இட்லி, தோசைக்கு கடையில் கொடுக்கும் சால்னா போல வீட்டிலேயே ஈஸியாக செய்யனும்னா எப்படி செய்யலாம் தெரியுமா?

veg-kurma2
- Advertisement -

இட்லி, தோசைக்கு கடையில் கொடுப்பது போல வெஜ் சால்னா ரொம்ப சுலபமாக செஞ்சி கொடுத்தா இன்னும் வேண்டும் வேண்டும் என்று கேட்டு கேட்டு சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு எல்லோருக்கும் பிடித்த இந்த வெஜ் குருமா வீட்டிலேயே ரொம்ப எளிமையாக எப்படி பத்து நிமிடத்தில் தயாரிப்பது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் பார்க்க இருக்கிறோம்.

வெஜ் குருமா செய்ய தேவையான பொருட்கள்:
ஊற வைத்த பட்டாணி – அரை கப், உருளைக்கிழங்கு – 1, கேரட் – ஒன்று, வெங்காயம் – ஒன்று, தக்காளி – ஒன்று, பச்சை மிளகாய் – 2, மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன், வறுத்து அரைக்க: மிளகு – அரை டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன், சோம்பு – அரை டீஸ்பூன், பட்டை – ஒன்று, கிராம்பு – ஒன்று, ஏலக்காய் – ஒன்று, அன்னாசி மொக்கு – 1, கசகசா – அரை ஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப்.

- Advertisement -

வெஜ் குருமா செய்முறை விளக்கம்:
முதலில் வெறும் வாணலியில் மசாலா வகைகளைப் போட்டு லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும். மிளகு, சீரகம், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசி மொக்கு என்று உங்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப மசாலா பொருட்களை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். குருமா என்றாலே கசகசா தேவை எனவே கசகசா அரை ஸ்பூன் இருந்தால் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்துக் கொள்ளுங்கள். எடுத்து வைத்துள்ள கசகசா மற்றும் அரை கப் தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பில் ஒரு குக்கரை வையுங்கள். சட்டியை விட குக்கரில் வைத்து பாருங்கள், இன்னும் சுலபமாக நமது செய்து விட முடியும். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

- Advertisement -

பின்னர் பெரிய வெங்காயம் ஒன்றை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளித் துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி மற்றும் வெங்காயம் வதங்கியதும் அதில் நீங்கள் உங்கள் விருப்பப்பட்ட காய்கறிகளை நறுக்கி சேர்த்து கொள்ள வேண்டும். கேரட் மற்றும் உருளைகிழங்கு தேவையான வடிவங்களில் வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். முந்தைய நாள் ஊற வைத்த பட்டாணி சேர்த்துக் கொள்ளுங்கள். பச்சை பட்டாணி என்றால் ஊற வைக்காமல் அப்படியே சேர்க்கலாம்.

பின்னர் இவற்றை எல்லாம் நன்கு வதக்கி விட்ட பின்பு மிளகாய் தூள் மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கிண்டி விடுங்கள். இவற்றின் பச்சை வாசம் போக நன்கு வதக்கியதும் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள மசாலாக்களை சேர்த்து கொள்ளுங்கள். உங்களுக்கு எந்த அளவிற்கு கெட்டியாக குருமா தேவையோ அந்த அளவிற்கு தண்ணீரை பார்த்து இப்போது சேர்த்துக் கொள்ளுங்கள். உப்பு, காரம் எல்லாம் சரிபார்த்து மூடி வைத்து விடுங்கள். 3 விசில் நன்கு வெந்து மணக்க மணக்க ஒரு நொடியில் சைவ சால்னா தயாராகி விட்டிருக்கும். இட்லி, தோசை, சாதம், இடியாப்பம், சப்பாத்தி என எல்லாவற்றுக்குமே சூப்பரான காம்பினேஷனாக இது இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -