10 நிமிடத்தில் அசத்தலான மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார், வெங்காயம் வதக்கி இப்படி செஞ்சு பாருங்க ருசி அபாரமாக இருக்கும்!

killi-sambar2
- Advertisement -

காய்கறிகள் இல்லாத சமயத்தில் சட்டுன்னு ஒரு அற்புதமான சாம்பார் சூடான சாதம் மற்றும் டிபன் வகைகளுக்கு செய்து அசத்த இந்த மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் நல்ல ஒரு தேர்வாக இருக்கும். மிளகாய்களை கிள்ளி போட்டு தாளித்து செய்வதால் இதற்கு இந்த மாதிரியான பெயர் வந்தது. ரொம்பவும் சுலபமாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய இந்த அசத்தலான மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார், வெங்காயத்தை வதக்கி எப்படி டேஸ்டியாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 150 கிராம், பூண்டு பல் – 4, பச்சை மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், தக்காளி – 2, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் ஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கட்டிப் பெருங்காயம் – ஒரு சிறு துண்டு, வரமிளகாய் – 5, பெரிய வெங்காயம் – 2, கருவேப்பிலை – ஒரு கொத்து, தக்காளி – ஒன்று, புளி – சிறு எலுமிச்சை பழம் அளவு.

- Advertisement -

மிளகாய் கிள்ளி போட்ட சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் துவரம் பருப்பை நன்கு களைந்து சுத்தம் செய்து பத்து நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு குக்கரில் இதை சேர்த்து இதனுடன் பூண்டு பல் மற்றும் பச்சை மிளகாய், பெருங்காயத்தூள், தக்காளி, மஞ்சள் தூள் கால் ஸ்பூன், கொஞ்சம் உப்பு போட்டு குக்கரை மூடி ஐந்து விசில் விட்டு எடுத்துக் கொள்ளுங்கள். தண்ணீர் அதிகம் ஊற்றக் கூடாது. இந்த பொருட்கள் எல்லாம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் மேலே பொங்கி வடியாமல் இருக்கும்.

பருப்பு நன்கு குழைய வெந்ததும் மத்து போட்டு கடைந்து கொள்ளுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, சீரகம் போட்டு தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு சிறு துண்டு கட்டி பெருங்காயம் சேர்த்துக் கொள்ளுங்கள் வாசனையாக இருக்கும். உங்கள் காரத்திற்கு ஏற்ப நீட்டு மிளகாய் காம்பை நீக்கி இரண்டு மூன்றாக கிள்ளி சேர்த்துக் கொள்ளுங்கள். தாளிக்கும் பொழுது அடுப்பை குறைந்த தீயில் வைத்திருக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் ஒரு கொத்து கருவேப்பிலையை உருவி தாளித்து, பெரிய வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். வெங்காயம் நன்கு பொன்னிறமாக வறுபட்டு வரும் பொழுது, ஒரு சிறு தக்காளியை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கி விடுங்கள். ஒரு சிறு எலுமிச்சை பழ அளவிற்கு புளியை கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளி மசிய வதங்கியதும் கடைந்த பருப்பை சேர்த்து தேவையான அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள்.

இப்போது இந்த குழம்பிற்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்துக் கொள்ளுங்கள். காரம் உங்களுக்கு இன்னும் கூடுதலாக வேண்டும் என்றால் குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம், இல்லை என்றால் இப்படியே விட்டு விடுங்கள். கடைசியில் கொஞ்சம் புளி தண்ணீரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து கெட்டியானதும் இறக்கினால் சுடச்சுட தாளித்த சாம்பார் ரெடி! ரொம்பவும் ஈசியாக செய்யக்கூடிய இந்த சாம்பார் சூடான சாதத்திற்கு மட்டுமல்லாமல், இட்லி, தோசைக்கும் சூப்பராக இருக்கும், ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க!

- Advertisement -