மணக்க மணக்க தேங்காய் சேர்க்காமல் உருளைக்கிழங்கு கிரேவி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள். சுவையில் அசைவ க்ரேவி தோற்றுப்போகும்.

gravy3
- Advertisement -

உருளைக்கிழங்கை வைத்து தேங்காய் சேர்க்காமல் சூப்பரான ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிரேவி எப்படி வைப்பது. இப்படி கிரேவி வைத்தால் இதனுடைய வாசமும் சுவையும் அசைவ கிரேவி போலவே இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா இவைகளுக்கு இதைத் தொட்டு சாப்பிடலாம். உருளைக்கிழங்கு அல்லாமல் காலிஃப்ளவர் சேர்த்து இந்த க்ரேவி வைக்கலாம். அப்படி இல்லை என்றால் மஷ்ரூம் சேர்த்து இப்படி கிரேவி செய்தாலும் அட்டகாசமாக இருக்கும். வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த கிரேவி ரெசிபி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்வோம்.

முதலில் 2 பெரிய உருளைக்கிழங்குகளை லேசாக தோல் சீவி கொஞ்சம் பெரிய துண்டுகளாக க்யூப் வடிவத்தில் வெட்டி ஒரு கடாயில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி ஒரு மூடி போட்டு 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். உருளைக்கிழங்கு 90% வெந்தால் போதும் இந்த உருளைக்கிழங்கை அப்படியே எடுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். மீடியம் சைஸ் வெங்காயம் நறுக்கியது – 1, இஞ்சி தோல் சீவியது – 1 இன்ச், பூண்டு – 10 பல், ஏலக்காய் – 1, பட்டை – 1 சிறிய துண்டு, முந்திரிப்பருப்பு – 8, தக்காளி பழம் பழுத்தது நறுக்கியது – 1, புளிக்காத தயிர் – 2 ஸ்பூன், சர்க்கரை – 1/2 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அதன் பின்பு அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன் ஊற்றி, வெண்ணெய் – 1 ஸ்பூன் ஊற்றி, பட்டை – 1 துண்டு, கிராம்பு – 2, பிரியாணி இலை – 1, சீரகம் – 1/2 ஸ்பூன், சோம்பு – 1/2 ஸ்பூன், சேர்த்து இந்த எல்லா பொருட்களையும் பொன்னிறமாக வறுக்க வேண்டும். அதன் பின்பு 1 ஸ்பூன் மிளகாய் தூளை இந்த எண்ணெயில் போட்டு 30 செகண்ட்ஸ் வரை வதக்கி, மிக்ஸியில் அரைத்து வைத்திருக்கும் கிரேவியை கடாயில் இருக்கும் மிளகாய்தூள் எண்ணெயில் ஊற்ற வேண்டும். ஊற்றிய உடனே இந்த கிரேவி திக்காக தொடங்கும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு அடிபிடிக்காமல் ஒரு நிமிடம் போல நன்றாக கலந்து விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். கிரேவி தளதளவென கொதித்து வரும்போது வேக வைத்திருக்கும் உருளைக்கிழங்கு, கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மல்லித் தூள் – 1/2 ஸ்பூன், தேவையான அளவு உப்பு போட்டு, நன்றாக கலந்து விட்டு, கிரேவியை மூடி 5 லிருந்து 7 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அடுப்பு சிம்மில் இருக்க வேண்டும். கிரேவி அடிப்பிடிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். இடையிடையே திறந்து கிரேவியை கலந்து கொள்ள வேண்டும்.

அவ்வளவு தான். இந்த கிரேவி கொதிக்கும் போதே கமகமன்னு வாசம் வீசும். மேலே கொத்தமல்லி தழையை தூவி பரிமாறுங்கள். இதன் வாசத்திற்கு இரண்டு இட்லி தோசை சப்பாத்தி சேர்த்து உள்ளே இறங்கும். இப்படி கிரேவி செய்தால் இது ரெஸ்டாரண்டில் செய்த கிரேவி போலவே இருக்கும். உங்களுக்கு இந்த ரெசிபி பிடிச்சிருந்தா மிஸ் பண்ணாம உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -