இப்படி சுவையான இட்லி பொடி செய்து கொடுத்தால், இன்னும் இரண்டு இட்லி சேர்த்து சாப்பிடுவார்கள்

idli-podi
- Advertisement -

இட்லி பொடியை மட்டும் வீட்டில் செய்து வைத்துக்கொண்டால் போதும், சைடிஷ் செய்ய நேரம் இல்லாத பொழுது இந்த இட்லி பொடி வைத்து சாப்பிட முடியும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இட்லி பொடியை விருப்பமாக சாப்பிடுவார்கள். கடைகளில் விற்கும் இட்லி பொடியில் சிலநேரம் காரம் அதிகமாகவும் இருக்கும். அல்லது நமக்கு பிடிக்காத சுவையுடன் இருக்கும். ஆனால் வீட்டிலேயே இட்லி பொடி அரைத்துக் கொண்டால் காரம் தேவைப்பட்டால் அதிக காரம் சேர்த்தும், காரம் குறைவாக வேண்டுமென்றால் மிளகாய் குறைவாக சேர்த்தும் நமக்கு ஏற்ற சுவையில் அரைத்துக் கொள்ளலாம். அவசர அவசரமாக வெளியில் கிளம்பும் பொழுது ஒரு ஸ்பூன் இட்லி பொடியை கலந்து இரண்டு தோசை சாப்பிட்டு உடனே கிளம்பி விடலாம். இப்படி அவசரத்திற்கு பயன்படுகின்ற இட்லி பொடியை எப்படி சுவையாக அரைத்துக் வைக்க வேண்டும் என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
காய்ந்த மிளகாய் – 50 கிராம், கடலைப் பருப்பு – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 150 கிராம், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, வெள்ளை எள் – 50 கிராம், மிளகு – ஒரு ஸ்பூன், பூண்டு பல் – 10, பெருங்காயத் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 50 கிராம் காய்ந்த மிளகாய்களை காம்பை கிள்ளி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றுடன் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து அதனையும் வறுத்து இவற்றை நன்றாக ஆற வைக்க வேண்டும்.

பிறகு 100 கிராம் கடலைப்பருப்பு சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும். பிறகு இதனுடன் 150 கிராம் உளுத்தம் பருப்பையும் சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். பிறகு இவற்றையும் மிளகாய் வைத்துள்ள தட்டிற்கு மாற்றிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு 50 கிராம் வெள்ளை எள் மற்றும் ஒரு ஸ்பூன் மிளகு சேர்த்து வறுக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் 10 பல் பூண்டு சேர்த்து, அதனையும் வருத்த பின்னர் இறுதியாக பெருங்காயத்தூள் சேர்த்து லேசாக வதக்கி விட்டு, அனைத்தையும் தட்டிற்க்கு மாற்றிக்கொள்ள வேண்டும். பிறகு இவை அனைத்தையும் நன்றாக ஆற வைத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் இறுதியாக ஒன்றரை ஸ்பூன் உப்பு சேர்த்து பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். பின்னர் இதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு அடைத்து வைக்க வேண்டும். அதன் பிறகு தேவைப்படும் நேரத்தில் ஒரு ஸ்பூன் அளவு மிளகாய் பொடியுடன், 1 ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பிறகு இதனுடன் தோசை அல்லது இட்லி சேர்த்து தொட்டு சாப்பிட மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.

- Advertisement -