காரசாரமான ருசியான கொத்தமல்லி விதை சட்னியை ஒருமுறை இப்படி அரைத்துப் பாருங்களேன். இந்த ருசி நாக்கில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.

malli-chutney
- Advertisement -

இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நிறைய சட்னி வகைகள் இருக்கலாம். ஆனால் கொத்தமல்லி விதையை வைத்து ஒரே ஒரு முறை உங்க வீட்ல இந்த சட்னியை ட்ரை பண்ணி பாருங்க. இதில் சுருக்கென்ற காரமும், கொத்தமல்லி விதையின் வாசமும் அவ்வளவு அருமையாக இருக்கும். இதோடு நாம் நல்லெண்ணெய் சேர்த்து செய்வதால் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ரெசிபியும் கூட இது. 10 இட்லி, 10 தோசை சாப்பிட்டாலும் உள்ளே இறங்குவதே தெரியாது. சாப்பிட்டு முடித்த பின்பும் இதனுடைய சுவை அப்படியே நாக்கில் ஒட்டியிருக்கும் என்றால் பாருங்களேன். சரி சரி, இப்படிப்பட்ட ரெசிபியை தெரிந்து கொள்ள யாருக்குதான் ஆசை இருக்காது. வாங்க மிஸ் பண்ணாம இந்த ரெசிபியை நாமும் தெரிந்து கொள்வோம்.

kothamalli-chutney2

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து 1 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளவேண்டும். இந்த எண்ணெயில் வரமல்லி – 3 டேபிள் ஸ்பூன் சேர்த்து மல்லியை கருக விடாமல் வாசம் வரும் வரை சிவக்க சிவக்க வறுத்து கொள்ள வேண்டும். இந்த மல்லி வறுபடும் போதே பூண்டுப்பல் – 6, வரமிளகாய்  6 லிருந்து 10 காரத்திற்கு ஏற்ப, பெரிய நெல்லிக்காய் அளவு – புளி, இந்த பொருட்களை சேர்த்து வதக்கி இந்த எல்லாப் பொருட்களையும் ஒரு தட்டில் கொட்டி கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்தபடியாக அதே கடாயில் தேங்காய் துருவல் – 2 கைபிடி, கறிவேப்பிலை – 1 கொத்து சேர்த்து 2 நிமிடம் போல வறுத்து விட்டு இதையும் தட்டில் கொட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது எல்லா பொருட்களும் நன்றாக ஆறிய பின்பு மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு முதலில் தண்ணீர் எதுவும் ஊற்றாமல் எல்லா பொருட்களையும் பொடி செய்து விட்டு, அதன் பின்பு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி சட்னி போல விழுதாக இந்த கலவையை அரைத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். ரொம்பவும் தண்ணீர் ஊற்றி அரைக்க வேண்டாம்.

மீண்டும் அடுப்பில் ஒரு கடாயை வைத்து தாராளமாக 5 டேபிள்ஸ்பூன் அளவு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு – 1 ஸ்பூன், கறிவேப்பிலை – 2 கொத்து, சேர்த்து 1/4 – சிட்டிகை பெருங்காயம் போட்டு, தாளித்து மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் மல்லி சட்னியை, கடாயில் இருக்கும் நல்லெண்ணெயோடு சேர்த்து கலந்து விட்டு, சுண்ட சுண்ட சட்னியின் மேலே எண்ணெய் மிதக்கும் வரை 5 லிருந்து 8 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

சட்னி நன்றாக கொதித்து வந்ததும் அடுப்பை அணைத்து விடுங்கள். அவ்வளவு தான். இட்லி தோசைக்கு காரசாரமான இந்த சட்னியை பரிமாறி பாருங்கள். அருமையான சுவை கிடைக்கும். இந்த சட்னியை இரண்டு நாட்கள் வைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம். சீக்கிரத்தில் கெட்டுப் போகாது.

malli-chutney1

இந்த சட்னிக்கு காரம் கொஞ்சம் தூக்கலாக இருக்க வேண்டும். காரத்திற்கு ஏற்ப புளியையும் கொஞ்சம் தூக்கலாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த சட்னியில் சுவையை சுவைத்து பார்த்தால் மட்டுமே அனுபவித்து சொல்ல முடியும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -