தேங்காய் சேர்க்காமல் ‘வெங்காய பொட்டுக்கடலை சட்னி’ இது மாதிரி செஞ்சு பாருங்க இட்லி, தோசைக்கெல்லாம் செமையாக இருக்கும்!

onion-pottukadalai-chutney
- Advertisement -

பொதுவாக பொட்டுக்கடலை சேர்த்து செய்யும் பொழுது கண்டிப்பாக தேங்காய் சேர்ப்பது வழக்கம். ஆனால் தேங்காய் எதுவும் சேர்க்காமல் வெங்காயம் சேர்த்து இது போல சட்னி அரைத்து சாப்பிடும் போது, அதனுடைய சுவை வித்தியாசமாக இருக்கும். இட்லி, தோசை, உப்புமா, கிச்சடி என்று எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ள சூப்பராக இருக்கக் கூடிய இந்த ‘வெங்காய பொட்டுக்கடலை சட்னி’ எப்படி எளிதாக செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

வெங்காய பொட்டு கடலை சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
சமையல் எண்ணெய் – இரண்டு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் – ஆறு, பெரிய வெங்காயம் – 2, பொட்டுக்கடலை – 100 கிராம், தாளிக்க: கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், வரமிளகாய் – ஒன்று, கருவேப்பிலை – ஒரு கொத்து, பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

வெங்காய பொட்டுக்கடலை சட்னி செய்முறை விளக்கம்:
வெங்காய பொட்டுக்கடலை சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ரெண்டு மீடியம் சைஸ் பெரிய வெங்காயத்தை தோல் உரித்து தேவையான அளவுகளில் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ரெண்டு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை மீடியம் ஃபிளேமில் வைத்துக் கொள்ளுங்கள். ஆறு பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து நன்கு வறுக்க வேண்டும்.

மிளகாயின் நிறம் வெள்ளையாக மாற வேண்டும். அதுவரை வறுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு தோல் உரித்து நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்குங்கள். பிறகு அடுப்பை அணைத்து ஆறவிட்டு விடுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இதனுடன் 100 கிராம் அளவிற்கு பொட்டுக்கடலை சேர்த்துக் கொள்ளுங்கள். தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைஸ் ஆக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பின்னர் இதற்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும். அதற்கு ஒரு தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிந்து வந்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். உளுந்து வறுபட்டவுடன் ஒரு கொத்து கறிவேப்பிலையை கழுவி உருவி சேர்த்து தாளித்துக் கொள்ளுங்கள். பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் ஒரு வரமிளகாயை காம்பு நீக்கி கிள்ளி சேருங்கள். பின் இதை சட்னியுடன் கொட்டி ஒரு முறை நன்கு கலந்து கொள்ளுங்கள்.

அவ்வளவுதான் தேங்காய் எதுவும் சேர்க்காத இந்த வெங்காய பொட்டுக்கடலை சட்னி ரொம்பவே டேஸ்டாக இருக்கும். இந்த சட்னி இட்லி, தோசை, உப்புமா போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடும் போது அருமையாக இருக்கும். அது மட்டும் அல்லாமல் ஈவினிங் ஸ்நாக்ஸ் வகைகளாக பஜ்ஜி, போண்டா, வடை போன்றவற்றுடனும் தொட்டுக் கொண்டு சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும். நீங்களும் இதே மாதிரி ட்ரை பண்ணி அசத்துங்க!

- Advertisement -