அருமையான ஆரோக்கியத்தை கொடுக்கும் பீர்க்கங்காய் சட்னி எப்படி செய்வது? இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள இப்படியும் சட்னி செய்யலாம்.

chutney
- Advertisement -

நீர்ச்சத்து அதிகம் நிறைந்த இந்த பீர்க்கங்காயை வெயில் காலத்தில் நம்முடைய உணவோடு வாரத்தில் இரண்டு நாட்கள் ஆவது சேர்த்துக் கொள்ள வேண்டும். பீர்க்கங்காய் கூட்டு, சாம்பார், பொரியல் என்று செய்து கொடுத்தால் சில குழந்தைகள் விரும்பி சாப்பிட மாட்டார்கள். ஆனால் இப்படி சட்னி அரைத்து இட்லி தோசை பணியாரம் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள கொடுத்தால், தெரியாமல் வயிற்றுக்குள் இறங்கிவிடும். சுவை நிறைந்த ஆரோக்கியம் நிறைந்த பீர்க்கங்காய் சட்னி எப்படி செய்வது தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

ஒரு மீடியம் சைஸில் இருக்கும் பீர்க்கங்காயை தோல் சீவி ஓரளவுக்கு சிறிய துண்டுகளாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள். பீர்க்கங்காய் – 1 கப் அளவு, இருந்தால் அதை 1 – கப் அளவு சின்ன வெங்காயத்தை தோல் உரித்து இரண்டு துண்டுகளாக வெட்டி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். (சின்ன வெங்காயம் இல்லை என்றால் பெரிய வெங்காயம் நறுக்கியது 1 கப் எடுத்துக் கொள்ளலாம்.)

- Advertisement -

அடுப்பில் ஒரு கடாயை வைத்து 2 டேபிள் ஸ்பூன் அளவு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் இல்லை என்றால் கடலெண்ணெய் பயன்படுத்தி செய்வது இந்த சட்னிக்கு அதிக சுவையைக் கொடுக்கும். எண்ணெய் காய்ந்ததும் வரமிளகாய் – 4, எடுத்து வைத்திருக்கும் சின்ன வெங்காயத்தை போட்டு, நன்றாக வதக்குங்கள். வெங்காயம் இரண்டு நிமிடம் போல வதங்கி வந்ததும் பெரிய சைஸில் இருக்கும் தக்காளிப்பழம் நறுக்கியது – 1 சேர்த்து வதக்க வேண்டும்.

தக்காளி நன்றாக வெந்து மசிந்து வந்ததும் நறுக்கி வைத்திருக்கும் பீர்க்கங்காயை, எண்ணெயில் போட்டு 3 நிமிடம் போல வதக்கி விடுங்கள். பீர்க்கங்காய் நீர்க்காய் என்பதால் சீக்கிரம் எண்ணெயில் வதங்கி வெந்து கிடைத்து விடும். சட்னிக்கு தேவையான அளவு உப்பு போட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அதன் பின்பு இதில் ஓரளவுக்கு பொடியாக நறுக்கிய 1 கைப்பிடி அளவு கொத்தமல்லி தழையை போட்டு விடுங்கள். அந்த சூட்டிலேயே கொத்தமல்லி தழை லேசாக வதங்கினால் போதும். இந்த எல்லா பொருட்களும் நன்றாக ஆரிய பின்பு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்றாமல் அரைத்தாலே சூப்பரான சட்னி நமக்கு தயாராகி இருக்கும்.

இந்த சட்னியை வேறொரு பாத்திரத்திற்கு மாற்றி தேவைப்பட்டால் எண்ணெயில் கடுகு, கருவேப்பிலை, பெருங்காயம், தாளித்து போட்டு இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள பரிமாறுங்கள். அவ்வளவு சுவை. இது பீர்த்தங்காயில் செய்த சட்னி என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. இந்த பீர்க்கங்காய் சட்னியில் நீர்ச்சத்து மட்டும் கிடையாது. உடல் எடையை குறைப்பதற்கும், கண்பார்வையை சரி செய்யவும் தேவையான சத்து இதில் அடங்கி இருக்கிறது. மிஸ் பண்ணாம இந்த ஆரோக்கியமான சட்னியை வாரத்துல 2 நாளாவது செஞ்சு சாப்பிடுங்க.

- Advertisement -