சூப்பரான ரோட்டு கடை குருமாவை ஒருவாட்டி உங்க வீட்டில இப்படி வச்சு பாருங்க! வெறும் 15 நிமிடத்தில் வீடே மணக்கும் குருமா தயார்.

kuruma

இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, இவைகளுக்கு சைடிஷ் தேடுவது என்பது மிக மிக கஷ்டமான விஷயம். அதுவும் வேலையும் குறைவாக இருக்கவேண்டும். நாக்குக்கு சுவையும் தரவேண்டும். கமகம வாசம் வீச வேண்டும். லாக் டவுன் சமயத்தில் வீட்டிலேயே இருப்பவர்களுக்கு மூன்று வேளையும் சமைத்து தரும் இல்லத்தரசிகளுக்கு சுலபமான சூப்பரான ஒரு ரெசிபி இது. கட்டாயம் இன்னைக்கு ராத்திரியே ட்ரை பண்ணி பாருங்க. ரோட்டுக்கடை ஸ்டைலில் சுலபமாக ஒரு குருமா வைப்பது எப்படி. இந்த குருமாவின் வாசம் பக்கத்து வீடு வரை வீசும்.

முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். நறுக்கிய பெரிய வெங்காயம் – 1, நறுக்கிய மீடியம் சைஸ் தக்காளி – 1, பச்சை மிளகாய் – 2, சோம்பு – 1 ஸ்பூன், இஞ்சி – 1 சிறிய துண்டு, பூண்டு – 3 பல், லவங்கம் – 1, புதினா இலைகள் 5 லிருந்து 6, பொட்டுக்கடலை – 1 ஸ்பூன் தேங்காய்த்துருவல் ஒரு கைப்பிடி அளவு, இந்த பொருட்களை எல்லாம் மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் முதலில் ஒரு முறை நன்றாக ஓட விட்டு விடுங்கள்.

அதன் பின்பு தண்ணீரை ஊற்றி மொழுமொழுவென அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதில் பொட்டுக்கடலைக்கு பதிலாக 5 முந்திரிப்பருப்புகளையும் தேவைப்பட்டால் சேர்த்துக் கொள்ளலாம்.

kuruma2

அடுத்தபடியாக அடுப்பில் ஒரு கடாயை வைத்துக் கொள்ளுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி, பட்டை – 1, லவங்கம் – 1, கல்பாசி – சிறிய துண்டு, பிரியாணி இலை – 1, நட்சத்திர சோம்பு – 1, கருவேப்பிலை ஒரு கொத்து இந்த பொருட்களை எல்லாம் போட்டு தாளித்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் – 1, தக்காளி – 1, இந்த இரண்டு பொருட்களையும் பொடியாக நறுக்கி கடாயில் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள்.

வெங்காயமும் தக்காளியும் கடாயில் நன்றாக வதங்கியவுடன் மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் அரவையை கடாயில் ஊற்றவேண்டும். மிக்ஸியை நன்றாக கழுவி கொஞ்சம் நிறையவே தண்ணீரை குருமாவும் சேர்த்துக் கொள்ளுங்கள். இப்போது குரு மாவிற்கு தேவையான அளவு உப்பு, கரம் மசாலா – 1/2 ஸ்பூன், மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கொஞ்சம் கொத்தமல்லித்தழையை தூவி நன்றாக கலந்து விட்டு ஒரு மூடி போட்டு மிதமான தீயில் 20 நிமிடங்கள் இந்த குருமாவை கொதிக்க வைக்க வேண்டும்.

kuruma 3

இஞ்சி பூண்டு வெங்காயம் தக்காளி எல்லாவற்றையும் பச்சையாக அரைத்து இருக்கின்றோம். பச்சை வாடை போன பின்பு இறுதியாக ஒரு கொத்து புதினா தழை தூவி அடுப்பை அணைத்து விட்டு, சுடச்சுட பரிமாறுங்கள். இதனுடைய வாசத்திற்கு வீட்டில் இருப்பவர்களின் நாக்கு நிச்சயமாக அடிமையாகிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.