மணக்க மணக்க மணத்தக்காளி வத்தக் குழம்பு இப்படி செய்து பாருங்கள், 1 வாரம் வரை வைத்து சாப்பிடலாம்!

vatha-kulambu
- Advertisement -

வத்த குழம்பு என்றாலே எல்லோருக்கும் நாவில் ஜலம் ஊற ஆரம்பித்து விடும். வத்தக்குழம்பு சுவைக்கு ஈடு இணை எந்த குழம்பிற்கும் இல்லை என்று கூறலாம். சுண்ட சுண்ட வைத்த வத்தல் குழம்பு இன்னும் அதிக ருசியை தரும் என்பார்கள். புளியை ஊற்றி செய்யும் வத்தல் குழம்பு ஒரு வாரம் வரை கூட நாம் வைத்து சாப்பிடலாம். வத்தல் குழம்பு செய்ய பொதுவாக கடைகளில் விற்கும் மசாலா பொருளை வாங்குவதை தவிர்க்க வேண்டும். நம் வீட்டில் நாமே நம் கைப்பட அரைத்த மசாலாவை கொண்டு வத்தல் குழம்பு வைத்தால் அதன் ருசி அலாதியானதாக இருக்கும். மணத்தக்காளி மற்றும் சுண்டைக்காய் வத்தல் போட்டு குழம்பு செய்யும் எளிய முறையை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளவிருக்கிறோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

manathakkali-vathal

மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவிற்கு, புளி – ஒரு கைப்பிடி அளவிற்கு, சின்ன வெங்காயம் – 10, பூண்டு பற்கள் – 10, சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவிற்கு, நல்லெண்ணெய் – 3 டேபிள்ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு – கால் டீ ஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு தேவையான அளவிற்கு.

- Advertisement -

மணத்தக்காளி வத்தல் குழம்பு மசாலா செய்ய தேவையான பொருட்கள்:
தனியா – 2 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 6, துவரம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், வெந்தயம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து.

manathakkali-vathal1

மணத்தக்காளி வத்தல் குழம்பு செய்முறை விளக்கம்:
முதலில் வறுக்கக் கொடுத்துள்ள பொருட்களை தயாராக எடுத்துக் கொண்டு வறுக்க வேண்டும். அதற்கு அடுப்பை பற்ற வைத்து ஒரு அடி கனமான வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒவ்வொரு பொருளாக லேசாக வதக்கி எடுக்க வேண்டும். மல்லி விதைகளை போட்டு வாசம் வரும் வரை லேசாக வதக்கி எடுங்கள். பின்னர் துவரம் பருப்பு, மிளகு, வெந்தயம், சீரகம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை தனித்தனியாக லேசாக வறுத்து சூடேறியதும் எடுத்து விடவும். இந்த பொருட்களை அதிகம் வறுக்க வேண்டிய அவசியமில்லை.

- Advertisement -

வறுத்த பொருட்களை நன்கு ஃபேன் காற்றில் ஆற விடுங்கள். பின்னர் ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து அதனுடன் தோல் உரித்து 4 சின்ன வெங்காயம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் மசிய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின் வாணலியில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு மணத்தக்காளி வத்தல் மற்றும் சுண்டைக்காய் வத்தலை லேசாக வறுத்து தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும். பின்னர் அதே வாணலியில் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து கடுகு தாளித்து உளுத்தம் பருப்பை சேர்க்கவும். உளுந்து பொன்னிறமாக வறுபட்டதும், நறுக்கி வைத்துள்ள பூண்டு, சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.

vatha-kulambu1

வெங்காயம் வதங்கி வந்ததும் கரைத்து வைத்துள்ள புளி மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், அரைத்து வைத்திருக்கும் விழுது ஆகியவற்றை சேர்த்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் வறுத்து வைத்த மணத்தக்காளி மற்றும் . சுண்டைக்காய் வத்தல்களை சேர்த்து நன்கு சுண்ட கொதிக்க வைக்க வேண்டும். குழம்பு நன்கு சுண்ட வற்றியதும் அதில் நல்லெண்ணெய் 2 டேபிள்ஸ்பூன் விட்டுக் கொள்ளுங்கள். அவ்வளவு தான் அப்படியே சூட்டுடன் இறக்க வேண்டியது தான். மணக்க மணக்க மணத்தக்காளி மற்றும் சுண்டல் வத்தல் குழம்பு தயாராகியிருக்கும். இதனை சாப்பாடுடன் பிசைந்து சாப்பிடும் பொழுது எவ்வளவு சாப்பாடு இருந்தாலும் நமக்கு பத்தவே பத்தாது. அந்த அளவிற்கு ருசியை கொடுக்கும் இந்த முறையில் செய்யும் வத்தல் குழம்பை நீங்களும் வீட்டில் செய்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -