வெங்காயத்துடன் பொட்டுக்கடலை சேர்த்து இப்படி ஒருமுறை சட்னி வச்சு பாருங்க வேற லெவல் டேஸ்டா இருக்கும்!

onion-pottukadalai-chutney
- Advertisement -

விதவிதமான சட்னி வகைகளில் இந்த பொட்டுக்கடலை சட்னி ரொம்பவே வித்தியாசமானதாக இருக்கப் போகின்றது. காரத்திற்கு மிளகாய்க்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்த்து செய்யப்படும் இந்த சட்னிக்கு பெரிய வெங்காயத்தை விட, சின்ன வெங்காயம் சேர்த்தால் சுவை கூடுதலாக இருக்கும். அதிக நேரம், அதிக பொருட்கள் எதுவும் தேவைப்படாத சுவையான வெங்காய பொட்டுகடலை சட்னி எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

பொட்டுக்கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம் – 15, மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு பற்கள் – 3, தக்காளி – 2, பொட்டுக்கடலை – கால் கப், உப்பு – தேவையான அளவு, தாளிக்க: கடுகு – ஒரு டீஸ்பூன், உளுந்து – அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

பொட்டுகடலை சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு கப் அளவிற்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். சின்ன வெங்காயம் இல்லை என்றால் இரண்டு பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி நாலைந்து துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் பூண்டு பற்களை தோலுரித்து வைத்துக் கொள்ளுங்கள். தக்காளியை சுத்தம் செய்து நான்கு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் ஊற்றி நன்கு காய விடுங்கள்.

எண்ணெய் நன்கு காய்ந்ததும் அதில் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். சின்ன வெங்காயம் வதக்கும் போதே பூண்டு பற்களை சேர்த்து நன்கு வதக்குங்கள். இதை சுருள வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி துண்டுகள் மசிந்ததும் ஒரு டீஸ்பூன் வெறும் மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள். பச்சை மிளகாய்க்கு பதிலாக மிளகாய்தூள் சேர்ப்பதால் இதன் சுவை சற்று வித்தியாசமாக இருக்கும்.

- Advertisement -

மிளகாய் தூள் பச்சை வாசம் போக வதக்கியதும் அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆற வைத்துள்ள இந்த பொருட்களை சேர்த்து அதனுடன் கால் கப் பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். கெட்டியாக அரைத்து எடுத்த பின்பு மிக்ஸி ஜாரை கழுவிய தண்ணீரை மட்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதற்கு அதிக தண்ணீர் சேர்த்தால் சுவை நன்றாக இருக்காது.

பின்னர் ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு நன்கு பொரிந்து வந்ததும், உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும். உளுந்து வறுபட்டதும் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை உருவி தாளித்து சட்னியில் கொட்டி இறக்கினால் இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ள அவ்வளவு அருமையாக இருக்கும். ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த பொட்டுக்கடலை வெங்காய சட்னி இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -