எத்தனை இட்லி சாப்பிட்டோம் என்று கணக்கே தெரியாமல் சாப்பிட இப்படி ஒருமுறை கார சட்னி அரைத்து தான் பாருங்களேன்!

small-onion-kara-chutney
- Advertisement -

காரசாரமான இந்த காரச் சட்னி பாரம்பரிய முறையில் நல்லெண்ணெய் ஊற்றி தாளித்து செய்யும் பொழுது அவ்வளவு ருசியாக இருக்கும். இட்லி, தோசை, சாதம் போன்ற எல்லாவற்றுக்கும் ரொம்பவே ருசியை கொடுக்கக் கூடிய இந்த பாரம்பரிய வெங்காய கார சட்னி இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பாருங்கள், அட்டகாசமாக இருக்கும். சுவையான கார சட்னி எப்படி எளிதாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

கார சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 20, பெரிய வெங்காயம் – 1, தக்காளி – 2, வர மிளகாய் – 3, காஷ்மீரி மிளகாய் – 3, பூண்டு பற்கள் – 5, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், கடுகு – அரரை ஸ்பூன், கறிவேப்பிலை – 1 இணுக்கு.

- Advertisement -

கார சட்னி செய்முறை விளக்கம்:
பொதுவாக கார சட்னி அரைப்பதாக இருந்தால் தேவையான பொருட்களை வதக்கி அரைப்பதை காட்டிலும், அரைத்து வதக்கும் பொழுது தான் சுவை அதிகமாக இருக்கும். அந்த வகையில் தான் இந்த சட்னியும் அரைத்து தாளித்து வதக்கப் போகிறோம். சின்ன வெங்காயம் போட்டு கார சட்னி செய்யும் பொழுது ரொம்பவே ருசியாக இருக்கும். சின்ன வெங்காயம் இல்லாதவர் அதற்கு ஈடாக பெரிய வெங்காயத்தையும் சேர்த்து கொள்ளலாம். தேவையான சின்ன வெங்காயத்தை தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். மற்ற வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 20 சின்ன வெங்காயம், ஒரு பெரிய வெங்காயம், 2 பெரிய பழுத்த தக்காளிப் பழங்களை வெட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இவற்றுடன் 5 பூண்டுப் பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். காரத்திற்கு வர மிளகாய் 3, காஷ்மீரி மிளகாய் மூன்று என்ற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் இல்லை என்றால் கூடுதலாக வர மிளகாய் இரண்டு சேர்த்துக் கொள்ளுங்கள். காஷ்மீரி மிளகாய் சேர்க்கும் பொழுது சட்னியின் நிறம் அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -

பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நன்கு நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் எதுவும் இதில் சேர்க்கக் கூடாது. கெட்டியாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை விட்டு காய விடுங்கள். கார சட்னி செய்யும் பொழுது தாராளமாக நல்லெண்ணெய் விட்டுக் கொள்ளலாம். அது தான் சுவையைக் கூட்டிக் கொடுக்கும்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடவும். கடுகு பொரிந்து வந்ததும், ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி சுத்தம் செய்து உருவி தாளித்து கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்து வைத்துள்ள சட்னியை அதில் ஊற்றி கொதிக்க விட வேண்டும். எந்த அளவிற்கு எண்ணெய் பிரிய கொதிக்க வைக்கிறீர்களோ, அந்த அளவிற்கு சட்னி சுவை மிகுந்ததாக இருக்கும். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக செய்யக்கூடிய இந்த கார சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம். 2 நாட்கள் வரை வெளியில் வைத்தாலும் கெட்டுப் போகாது.

- Advertisement -