வெங்காய மசாலா கிரேவி செய்முறை

onion masala gravy
- Advertisement -

டிபன் ஐட்டங்களை நம் வீட்டில் நாம் செய்யும் பொழுது அதற்கு ஏற்றார் போல் ஒரு சைடு டிஷ் செய்ய வேண்டும். அப்படி நாம் இட்லி தோசைக்கு பல வகைகளில் சைடிஷ்களை செய்யலாம். ஆனால் சப்பாத்தி பூரி என்று வந்ததும் நாம் அதிக அளவில் முயற்சி செய்வது உருளைக்கிழங்கு மசாலா, பன்னீர் கிரேவி, தக்காளி கிரேவி போன்றவைதான். இதற்கு சற்று மாறாக அதேசமயம் எளிதில் செய்யக்கூடிய ஒரு வெங்காய மசாலா கிரேவியை பற்றி தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

மற்ற சைடு டிஷ்களை விட மிகவும் எளிதில் விரைவிலேயே செய்யக்கூடிய அதிக பொருட்கள் தேவைப்படாத ஒரு சைடு டிஷ் ஆக தான் இந்த சைடு டிஷ் திகழ்கிறது. சைடிஷ் செய்வதற்கு நேரம் இல்லை அல்லது அதற்கு தேவையான பொருட்கள் இல்லை என்று நினைக்கும் பொழுது வெறும் வெங்காயத்தை மட்டுமே வைத்து வேறு எந்த பொருட்களையும் அதிக அளவில் சேர்க்காமல் விரைவிலேயே செய்து முடிக்க கூடிய ஒரு அற்புதமான சைடு டிஷ்காக தான் இது திகழ்கிறது. சரி, இப்பொழுது வெங்காய மசாலா கிரேவியை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

  • பெரிய வெங்காயம் – 3
  • தக்காளி – 1
  • பச்சை மிளகாய் – 3
  • பூண்டு – 4 பல்
  • இஞ்சி – சிறிய துண்டு
  • கருவேப்பிலை – ஒரு இனுக்கு
  • எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
  • கடுகு – 1/2 டீஸ்பூன்
  • உளுந்து – 1/2 டீஸ்பூன்
  • கடலைப்பருப்பு – 1 1/2 டீஸ்பூன்
  • பெருங்காயம் – 1/4 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
  • சாம்பார் தூள் – 1/2 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு
  • கடலை மாவு – 1/2 டீஸ்பூன்

செய்முறை

முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளுங்கள். அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, கடலை பருப்பு இவற்றை சேர்க்க வேண்டும். உளுந்தும், கடலை பருப்பும் நன்றாக சிவந்த பிறகு இதில் பெருங்காயத்தூளை சேர்த்து உடனே வெங்காயத்தையும் சேர்த்து வதக்க வேண்டும்.

வெங்காயம் லேசாக வதங்கியதும் அதில் நீளவாக்கில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் தக்காளி இரண்டையும் சேர்க்க வேண்டும். இஞ்சியையும், பூண்டையும் நன்றாக இடித்து அதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். கருவேப்பிலை ஒரு இனுக்கையும் சேர்த்துக்கொண்டு நன்றாக வதக்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு இதில் மஞ்சள் தூள், சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு இவற்றோடு அரை டம்ளர் அளவு மட்டும் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

- Advertisement -

மற்றொரு அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் அரை டீஸ்பூன் அளவிற்கு கடலை மாவை சேர்த்து வாசம் வரும் வரை குறைந்த தீயில் வைத்து வறுத்துக்கொள்ள வேண்டும். வறுத்த இந்த மாவில் முக்கால் டம்ளர் அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டியில்லாமல் கரைத்து வெந்து கொண்டிருக்கும் வெங்காய கிரேவியில் ஊற்றி விட வேண்டும். பிறகு இதை நன்றாக ஒரு கொதி வரும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும்.

கிரேவி கெட்டியாக இருக்கிறது தண்ணியாக வேண்டும் என்னும் பட்சத்தில் தேவையான அளவு தண்ணீரை கொதிக்க வைத்து இந்த கிரேவியுடன் சேர்த்துக் கொள்ளலாம். வீட்டில் அடிப்படையாக இருக்கக் கூடிய பொருட்களை மட்டுமே வைத்து மிகவும் எளிமையான அதே சமயத்தில் விரைவில் செய்யக்கூடிய ஒரு அற்புதமான சைடிஷ் தயாராகிவிட்டது.

இதையும் படிக்கலாமே: கமகமக்கும் பச்சை பயறு கிரேவி

இந்த வெங்காய மசாலா கிரேவி, வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் செய்யக்கூடிய கிரேவியாக திகழ்கிறது. நாமும் இதை முயற்சி செய்து நம்முடைய நேரத்தை மிச்சப் படுத்திக் கொள்வோம்.

- Advertisement -