சட்னி அரைக்க மிக்சியே தேவையில்லை 5 நிமிடத்தில் ருசியுள்ள இந்த தக்காளி சட்னி இப்படி செஞ்சு பாருங்க 10 இட்லி இருந்தாலும் பத்தவே பத்தாது!

- Advertisement -

இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி, சப்பாத்தி என்று எல்லா வகையான டிபன் வகைகளுக்கும் சூப்பரான காம்பினேஷனாக இருக்கும் இந்த தக்காளி சட்னி செய்வதற்கு மிக்சியே தேவையில்லை. அவசரமான நேரத்தில் அல்லது கரண்ட் இல்லாத நேரத்தில் ரொம்பவே சுலபமாக செய்யக் கூடிய இந்த தக்காளி சட்னியை சப்பு கொட்டி சாப்பிடலாம்! அவ்வளவு அருமையாக இருக்கும். சுவையான தக்காளி சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தக்காளி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு, பச்சை மிளகாய் – 8, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், பழுத்த பெரிய தக்காளிப் பழங்கள் – 5, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், சாம்பார் தூள் – அரை டீஸ்பூன், 2 டீஸ்பூன் – புளி சாறு, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தக்காளி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் 5 பழுத்த நல்ல பெரிய தக்காளிப் பழங்கள் ஆக தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை நன்கு கழுவி காம்பு பகுதியை மட்டும் நீக்கி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெரிய பாத்திரத்தை எடுத்து அதில் தக்காளி பழங்களை ஒவ்வொன்றாக சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். சாறு முழுவதும் தனியாக வந்து தோல் பிரிந்து இருக்க வேண்டும். அதுவரை கைகளால் நன்கு பிசைந்து சாறு எடுத்த பின்னர், தோலை மட்டும் தனியாக பிழிந்து எடுத்து விடுங்கள். இதை அப்படியே வைத்து விட்டு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் சேர்த்து நன்கு காய விடுங்கள். பாரம்பரிய முறையில் செய்யும் இந்த சட்னிக்கு பாரம்பரிய எண்ணெய்களை பயன்படுத்துவது நல்லது. எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்த பின்பு பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்க்க வேண்டும். இந்த சட்னிக்கு காரம் பச்சை மிளகாய் தான் என்பதால் காரத்திற்கு ஏற்ப இவ்வளவு பச்சை மிளகாய்களை சேர்க்க வேண்டும். பச்சை மிளகாய் நெடி போக வதக்கி, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் பிசைந்து வைத்துள்ள தக்காளி சாற்றை சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.

2 டீஸ்பூன் வரும் அளவிற்கு புளியை கொஞ்சமாக கரைத்து கெட்டியாக சேர்த்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். சட்னி கொதித்து லேசாக கெட்டியான பதத்திற்கு வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு சுடச்சுட இட்லியுடன் பரிமாறி பாருங்கள், அவ்வளவுதான்! நீங்கள் எவ்வளவு இட்லி கொடுத்தாலும் போதும் என்று சொல்லவே மாட்டீர்கள் சாப்பிட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

- Advertisement -