புடலங்காய் கூட்டு சின்ன வெங்காயம் சேர்த்து இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க ருசி செமையா இருக்கும். குக்கரில் சுலபமாக புடலங்காய் கூட்டு சுவையாக எப்படி செய்யலாம்?

pudalangai-koottu
- Advertisement -

புடலங்காய் கூட்டு பொதுவாக பாசிப் பருப்பு அல்லது கடலைப் பருப்பு சேர்த்து செய்வார்கள். இரண்டு பருப்புகளையும் சேர்த்து செய்வதும் உண்டு. கடலைப்பருப்பை மட்டும் வைத்து ரொம்பவே சுலபமாக செய்யக்கூடிய இந்த புடலங்காய் கூட்டு வத்த குழம்பு, காரக்குழம்பு போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள சூப்பரான காம்பினேஷன்! இந்த புடலங்காய் கூட்டு சின்ன வெங்காயம் சேர்த்து இந்த முறையில் ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க, இன்னும் சூப்பராக இருக்கும். புடலங்காய் கூட்டு சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை இனி பார்ப்போம்.

புடலங்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்:
கடலைப்பருப்பு – 100g, புடலங்காய் -2, மஞ்சள் தூள் -கால் ஸ்பூன், பெருங்காயத் தூள் -கால் ஸ்பூன், சின்ன வெங்காயம் – 10, பச்சை மிளகாய் – 3, துருவிய தேங்காய் -அரை கப், சோம்பு – அரை ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுந்து – ஒரு ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, வர மிளகாய் – 2.

- Advertisement -

புடலங்காய் கூட்டு செய்முறை விளக்கம்:
முதலில் 100 கிராம் அளவிற்கு கடலைப்பருப்பை நன்கு களைந்து சுத்தம் செய்து ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஊற வைத்த கடலைப்பருப்பை ஒரு குக்கரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் புடலங்காயை மேல் தோல் லேசாக சீவி எடுத்து விட்டு இரண்டாக வெட்டி பின்னர் உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி சதைப் பற்றை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். மஞ்சள் தூள் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு இந்தப் பொருட்கள் எல்லாம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி குக்கர் மூடியை மூடி 4 விசில் விட்டு எடுங்கள். தண்ணீர் அதற்கு மேல் சேர்க்கக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய தேங்காய் துண்டுகள் அல்லது துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 10 சின்ன வெங்காயத்தை தோல் உரித்து அப்படியே முழுதாக சேருங்கள். காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். நல்ல வாசத்திற்கு சோம்பு மற்றும் சீரகம் சேர்த்து கொள்ளுங்கள். பின்னர் மிக்சியை இயக்கி நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். முக்கால்வாசி அரைத்தால் போதும் ரொம்பவும் நைஸாக அரைக்க வேண்டாம்.

- Advertisement -

குக்கரில் பிரஷர் முழுவதுமாக வெளியேறிய பின்பு மூடியைத் திறந்து அதில் நீங்கள் அரைத்த இந்த பொருட்களையும் சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க விடுங்கள். வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பச்சை வாசம் போக 5 நிமிடம் அளவிற்கு நன்கு கொதிக்க விடுங்கள். அதற்குள் ஒரு சிறு தாளிப்பை தயார் செய்து கொள்ளலாம். அடுப்பில் தாளிப்பு கரண்டி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள்.

அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு நன்கு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். ஒரு இணுக்கு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, இரண்டு வர மிளகாய்களை காம்பு நீக்கி லேசாக வறுத்து அடுப்பை அணைத்து புடலங்காய் கூட்டுடன் சேர்த்து கலந்து விடுங்கள். அவ்வளவுதாங்க ரொம்ப ரொம்ப சுலபமாக சூப்பரான இந்த சின்ன வெங்காயம் சேர்த்த புடலங்காய் கூட்டு அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்கள்.

- Advertisement -