்பை மணக்க மணக்க சாம்பாரில் கொட்டி சுட சுட இட்லிக்கு மேல் வார்த்து சாப்பிட்டால் சுவையான பெங்களூரு சாம்பார் ரெடி. தேவை என்பவர்கள் நம்ம ஊரு வழக்கப்படி கொஞ்சம் கொத்தமல்லி தழையை இதன் மேலே தூவி கொள்ளலாம். அவ்வளவுதாங்க. இந்த ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணி பாருங்க. லேசான பட்டை வாசமும், அந்த இனிப்பு சுவையும் சேர்ந்து இதுவும் ஒரு மாதிரி நல்ல சுவையாக தான் இருக்கும்.

- Advertisement -