‘கூரைக்கடை கார சட்னி’ 2 நிமிஷத்துல இப்படி செஞ்சு பாருங்க, 12 இட்லி கூட சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம்!

milagai-chutney
- Advertisement -

இட்லி, தோசைக்கு இதை விட சூப்பரான காம்பினேசன் கொடுக்கக்கூடிய சட்னி வகை இருக்கவே முடியாது. சாதாரண கூரை கடைகளில் எளிதாக கிடைக்கும் இந்த கார சட்னி சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும். இப்படி ஒரு சுவையான கார சட்னியை செய்து கொடுத்தால் எவ்வளவு இட்லி, தோசை வேண்டுமானாலும் சலிக்காமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கலாம். அந்த அளவிற்கு ருசியை கொடுக்கக் கூடிய இந்த கூரைக் கடை கார சட்னி நாமும் எப்படி செய்வது? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 8, உப்பு – தேவையான அளவு, புளி – சிறு நெல்லி அளவு, பூண்டு பற்கள் – 4, சின்ன வெங்காயம் – 10, பெரிய தக்காளி – 2, நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன், பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

காரச் சட்னி செய்முறை விளக்கம்:
காரச் சட்னி செய்ய முதலில் 15 நிமிடத்திற்கு முன்னமே வர மிளகாய் 8 எடுத்து மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி ஊற வைத்து விடுங்கள். குண்டு குண்டாக இருக்கும் காய்ந்த மிளகாய் ஆக இல்லாமல் நீட்டு மிளகாய் எடுத்துக் கொள்வது நல்லது. 15 நிமிடத்திற்கு பிறகு தண்ணீரில் இருக்கும் மிளகாயை மட்டும் எடுத்து மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள்.

தூள் உப்பை விட கல் உப்பு சேர்ப்பது சட்னிக்கு சுவையை கூட்டும். சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளி சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது மிக்ஸியை இயக்கி கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதிலேயே நாலு பூண்டு பற்களை உரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சின்ன வெங்காயம் 10 என்கிற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் ஒன்றை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். பெரிய வெங்காயத்தை விட சின்ன வெங்காயம் சுவையை கூட்டும்.

- Advertisement -

தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒரு சுற்று சுற்றி கொரகொரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை தனியாக ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதே மிக்ஸி ஜாரில் 2 பெரிய சைஸ் தக்காளிகளை நன்கு சுத்தம் செய்து கழுவி ஒன்றிரண்டாக நறுக்கி சேர்த்து நைஸாக அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றி காய விடுங்கள். காரச் சட்னிக்கு நல்லெண்ணெய் ஊற்றுவது அதீத சுவை தரும்.

எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரியவிட்டு பெருங்காயத்தூள், கருவேப்பிலை தாளித்து அரைத்து வைத்த மிளகாய், வெங்காய பேஸ்ட் சேர்த்து நன்கு பச்சை வாசம் போக ஒருமுறை கலந்து விட்டு, அரைத்து வைத்திருக்கும் தக்காளி பேஸ்டை சேர்க்க வேண்டும். பின்னர் தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி உப்பை சரிபார்த்து 2 நிமிடம் நன்கு கொதிக்க வைத்தால் சுவையான கூரைக்கடை கார சட்னி தயார். இப்படி ஒருமுறை சட்னி செய்து கொடுத்தால் எவ்வளவு இட்லி வேண்டுமானாலும் உள்ளே சென்று கொண்டேயிருக்கும். நீங்களும் இதே முறையில் ஒருமுறை செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -