அட இத்தனை நாள் இப்படி ஒரு டிஷ் இருக்கிறது தெரியாம போச்சே. இனி இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றிக்கும் இது தான் சைடு டிஷ். வாங்க அது என்னனு தெரிஞ்சிக்கலாம்.

Turmeric Pickle
- Advertisement -

இந்த ஊறுகாய்களில் எத்தனையோ வகையான ஊறுகாய் கேள்விப்பட்டு இருப்போம். இந்த சமையல் குறிப்பு பதிவில் கொஞ்சம் வித்தியாசமாக மஞ்சள் வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாயை எப்படி செய்வது என்பதை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். ரொம்ப வித்தியாசமான இந்த ஊறுகாய் சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும். அது மட்டுமின்றி ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது. வாங்க அதை எப்படி செய்வது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

மஞ்சள் – 250 கிராம், காய்ந்த மிளகாய் -10, கடுகு -1 டீஸ்பூன், வெந்தயம் – 1 டீஸ்பூன், கல் உப்பு – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் -1/4 டீஸ்பூன், நல்லெண்ணெய் 100 கிராம், எலுமிச்சை பழம் – 3.

- Advertisement -

செய்முறை விளக்கம்

இந்த ஊறுகாய் செய்ய பச்சை மஞ்சளாக இருந்தால் அப்படியே தோல் சீவி எடுத்து செய்யலாம். ஒரு வேலை உங்களுக்கு பச்சை மஞ்சள் கிடைக்கவில்லை என்றால் கிழங்கு மஞ்சள் வாங்கி தண்ணீரில் 10 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு அதன் மேல் தோலை ஒரு கத்தி வைத்து சுரண்டினால் வந்து விடும்.

மஞ்சளை மேலே தோல் நீக்கிய பிறகு காய் சீவலில் வைத்து நன்றாக சீவி எடுத்துக் கொள்ளுங்கள். அப்படி செய்ய முடியவில்லை என்றால் சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸியில் போட்டு சுற்று விட்டால் போதும் தேங்காய் துருவல் போல் வந்து விடும். இதை மைய அரைத்து விடக் கூடாது.

- Advertisement -

அடுத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு பேன் வைத்து சூடானவுடன் கடுகு, வெந்தயம் போட்டு வெந்தயம், நிறம் மாறி வரும் வரை வறுத்த பிறகு அதில் காய்ந்த மிளகாய், கல் உப்பு சேர்த்து அதையும் நன்றாக வறுத்த பிறகு கடைசியாக பெருங்காயம் சேர்த்து அடுப்பை அணைத்து விடுங்கள். இதை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்து ஒரு மூன்று எலுமிச்சை பழத்தை நன்றாக பிழிந்து சாறு எடுத்து அதையும் தனியாக ஒரு பவுலில் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது ஊறுகாய் தாளித்து விடலாம். அடுப்பை பற்ற வைத்து அடி கனமான வேலை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானவுடன், மஞ்சளை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இது குறைந்தது பத்து நிமிடம் வரையிலாவது வதக்க வேண்டும். அப்போது தான் மஞ்சள் இருக்கும் ஈரத்தன்மை, பச்சை வாடை எல்லாம் நீங்கி மஞ்சள் நன்றாக வதங்கி சுருண்டு வரும்.

- Advertisement -

அதன் பிறகு அரைத்து வைத்த மசாலா பவுடரை சேர்த்து இன்னும் சிறிது நேரம் அப்படியே கை விடாமல் கிளறிக் கொண்டே இருங்கள். இது நன்றாக வதங்கி எண்ணெய் எல்லாம் சுருண்டு மேலே வரும் வரை வதக்க வேண்டும். கடைசியாக பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு சேர்த்து அந்த தண்ணீரும் வற்றும் வரை வதக்கிய பிறகு அடுப்பை அணைத்து விட்டு, ஊறுகாய் ஆறிய பிறகு ஒரு பாட்டிலில் போட்டு பிரிட்ஜில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். ஆறு மாதம் ஆனால் கூட இந்த ஊறுகாய் கெட்டுப் போகாமல் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: சுடு சாதம் மட்டும் வடித்தால் போதும். சூப்பரான பருப்பு பொடி ஐந்தே நிமிடத்தில் தயார். பேச்சிலர்ஸ் கூட இதை சுலபமாக செய்யலாம்.

இது தயிர் சாதம், ரசம் சாதம் போன்றதற்கு நல்ல ஒரு காம்பினேஷன். அது மட்டும் இன்றி சப்பாத்தி, இட்லி தோசைக்கு கூட வைத்து சாப்பிடலாம். மஞ்சள் வைத்து செய்யப்படும் இந்த ஊறுகாய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவும் கூட. இந்த ஊறுகாயை நீங்களும் உங்கள் வீட்டில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -