உளுந்து கூட சேர்க்காமல் ரேஷன் புழுங்கல் அரிசியில் ஹோட்டல் ஸ்டைலில் அதே மொறுமொறு தோசை எப்படி சுடுவது?

rice-morumoru-dosa
- Advertisement -

பொதுவாக இட்லி, தோசைக்கு மாவு அரைக்கும் பொழுது உளுந்து சேர்த்து அரைப்பது தான் வழக்கம். ஆனால் கொஞ்சம் கூட உளுந்து சேர்க்காமல் வெறும் அரிசியை கொண்டு எப்படி தோசை மாவு தயாரிப்பது? அதுவும் ரேஷனில் கொடுக்கும் அரிசியை கொண்டு மொறுமொறு தோசை சூப்பராக எப்படி செய்யலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் இனி பார்க்க இருக்கிறோம்.

ஹோட்டலில் கொடுக்கும் தோசை நல்ல பொன்னிறமாக பார்ப்பதற்கே சூப்பராக மொறு மொறுன்னு இருக்கும். அதே போல நாம் வீட்டில் செய்ய நினைத்தால் நமக்கு அந்த அளவிற்கு கிரிஸ்ப்பினஸ் வராது. இதற்கு அவர்கள் பயன்படுத்தும் அடுப்படி கல்லும் ஒரு காரணமாக இருக்கலாம், ஆனால் சாதாரண ரேஷன் அரிசியில் அது போல மொறுமொறுன்னு சூப்பரான பொன்னிற தோசை எப்படி தயாரிக்க முடியும்? ரேஷனில் கொடுக்கும் அரிசியில் புழுங்கல் அரிசியை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

புழுங்கல் அரிசி சில சமயங்களில் நல்ல மஞ்சள் நிறமாகவும், சில சமயங்களில் வெள்ளையாகவும் இருக்கும். அரிசி எப்படி இருந்தாலும் பயன்படுத்தலாம். புழுங்கல் அரிசியை முதலில் பூச்சி, தூசி, தும்புகள் இல்லாமல் முறத்தால் புடைத்து சுத்தம் செய்து கொள்ளுங்கள். என்னதான் அரிசியை சுத்தம் செய்தாலும் அதிலிருந்து ஒரு விதமான வாடை வரக்கூடும். இது பலருக்கு பிடிக்காமல் போகலாம் எனவே இந்த வாடை மற்றும் அழுக்குகளை நீக்குவதற்கு ஒரு ஸ்பூன் கல் உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு அழுத்தம் கொடுத்து தேய்த்து கொடுங்கள்.

எல்லா இடங்களிலும் இது போல நன்கு தேய்த்து கொடுத்த பிறகு, மூன்றில் இருந்து நான்கு முறை தண்ணீர் ஊற்றி தேய்த்து தேய்த்து நன்கு கழுவி ஊற்றுங்கள். இதனால் அரிசி நல்ல நிறமாக, வாசனையும் நன்றாக இருக்கும். பிறகு சுத்தமான தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். இது ரேஷன் அரிசி என்பதால் ஆறு மணி நேரம் வரை தாராளமாக ஊற வைக்க வேண்டும். உளுந்துக்கு பதிலாக ஒரு கப் ரேஷன் அரிசிக்கு, ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை நன்கு கழுவி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி மூடி போட்டு ஊற வையுங்கள். வெந்தயம் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் ஊற்றினால் போதும், ரொம்பவும் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் இல்லை.

- Advertisement -

ஆறு மணி நேரத்திற்கு பிறகு ஒரு பெரிய மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு இந்த தண்ணீருடன் வெந்தயத்தை சேர்த்து நன்கு பைன் பேஸ்டாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நீங்கள் ஊற வைத்துள்ள அரிசியையும் தண்ணீரை வடிகட்டி விட்டு சேர்த்து அரைக்க வேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம். ஓரளவுக்கு தோசை மாவு பதத்திற்கு நன்கு அரைத்த பிறகு எடுத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள். கொஞ்சம் போல் தண்ணீர் விட்டு மிக்ஸி ஜாரை கழுவி அந்த தண்ணீரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த மாவுக்கு தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து எட்டு மணி நேரம் நன்கு ஊற விடுங்கள். மாவு புளித்து நிறம் மாறி இருக்கும், ஆனால் மாவு உளுந்து மாவு போல பொங்கி வராது. பிறகு ரொம்பவும் கலந்து விடாமல் லேசாக கலந்து விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் தோசை கல்லை அடுப்பில் வைத்து ஒன்றரை கரண்டி மாவு எடுத்து முழுவதுமாக மெல்லியதாக பரப்பி விடுங்கள். சுற்றிலும் எண்ணெய் விட்டு நன்கு வேக விடுங்கள். பிறகு அப்படியே மறுபுறம் திருப்பி போடாமல், தோசையை மடித்து கொடுத்து பாருங்கள், பொன்முறுவலான மொறுமொறு ஹோட்டல் தோசை தயார்!

- Advertisement -