சின்ன சின்ன சமையல் குறிப்புகள் 10! இதையும் தெரிஞ்சு வெச்சுகிட்டா கிட்சன் வேலை சுலபமாகுமே!

chilli-sambar
- Advertisement -

சமையல் விஷயங்களில் நாம் செய்யக் கூடிய சின்ன சின்ன விஷயங்கள் தான் அந்த சமையலை மேலும் அழகாக்குகிறது. சிறு சிறு குறிப்புகள் மூலம் சமையற் கலையை வளர்த்துக் கொண்டால் மடமடவென சமைத்து தள்ளும் பெரியவர்களைப் போல நாமும் சுலபமாக மாறிவிடலாம். சமையலுக்கு அனுபவம் மட்டுமல்ல, இது போன்ற குறிப்புகளும் கட்டாயம் நமக்கு தேவை. அப்படியான எளிய 10 குறிப்புகள் இதோ உங்களுக்காக!

குறிப்பு 1:
கருவேப்பிலையை அடிக்கடி வாங்க முடியவில்லை என்றால் வாங்கிய கருவேப்பிலையை காம்பிலிருந்து உருவி ஒரு அலுமினிய பாத்திரத்தில் போட்டு மூடி ஃபிரிட்ஜில் வைத்து விட்டால் எவ்வளவு நாட்கள் ஆனாலும் காயாமல், வாடாமல் அப்படியே இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 2:
இட்லி மாவு அரைத்து வைத்து விட்டு பயன்படுத்த முடியவில்லையா? அப்படின்னா இட்லி மாவு புளிக்காமல் இருக்க ஒரு வெற்றிலையை எடுத்து அதன் காம்பை கிள்ளி விட்டு நன்கு சுத்தம் செய்து குப்புற கவிழ்த்து வைப்பது போல வைத்து விடுங்கள் இரண்டு நாட்கள் மாவு புளிக்காமல் அப்படியே இருக்கும்.

குறிப்பு 3:
காய்ந்து போன கருவேப்பிலைகளை சேகரித்து வைத்தால் குழம்பு மிளகாய் தூள் அரைக்கும் பொழுது பயன்படுத்திக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் ரசப் பொடி, இட்லி பொடி அரைக்கும் போதும் கொஞ்சம் சேர்த்து பயன்படுத்தலாம். மேலும் இட்லி அவிக்கும் பொழுது இட்லி பானைக்கு அடியில் தண்ணீர் ஊற்றி வைக்கும் பொழுது கொஞ்சம் சேர்த்தால் இட்லி நல்ல மணமாக இருக்கும்.

- Advertisement -

குறிப்பு 4:
கமகமக்கும் சாம்பார் மணம் வீட்டையே தலைகீழாக மாற்ற கொஞ்சம் வெந்தயத்தை லேசாக வாணலியில் போட்டு வறுத்து சேர்த்துப் பாருங்கள்.

குறிப்பு 5:
உருளைக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்ற கிழங்கு வகைகளை ரொம்ப சீக்கிரமாக வேக வைப்பதற்கு கொஞ்சம் தண்ணீரில் உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ளுங்கள். பத்து நிமிடம் ஊறிய பின்பு வேக வைத்து பாருங்கள், ரொம்ப சீக்கிரமாக வெந்து விடும்.

- Advertisement -

குறிப்பு 6:
பெருங்காயத் தூள் பெரிய டப்பாவாக வாங்கி வைப்பவர்கள் அது கட்டி ஆகிவிடாமல் இருக்க நீங்கள் வாங்கிய உடன் அதில் ஒரு முழு பச்சை மிளகாயை காம்பு நீக்காமல் சேர்த்து வைத்து விடுங்கள். ரொம்ப நாட்களுக்கு கெட்டியாகாமல், அப்படியே பஞ்சு போல இருக்கும்.

குறிப்பு 7:
சப்பாத்தி மாவு பிசைவதற்கு மாவுடன் உப்பு சேர்க்கும் பொழுது 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து பிசைந்து பாருங்கள். ரொம்பவே மிருதுவாக வரும். அது மட்டுமல்லாமல் நீங்கள் கைகளில் உப்பை தடவிக் கொண்டு மாவை உருட்டினால் கொஞ்சம் கூட கையில் ஒட்டாது.

குறிப்பு 8:
பச்சை மிளகாயை ஃப்ரிட்ஜில் வைக்காமல் வெளியில் வைத்து நீண்ட நாட்கள் பராமரிக்க, காம்பை நீக்கி விட்டு நிழலான ஓரிடத்தில் பரப்பி வைத்து விடுங்கள். காயாமல் எவ்வளவு நாட்கள் ஆனாலும் அப்படியே இருக்கும்.

குறிப்பு 9:
கோழிக் கறியில் கொழுப்பு குறைவு என்று பலரும் அதனை அதிகம் எடுத்துக் கொள்வது உண்டு ஆனால் தோல் இல்லாமல் நீங்கள் சாப்பிட்டால் தான் கொழுப்பு குறைவு! தோலில் இறைச்சியை விட மூன்று பங்கிற்கு அதிகம் கொழுப்பு நிறைந்துள்ளது.

குறிப்பு 10:
நீங்கள் புகை பிடிப்பவராக இருந்தால் தவறியும் சாப்பிட்ட பிறகு புகை பிடிக்க வேண்டாம். சாதாரண நேரத்தில் புகைப் பிடிப்பதை விட நீங்கள் சாப்பிட்ட பின் புகை பிடித்தால் அது 10 மடங்கு அதிகம் விளைவுகளை ஏற்படுத்தும்.

- Advertisement -