வறுக்க வேண்டாம், அரைக்க வேண்டாம் பத்தே நிமிடத்தில் டிபன் சாம்பார் சுவையாக செய்வது எப்படி?

tiffen-sambar1_tamil
- Advertisement -

சாம்பார் செய்வது எப்படி

எதையும் வறுக்காமல், அரைக்காமல் ரொம்ப சுலபமாக பத்து நிமிடத்தில் செய்து அசத்தக் கூடிய இந்த டிபன் சாம்பார் எல்லா வகையான சிற்றுண்டிகளுக்கும் பொருத்தமான காம்பினேஷனாக இருக்கும். காய்கறி சேர்த்து செய்வதால் இதன் சுவையும் அட்டகாசமாக இருக்கப் போகிறது. ரொம்பவே எளிதாக நம்முடைய வீட்டில் ஈசி டிபன் சாம்பார் ரெசிபியை எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு – 50 கிராம், பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 1, நறுக்கிய கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் அல்லது நீங்கள் விரும்பும் காய்கறிகள் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், வெந்தயம் – 10, வரமிளகாய் – இரண்டு, கருவேப்பிலை – ஒரு கொத்து, புளி தண்ணீர் – கால் கப், சாம்பார் தூள் – ரெண்டு ஸ்பூன், நறுக்கிய மல்லி தழை – சிறிதளவு.

- Advertisement -

சாம்பார் செய்முறை விளக்கம்:

முதலில் 50 கிராம் துவரம் பருப்பை எடுத்து நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் விரும்பிய காய்கறிகள் அல்லது உங்களிடம் இருக்கும் காய்கறிகள் எவற்றை வேண்டுமானாலும் ஒரு கப் அளவிற்கு சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அல்லது கேரட், பீன்ஸ், கத்திரிக்காய் போன்றவற்றை நறுக்கியும் சேர்க்கலாம். பின்னர் இதனுடன் ஒரு பெரிய வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

தக்காளியையும் நன்கு சுத்தம் செய்து பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்துடன், சிறிய வெங்காயத்தையும் சேர்த்தால் சுவையாக இருக்கும். இல்லாதவர்கள் இதற்கு பதிலாக இன்னொரு பெரிய வெங்காயத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் காரத்திற்கு ஒரு பச்சை மிளகாயை கீறி சேர்த்துக் கொள்ளுங்கள். கால் ஸ்பூன் மஞ்சள் தூள், இந்த கலவைக்கு தேவையான அளவிற்கு உப்பு போட்டு இவை மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து நான்கு விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் மத்து அல்லது ஸ்மேஷர் கொண்டு நன்கு கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் வரமிளகாய், கருவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
2 கப் அரிசி மாவு இருந்தால் தேங்காய் பூரி ஈசியாக சுவையாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, வீட்டில் எல்லோரும் திரும்பத் திரும்ப செய்ய சொல்லுவாங்க!

தாளித்ததும் நீங்கள் கரைத்து வைத்துள்ள புளி தண்ணீரை சேர்த்து கொதிக்க விடுங்கள். பெருங்காயத்தூள் மற்றும் சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கரைத்துக் கொள்ளுங்கள். இவை கொதித்ததும் நீங்கள் கடைந்து வைத்துள்ள கலவையையும் சேர்த்துக் கொள்ள வேணும். உப்பு, காரம் எல்லாம் சரி பார்த்து நன்கு கொதிக்க விடுங்கள். ரெண்டு நிமிடம் நன்கு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து நறுக்கிய மல்லித்தழை தூவி சுடச்சுட இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி, பொங்கல், உப்புமா போன்றவற்றுடன் பரிமாற வேண்டியதுதான். அட்டகாசமான இந்த ஈஸியான இட்லி சாம்பார் நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.

- Advertisement -