ஒரு கைப்பிடி கொத்தமல்லி இருந்தா போதும் தோசைக்கு சூப்பரான சட்னி ரெடி! சுவையான கொத்தமல்லி சட்னி இப்படிக்கூட செய்யலாமே!

kothamalli-kara-chutney
- Advertisement -

காலையில் எழுந்ததும் ஒரே மாதிரியான சட்னி செய்து கொடுக்காமல் இது போல வித்தியாசமான முறையில் சட்னி செய்து கொடுத்தால் காலை உணவு திருப்தியாக இருக்கும். ஹோட்டலில் கொடுப்பது போல மூன்று வகை, நான்கு வகை சட்னி வீட்டில் கொடுக்க முடியா விட்டாலும், விதவிதமாக இப்படி செய்து கொடுக்கும் பொழுது அந்த நாளே இனிமையாக துவங்கும். ஒரு கைப்பிடி கொத்தமல்லியை கொண்டு செய்யப்படும் இந்த காரச் சட்னியின் ருசி அபாரமாக இருக்கும். நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க. சுவையான கொத்தமல்லி சட்னி எளிதாக எப்படி செய்வது? என்பதை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

கொத்தமல்லி சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, பெரிய வெங்காயம் – ஒன்று, பெரிய தக்காளி – ஒன்று, இஞ்சி – ஒரு சிறு துண்டு, பூண்டு – ஒரு பல், புளி – சிறு கோலிகுண்டு அளவு, கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்தம் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், வர மிளகாய் – 5.

- Advertisement -

கொத்தமல்லி சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு கொத்தமல்லி தழைகளை பிரஷ்ஷாக பார்த்து பச்சையாக எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுத்தம் செய்து கழுவி தண்ணீர் இன்றி உதறி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது தேவையான மற்ற காய்கறிகளை தயாராக எடுத்து நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு கடலெண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள்.

இந்த கொத்தமல்லி சட்னிக்கு கடலை எண்ணெய் கொண்டு செய்யப்படும் பொழுது அதனுடைய சுவை வித்தியாசப்படும், ரொம்ப அருமையாக இருக்கும், ட்ரை பண்ணி பாருங்க. கடலை எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்பு நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வர வதங்கியதும் தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பாதி அளவிற்கு வதங்கி வரும் பொழுது இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் புளிப்புக்கு புளியும் கொஞ்சம் சேர்த்து கொள்ளுங்கள். இவற்றை நன்கு வதக்கிய பின்பு கடைசியாக சுத்தம் செய்து வைத்துள்ள கொத்தமல்லி தழை சேர்த்து 2 நிமிடம் வதக்கி சுருங்கி வரும் பொழுது அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக சுவையான கொத்தமல்லி சட்னி இப்போது தயார்.

இதை மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு காய விடுங்கள். பின்பு கடுகு கொஞ்சம், கறிவேப்பிலை, உளுந்தம் பருப்பை பொன்னிறமாக தாளித்து, பெருங்காயத் தூள் தூவி, வர மிளகாயை கிள்ளி சேர்த்து சட்னியுடன் கொட்டி இறக்கினால் சுவையான கொத்தமல்லி சட்னி சுடச்சுட இட்லி, தோசையுடன் சாப்பிட தயார் ஆகிவிட்டிருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி பாருங்க, தோசைக்கு செம காம்பினேஷனாக இருக்க போகுது.

- Advertisement -