அட ! இந்தக் காயில் இவ்வளவு சூப்பரான ஒரு சட்னி அரைக்கலாமா என்று நீங்களே அசந்து போக கூடிய ஒரு சூப்பரான சட்னி ரெசிபி. எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

- Advertisement -

சட்னியில் எத்தனையோ வகைகள் இருந்தாலும் முள்ளங்கியை வைத்து சட்னி செய்ய முடியும் என்பது கொஞ்சம் ஆச்சரியமாகத் தான் இருக்கும். அது மட்டுமில்லாமல் இதை வைத்து சட்னி அரைத்தால், அது நன்றாக இருக்குமா என்றெல்லாம் யோசனை இருப்பது நியாயம் தான். ஆனால் முள்ளங்கி வைத்து செய்யப்படும் இந்த சட்னியில் முள்ளங்கி வாடை கொஞ்சம் கூட இல்லாமல் சுவையாக செய்ய முடியும். அதை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

செய்முறை

இந்த சட்னி செய்வதற்கு முதலில் இரண்டு மீடியம் சைஸ் முள்ளங்கியை தோள் சீவி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அலசி தண்ணீர் இல்லாமல் வடித்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு கடாய் வைத்து அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் 1 ஸ்பூன் கடலைப் பருப்பு, 1ஸ்பூன் உளுத்தம் பருப்பு இரண்டையும் சேர்த்து வறுக்க வேண்டும். இவை இரண்டும் பாதி அளவு வறுப்பட்டவுடன், 5 காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு 5 பல் பூண்டு, 1 சின்ன துண்டு இஞ்சி இத்துடன் 1 பெரிய வெங்காயத்தையும் பொடியாக நறுக்கி சேர்த்து அதையும் வதக்கிக் கொள்ளுங்கள்.

இவையெல்லாம் ஓரளவிற்கு வதங்கியவுடன், நறுக்கி வைத்த முள்ளங்கியும் சேர்த்து 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி கொள்ளுங்கள். அதன் பிறகு 1 சின்ன தக்காளியை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியையும் சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு கடைசியாக இறக்கும் போது 1 கொத்து கறிவேப்பிலை கொஞ்சம் கொத்துமல்லி தழைகளை தூவி அடுப்பை அணைத்து விட்டு இதை ஆற விடுங்கள்.

- Advertisement -

இவை எல்லாம் ஆறிய பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து அதிக பைன் பேஸ்ட்டாக இல்லாமல் கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கும் படி அரைத்து அதை ஒரு பௌலில் மாற்றி வைத்து விடுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து ஒரு சின்ன தளிப்பு கரண்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகு சேர்த்து பொரிந்தவுடன், 2 வர மிளகாயை கிள்ளி போட்டு கொஞ்சம் கருவேப்பிலையும் சேர்த்து தாளித்து அதை அரைத்த சட்னியில் ஊற்றி கலந்து விடுங்கள். ரொம்ப ரொம்ப சுவையான முள்ளங்கி சட்னி தயார்.

இதையும் படிக்கலாமே: பர்ஃபெக்ட் ரேஷியோவில் மணக்க மணக்க ரசம் வைக்க ரசம் பொடி சுலபமாக வீட்டில் அரைப்பது எப்படி?

இந்த சட்னி தோசை, அடை , இட்லி,சப்பாத்தி என அனைத்திற்கும் நல்ல காம்பினேஷன். இதையே கொஞ்சம் கெட்டியாக அரைத்து சாதத்திற்கு  துவையலாக கூட வைத்து சாப்பிடலாம். அதுவுமே நன்றாகவே இருக்கும். நீங்களும் உங்க வீட்டில் இந்த சட்னி ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -