எப்பொழுதும் செய்யும் சட்னி செய்யாமல் இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இந்த சுவையான பீர்க்கங்காய் கடையலை ஒரு முறை செய்து பாருங்கள்

peerkangai
- Advertisement -

ஒவ்வொரு நாளும் உணவுடன் ஏதேனும் ஒரு காய்கறிகளை சேர்த்துக் கொள்வது மிகவும் நன்மை தரக்கூடிய ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் சத்தான உணவுகள் என்பது எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை. அந்த அளவிற்கு வருகின்ற காய்கறிகள், பழங்கள் அனைத்திலும் வேதியல் பொருட்கள் அதிகமாகவே சேர்க்கப்படுகின்றன. இருப்பினும் நமது ஆரோக்கியத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு ஏதாவது ஒரு காய்கறி பொரியலை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை சொல்கின்றனர். அவ்வாறு காய்கறிகளை குழந்தைகள் விரும்பும் வகையில் காலை, மாலை உணவு சாப்பிடும் பொழுது தொட்டுக்கொண்டு சாப்பிட சுவையான கிரேவி பதத்தில் செய்து கொடுத்தால் அதில் என்ன காய்கறி இருக்கிறது என்று ஆராயாமல் குழந்தைகள் விருப்பமாக சாப்பிட்டு விடுவார்கள். அப்படி செய்யக் கூடிய ஒரு பீர்க்கங்காய் கடையலை எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

vegetable1

தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – அரை கிலோ, பெரிய வெங்காயம் – 2, பெரிய தக்காளி – 2, காய்ந்த மிளகாய் – 2, பச்சை மிளகாய் – 2, பூண்டு – 3 பல், புளி – நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், எண்ணெய் – 3 ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் பீர்க்கங்காயின் தோலை சீவி, பொடியாக நறுக்கிக் கொண்டு, தண்ணீரில் அலசி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊறவைத்து, கரைத்து, புளிக்கரைசல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

peerkangai

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைத்து, 3 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு மூன்று பல் பூண்டை லேசாக இடித்து சேர்க்க வேண்டும். பிறகு அதனுடன் இரண்டு காய்ந்த மிளகாயை உடைத்து சேர்க்க வேண்டும். இவை நன்றாக வதங்கியதும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு நறுக்கி வைத்த தக்காளியை சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள பீர்க்கங்காய் சேர்த்து, அதனுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி விட்டு, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட வேண்டும்.

peerkangai

பின்னர் புளிக்கரைசலை இவற்றுடன் சேர்த்து நன்றாக கொதிக்க விடவேண்டும். இவை அனைத்தும் நன்றாக கொதித்ததும் மத்து வைத்து இதனை மசித்து விட வேண்டும். இவை அனைத்தையும் நன்றாக மசித்தபிறகு குழம்பு கெட்டியாக இருந்ததென்றால் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி கொத்தமல்லி தழை தூவி குழம்பை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

- Advertisement -