காய்கறிகள் மற்றும் நெய் சேர்த்து செய்யும் இந்த சுவையான சாம்பார் சாதத்தை ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். இதன் சுவைக்கு எல்லோரது நாக்கும் அடிமையாகி விடும்.

sadham
- Advertisement -

என்ன தான் சாதம் வடித்து அதற்கான குழம்பு செய்து தொட்டுக்கொள்ள பதார்த்தம் செய்து கொடுத்தாலும் ஒரே பானையில் சமைக்கும் உணவின் சுவைக்கு அது ஈடாகாது. பிரியாணி, பிரிஞ்சி, தக்காளி சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம் இது போன்ற சாதங்களின் வரிசையில் சாம்பார் சாதம் மிகவும் சுவையானதாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்தினை எவ்வாறு மிகவும் சுவையாக சமைப்பது என்பதனை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sappadu

தேவையான பொருட்கள்:
அரிசி – ஒரு டம்ளர், துவரம் பருப்பு – அரை டம்ளர், நெய் – 5 ஸ்பூன், எண்ணெய் – ஒரு ஸ்பூன், முந்திரி – 10, சின்ன வெங்காயம் – 15, தக்காளி – 2, பச்சை மிளகாய் – 2, முள்ளங்கி – 1, கேரட் – 1, பீன்ஸ் – 5, கத்தரிக்காய் – 2, நூக்கல் – 1, உருளைக்கிழங்கு – 1, முருங்கைக்காய் – ஒன்று, சாம்பார் பொடி – 2 ஸ்பூன், மிளகாய்தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள் தூள் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை ஸ்பூன், புளி – நெல்லிக்காய் அளவு, வர மிளகாய் – 3, கடுகு – அரை ஸ்பூன், வெந்தயம் – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
குக்கரில் ஒரு டம்ளர் அரிசி எடுத்துக்கொண்டு அதனுடன் அரை டம்ளர் துவரம்பருப்பையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றை மூன்று முறை தண்ணீர் சேர்த்து நன்றாகக் கழுவிய பின்னர், இவற்றுடன் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பின் எடுத்து வைத்துள்ள காய்கறிகள் அனைத்தையும் சிறுதுண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு புளியுடன் முக்கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

அடுப்பை பற்ற வைத்து ஊற வைத்துள்ள அரிசி மற்றும் பருப்பு இருக்கும் குக்கரை அடுப்பின் மீது வைக்க வேண்டும். பிறகு அதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் காய்கறிகள் அனைத்தையும் இவற்றுடன் சேர்த்து விட வேண்டும்.

masala-powder1

அதன் பின்னர் 2 ஸ்பூன் சாம்பார் பொடி, ஒரு ஸ்பூன் மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து ஒருமுறை நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இதனுடன் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து குக்கரை மூடி 5 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

sambar-sadam1

அதன்பின் ஒரு கடாயை அடுப்பின் மீது வைத்து, நெய் சேர்த்து, கடுகு, சீரகம் வெந்தயம் மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதனுடன் முந்திரியையும் சேர்த்து நன்றாக வறுத்து கொள்ள வேண்டும். அதன்பின் குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கரை திறந்து, மீண்டும் குக்கரை அடுப்பின் மீது வைத்து, அடுப்பை சிறிய தீயில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் கரைத்த புளியை இதனுடன் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, குக்கரை மூடி 5 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும். பிறகு தாளித்து வைத்துள்ளவற்றை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி விட்டு கொத்தமல்லி இலைகளையும் தூவி பரிமாறவேண்டும். இந்த சாம்பார் சாதத்தினை ஆறு நபர்கள் தாராளமாக சாப்பிட முடியும்.

- Advertisement -