பாவக்காய் கசக்குமுன்னு தவிர்ப்பீங்களா? இப்படி வேர்க்கடலை சேர்த்து பாவக்காய் கடலைப் பொடி செஞ்சு சாதம் கூட பெசஞ்சி சாப்பிட்டு பாருங்க, இனி பாவக்காய் வேணாமுன்னு சொல்லவே மாட்டீங்க!

pavakkai-podi0
- Advertisement -

பாவக்காய் என்றாலே அனைவருக்கும் ஒருவித அலர்ஜி உண்டு. அதன் கசப்புத் தன்மை பலருக்கும் பிடிக்காத காரணத்தினால் அதனை பெரும்பாலும் தவிர்ப்பது உண்டு. ஆனால் அதில் இருக்கும் கசப்புத் தன்மையும் நம் உடலுக்குத் தேவையான ஒரு சத்து தான். அறுசுவையில் ஒன்றாக இருக்கும் கசப்பை விட்டு விட்டு உணவை சாப்பிடுவதால் தான் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகிறோம். கசப்பு இல்லாமல் இப்படி ஒரு முறை பாவக்காய் கடலைப் பொடி செய்து சாப்பிட்டு பாருங்க! இனி பாவகாய் வேண்டாம் என்று சொல்லவே மாட்டீங்க. பாகற்காய் கடலை பொடி செய்வது எப்படி? என்பதை இந்த பதிவின் மூலம் கற்று கொள்வோம்.

pavakkai

பாவக்காய் கடலை பொடி செய்ய தேவையான பொருட்கள்:
பாவக்காய் – 300 கிராம், உளுந்து – ஒன்றரை டேபிள் ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மல்லிவிதை – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒன்றரை டேபிள்ஸ்பூன், நல்லெண்ணெய் – 50ml, வேர்க்கடலை – அரை கப், பூண்டு பல் – 20, கறிவேப்பிலை 3 கொத்து, மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவுக்கு.

- Advertisement -

பாவக்காய் கடலை பொடி செய்முறை விளக்கம்:
முதலில் பாகற்காயை சுத்தம் செய்து வட்ட வட்டமாக மெல்லியதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடிக்கு தேவையான அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு முதலில் உளுந்து மற்றும் கடலை பருப்பை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். பின்னர் மல்லி விதையை சேர்த்து வதக்க வேண்டும்.

ஒரு டீஸ்பூன் சீரகம் சேர்த்து வதக்கி, இறுதியாக மிளகாய்த்தூள் சேர்த்து அடுப்பை குறைவாக வைத்துக் கொண்டு லேசாக வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்து விட்டு இவற்றை ஆற வைத்து ஒரு மிக்ஸி ஜாரை கழுவி அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் வேறொரு வாணலியை வைத்து அதில் கால் கப் அளவிற்கு நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் சேர்த்து காய விடலாம்.

- Advertisement -

எண்ணெய் காய்ந்ததும் அதில் பூண்டு பற்களை தோலுடன் சேர்த்து முறுகலாக வதக்கி எடுக்க வேண்டும். பின்னர் வேர்கடலையை தோலுடன் சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுக்க வேண்டும். அதிலேயே கருவேப்பிலையை 3 கொத்து அளவிற்கு சேர்த்து மொறுமொறுவென வறுத்து எடுக்க வேண்டும். அதே எண்ணெயில் பாகற்காய் துண்டுகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். பாகற்காய் வதங்க சிறிது நேரம் எடுக்கும். எட்டிலிருந்து பத்து நிமிடத்திற்குள் நன்கு பொரிந்து வரும். பின்னர் அடுப்பை அணைத்து எண்ணெய் வடிகட்டி பாவக்காய்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

pavakkai-podi2

இவைகள் நன்கு ஆறியதும் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் ஒன்றாக போட்டு மஞ்சள் தூள், பெருங்காய தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்து எடுக்க வேண்டும். வறுத்த வேர்க்கடலை மற்றும் வறுத்த கறிவேப்பிலையை கொஞ்சமாக தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசியாக மேலே தூவி பரிமாற சூப்பராக இருக்கும். அப்படி செய்து கொடுத்தால் அதன் கசப்புத்தன்மை அவ்வளவாக தெரியாது. மேலும் சுவை அதிகமாக இருக்கும் என்பதால் சாதத்துடன் பிசைந்து சாப்பிட அவ்வளவு அலாதியான ருசியைக் கொடுக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -