கேழ்வரகு மாவும், அவலும் இருந்தா போதும் சட்டுனு பாரம்பரிய முறையில் ஹெல்தி அடை செஞ்சிடலாம்! ஆறிப்போன கூட சூப்பரா ரொம்பவே மிருதுவா இருக்கும்.

ragi-aval-adai
- Advertisement -

திணை, கோதுமை போன்ற தானிய வகைகளில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. அதில் கோதுமை மாவை விட, கேழ்வரகு மாவு அதிக சத்துக்கள் கொண்டது. எனவே அடிக்கடி கோதுமை மாவு, கேழ்வரகு மாவு, திணை, கம்பு போன்ற மாவு வகைகளை இது போல காலை உணவாக செய்து சாப்பிட்டால் நீடித்த ஆரோக்கியம் கிடைக்கும். இட்லி, தோசை செய்து போரடித்து போனவர்களுக்கு இது போல வித்தியாசமான முறையில் பாரம்பரிய சுவையைக் கொண்ட அடை வகைகளையும் ஒரு முறை முயற்சித்துப் பார்க்கலாமே. சுவை மிகுந்த பாரம்பரிய கேழ்வரகு அவல் அடை எப்படி செய்வது? என்பதை நாமும் தெரிந்துக் கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

ragi-1

கேழ்வரகு அவல் அடை செய்ய தேவையான பொருட்கள்:
கேழ்வரகு மாவு – ஒரு கப், அவல் – அரை கப், பெரிய வெங்காயம் – ஒன்று, பச்சை மிளகாய் – ஒன்று, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கேரட் – ஒன்று, முருங்கைக்கீரை – அரை கைப்பிடி, உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கேழ்வரகு அவல் அடை செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு சிறிய பவுலை எடுத்து அதில் அரை கப் அளவிற்கு அவலை கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். அவல் மூழ்கும் அளவிற்கு ஊற்றினால் போதும், பத்து நிமிடத்தில் அவல் எல்லா தண்ணீரையும் உறிஞ்சிக் கொள்ளும். வெள்ளை அவல், சிகப்பு அவல், தட்டை அவல் என்று எந்த அவலாக இருந்தாலும் பரவாயில்லை. சாதாரணமாக கேழ்வரகு மாவில் அடை செய்யும் பொழுது கடினமாக இருக்கும். ஆனால் அவல் சேர்த்து செய்யும் பொழுது மிகவும் சாஃப்ட்டாக வரும்.

aval

பத்து நிமிடம் கழித்து அவல் ஊறியதும் ஒரு கப் அளவிற்கு கேழ்வரகு மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். கேழ்வரகு மாவுடன் பொடிப்பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் ஒன்றை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு பச்சை மிளகாயை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளலாம். பச்சை மிளகாய் வேண்டாம் என்பவர்கள் அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு எடுத்து அதை நன்கு தட்டி நைஸான பவுடராக்கி சேர்க்கலாம். பின் ஒரு கொத்து கறிவேப்பிலையை உருவி நன்கு கழுவி சுத்தம் செய்து பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

உங்களிடம் இருக்கும் காய்கறி வகைகளில் ஏதாவது ஒரு காய்கறியை துருவி சேர்க்கலாம். கேரட், பீட்ரூட், கோஸ் என்று உங்களுக்கு விருப்பமான காய்கறியை துருவி சேருங்கள். இப்போது இதில் ஒரு கேரட்டை தோல் நீக்கி பூ போல துருவி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் கொஞ்சமாக முருங்கை இலைகளை உருவி கழுவி சேர்க்கலாம். முருங்கை மரம் வைத்திருப்பவர்களுக்கு சுலபமாக இந்த இலைகள் கிடைக்கும். இலை கிடைக்காதவர்கள் இதனை தவிர்த்து விடலாம், இது ஆப்ஷனல் தான். பிறகு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

ragi-adai

இந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரை தெளித்து பிசைய வேண்டும். தண்ணீர் அதிகம் சேர்க்கக்கூடாது. அதே போல கெட்டியாகவும் பிசைய கூடாது. சரியான பதத்தில் அடையை கையில் தட்டுவதற்கு ஏதுவான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி நீங்கள் இட்லி பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்தால் சுவையான கேழ்வரகு அவல் கொழுக்கட்டை தயாராகிவிடும். அல்லது ஒரு பாலிதீன் கவரில் எண்ணெய் தடவி அடை போல நன்கு மெல்லியதாக தட்டி தோசைக்கல்லில் இருபுறமும் சிவக்க வறுத்து எடுத்தால் கேழ்வரகு அவல் அடை ரெடி. எந்த முறையில் உங்களுக்கு விருப்பமோ, அந்த முறையில் இதே போல நீங்களும் செய்து அசத்தலாம்.

- Advertisement -