ருசியான தக்காளி குழம்பு செய்வதற்கு இதை விட நல்ல செய்முறை இருக்க முடியாது! ரொம்பவும் டேஸ்டியான தக்காளி குழம்பு நொடியில் செய்வது எப்படி?

- Advertisement -

தினமும் என்னடா குழம்பு செய்வது? என்று யோசித்துக் கொண்டிருக்கும் பொழுது நம் நினைவிற்கு சட்டென வருவது சுலபமாக செய்யக்கூடிய இந்த தக்காளி குழம்பு தான். தக்காளி குழம்பு நல்ல சுவையாகவும், டேஸ்டியாகவும் இருப்பதற்கு இந்த சில விஷயங்களை சேர்த்து செய்து பாருங்கள். பள்ளிக்கு போகும் குழந்தைகளும் சரி, வேலைக்கு போகும் பெரியவர்களும் சரி இந்த தக்காளி குழம்பை ரொம்பவே விரும்பி மதிய நேரத்தில் சாப்பிட கூடும். ருசியான தக்காளி குழம்பு எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

தக்காளி குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், சோம்பு – அரை ஸ்பூன், பூண்டு பல் – 4, சின்ன வெங்காயம் – 15, வர மிளகாய் – 2, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பழுத்த தக்காளி பழம் – ஐந்து, மல்லித்தூள் – ரெண்டு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், அரிசி மாவு – ஒரு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, நறுக்கிய மல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

தக்காளி குழம்பு செய்முறை விளக்கம்:
தக்காளி குழம்பு செய்வதற்கு முதலில் பழுத்த தக்காளி பழங்களாக தேர்ந்தெடுத்து நன்கு சுத்தம் செய்து எவ்வளவு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள முடியுமோ, அவ்வளவு பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த தக்காளி குழம்பு செய்வதற்கு பெரிய வெங்காயத்தை காட்டிலும் சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி கூடுதலாக இருக்கும். சின்ன வெங்காயம் 15 எடுத்து தோல் உரித்து பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் தேவையான மற்ற எல்லா பொருட்களையும் தயாராக வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் அரிசி மாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் சோம்பு போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் நாலு பூண்டு பற்களை தோலுரித்து பொடி பொடியாக நறுக்கி சேருங்கள். இவை பொன்னிறமாக வறுபட்டதும் நீங்கள் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி விடுங்கள்.

- Advertisement -

வெங்காயம் ஓரளவுக்கு வதங்கும் பொழுது இரண்டு வரமிளகாயை காம்பு நீக்கி இரண்டாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை போடுங்கள். இவை நன்கு சுருள வதங்கி வரும் பொழுது, பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி சீக்கிரம் வதங்குவதற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். எண்ணெயிலேயே ஐந்து நிமிடம் நன்கு வதக்கிய பின்பு மூடி போட்டு மூடி வைத்து விடுங்கள். இடையிடையே திறந்து அடிப்பிடிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ரொம்பவும் சூப்பராக தக்காளி பழங்கள் மசிய வேகும். அதன் பிறகு மீண்டும் நன்கு திறந்த நிலையில் வைத்து வதக்கி விடுங்கள்.

முக்கால் பாகம் நன்கு வதங்கிய பிறகு மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பை சரி பார்த்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கி விடுங்கள். பச்சை வாசம் போனதும் நன்கு தொக்கு போல திரண்டு வரும். இந்த சமயத்தில் உங்கள் குழம்பிற்கு தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குழம்பு நன்கு கொதித்து கெட்டியாக வரும் பொழுது, நீங்கள் அரிசி மாவு கரைத்து வைத்துள்ள தண்ணீரை சேர்க்க வேண்டும். இது தக்காளி குழம்பை கெட்டியாகவும், கிரீமியாகவும் கொடுக்கும். ஒரு ரெண்டு நிமிடம் நன்கு கொதித்த பின்பு நறுக்கிய மல்லி தழை சேர்த்து சுடச்சுட சாதத்துடன் பரிமாறி தொட்டுக் கொள்ள அப்பளம், வத்தல் போன்றவற்றை வைத்துக் கொண்டாலே போதும். ஒரு குண்டன் சாதம் இருந்தால் கூட வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள்.

- Advertisement -