தேங்காய் சேர்க்காமல் புதினா சட்னியை வெங்காயம் சேர்த்து இப்படி ஒருமுறை அரைத்து பாருங்க! செம டேஸ்டா காரசாரமா இருக்கும்!

- Advertisement -

புதினா சட்னி தேங்காய் சேர்த்து எப்பொழுதும் அரைப்பது வழக்கம். ஆனால் தேங்காய் சேர்க்காமல் வெங்காயம், தக்காளி வைத்து இப்படி ஒருமுறை சட்னி அரைச்சு பாருங்க! ரொம்ப ரொம்ப சுவையா இருக்கும். இட்லி, தோசை, சப்பாத்தி மட்டுமல்லாமல் சாதத்தில் கூட பிசைந்து சாப்பிடலாம். நாவில் ஜலம் ஊறச் செய்யும் இந்த புதினா சட்னி ரொம்பவே வித்தியாசமான சுவையில் இருக்கப் போகிறது. அதை எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

puthina

புதினா சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
வர மிளகாய் – 5, உளுந்து – 2 டீஸ்பூன், பூண்டுப் பல் – 3, பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 1, புதினா இலை – ரெண்டு கைப்பிடி, புளி – சிறு நெல்லிக்காய் அளவிற்கு, உப்பு – தேவையான அளவு, கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், பெருங்காயத் தூள் – 2 சிட்டிகை, கறிவேப்பிலை – ஒரு கொத்து.

- Advertisement -

புதினா சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் புதினா இலைகளை ஒவ்வொரு கிளையாக எடுத்து தட்டிவிட்டு பச்சையாக இருக்கும் புதினா இலைகளை மட்டும் ஆய்ந்து எடுத்துக் கொள்ளுங்கள். மஞ்சளாக இருக்கும் இலைகளை பயன்படுத்தக் கூடாது. புதினா இலைகளை தட்டுவதால் அதில் ஒட்டியிருக்கும் சிறுசிறு பூச்சிகள் நீங்கிவிடும். பின்னர் நன்கு தண்ணீரில் பலமுறை அலசி சுத்தம் செய்து தண்ணீரை உதறி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

puthina-thuvaiyal1

அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு கொஞ்சமாக எண்ணெய் ஊற்றி காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் அதில் வர மிளகாய் சேர்த்து லேசாக வதக்க வேண்டும். மிளகாய் கரிந்து விடக்கூடாது. பின்னர் அதனுடன் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும். உளுந்து நன்கு வதங்கியதும் பூண்டு பற்கள் சேர்க்கவும். பூண்டின் பச்சை வாசனை போக வதங்கியதும் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

வெங்காயம் கண்ணாடி பதம் வதங்கி வரும் சமயத்தில் பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து வதக்குங்கள். தக்காளி ஒன்றுக்கு பாதியாக வதங்கி வரும் சமயத்தில் புதினா இலைகளை சேர்த்து வதக்க வேண்டும். இலைகள் சுருள வதங்கியதும் சிறு நெல்லிக்காய் அளவிற்கு கொஞ்சமாக புளி சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் இந்த சட்னிக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.

puthina-chutney0

இப்போது அடுப்பை அணைத்து ஆற விடுங்கள். ஆறியதும் மிக்ஸியில் சேர்த்து கரகரவென அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து கொஞ்சமாக எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் பெருங்காயத்தூள், உளுந்து சேர்த்து கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னியில் கொட்டுங்கள். தேங்காய் சேர்த்து செய்வதை விட இப்படி ஒருமுறை செய்து பாருங்கள், அட்டகாசமான சுவையில் இருக்கும். நீங்களும் இதே முறையில் செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்துங்கள்.

- Advertisement -