சுட சுட இட்லிக்கு மேல் இந்த ‘கார நீர் சட்னி’ வார்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை உச்சந்தலைவரை ஏறும். 10 இட்லி சாப்பிட்டாலும் பத்தாதுன்னு சொல்வீங்க.

kara-chutney_tamil
- Advertisement -

இதை பார்க்கும் போது, இதே போல நம்முடைய வீட்டிலும் ஒரு காரச் சட்னி அரைத்து சாப்பிட வேண்டும் என்று தோணுது அல்லவா. அதுவும் இந்த குளிர்காலத்திற்கு சுடசுட இட்லி மேல் சுட சுட இந்த கார சட்னியை ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும். கொஞ்சம் வித்தியாசமான முறையில் இந்த கார நீர் சட்னி எப்படி செய்வது தெரிந்து கொள்வோமா. பொதுவாக கர்நாடகா ஆந்திரா போன்ற பகுதிகளில் இப்படிப்பட்ட காரசாரமான நீர் சட்னி கிடைக்கும். அதே போல ருசியில் தான் இன்றும் நாம் இந்த ரெசிபியை பார்க்க போகின்றோம்

அடுப்பில் ஒரு கடாயை வைத்து தோல் உரித்த பூண்டு பல் – 6, வரமிளகாய் – 6, போட்டு பொன்னிறமாக வறுத்து விட்டு ஒரு பெரிய சைஸ் பெரிய வெங்காயம் – 1, பெரிய பெரிய துண்டுகளாக நறுக்கி போட்டு வதக்க வேண்டும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்த உடனேயே 2 தக்காளி பழங்களை போட்டு வதக்க வேண்டும். தக்காளி பழங்களை பொடியாக நறுக்கிவிட கூடாது. தக்காளிக்கு மேலே இருக்கும் காம்பை நீக்கிவிட்டு, நான்கு பாகங்களாக வெட்டி விடுங்கள். நான்கு பாகங்களும் ஒட்டியே இருக்கட்டும். தக்காளி பழம் மேலே வெந்து தோல் பிரியும் வரை தான் வதக்க வேண்டும். தக்காளி பழத்திற்கு உள்ளே இருக்கும் ஜூஸை வதக்கிய வெளியே எடுக்காதீங்க. இந்த பக்குவம் ரொம்ப ரொம்ப முக்கியம் பார்த்துக்கோங்க. (அடுப்பை மிதமான தீயில் வைத்தே வதக்கனும்.)

- Advertisement -

தக்காளி பழம் கடாயில் சூடாகி தோல் பிரிந்து வரும் சமயத்தில் புளி – 1 இன்ச், கருவேப்பிலை – 1 கொத்து, தேவையான அளவு உப்பு, போட்டு கலந்து உடனடியாக அடுப்பை அணைத்து விடுங்கள். இறுதியாக வெல்லம் – 1 ஸ்பூன் போட்டுருங்க. இது நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரே 1 டேபிள் ஸ்பூன் மட்டும் தேங்காய் துருவல் சேர்த்து, தேவைப்பட்டால் தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளலாம். ஏனென்றால் இது நீர் சட்னி தான் நிறைய தண்ணீரை ஊற்ற போகின்றோம்.

அரைத்த சட்னியை இப்போது தாளித்து கொதிக்க வைக்க போகின்றோம். அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு உளுத்தம் பருப்பு, வர மிளகாய், கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து அதில் அரைத்து வைத்திருக்கும் சட்னியை ஊற்றி தேவையான அளவு தண்ணீரை ஊற்றி, இரண்டு கொதி கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

அவ்வளவுதான். சுட சுட கல் தோசை மேலே இதை ஊற்றி சாப்பிட்டால் இதன் காரமும் சுவையும் அத்தனை ருசியாக இருக்கும். இது நன்றாக ஆரிய பின்பு பிரிட்ஜில் ஸ்டோர் செய்தால் கூட இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடலாம். கெட்டுப் போகாது. ரெசிபி பிடிச்சிருந்தா ட்ரை பண்ணுங்க. மழைக்காலத்திற்கு நாவிற்கு சூப்பரான டேஸ்ட் கொடுக்கும் சட்னி இது.

பின்குறிப்பு: நிறைய பேருக்கு சட்னி ரொம்பவும் சிவப்பாக வரவில்லை என்று கஷ்டப்படுவார்கள். வேறொன்றும் கிடையாது. வரமிளகாய் வைக்கும் போது அதில் இரண்டு காஷ்மீரி மிளகாய்களை வைத்தால் சட்னியின் நிறம் சூப்பரா கலரா கிடைக்கும். உங்க வீட்ல காஷ்மீர் சில்லி இல்லை என்றாலும் பரவாயில்லை. கலர் கிடைக்கலை என்றாலும் சுவை ஒரே மாதிரி தான் இருக்கும். உங்களுடைய காரத்திற்கு ஏற்ப காரத்தை இன்னும் கொஞ்சம் கூட்டியும் வைத்துக் கொள்ளலாம். ஆனால் காரம் குறைவாக இருந்தால் சட்னி அவ்வளவு ருசி தராது.

- Advertisement -