அட! இப்படியும் பணியாரம் செய்யலாமா? என்று ஆச்சரியப்படும் அளவிற்கு சுவையான முட்டை பணியாரத்தை இப்படி செய்து பாருங்கள்

muttai
- Advertisement -

எப்பொழுதும் சற்று வித்தியாசமான காலை உணவு, மாலை உணவு சமைக்க வேண்டியிருந்தால் பலரது வீடுகளிலும் பணியாரம் செய்வது வழக்கம் தான். அதிலும் இட்லி மாவில் செய்யக்கூடிய காரப் பணியாரத்தை தான் பலரும் வழக்கமாக செய்கின்றனர். அல்லது இதனுடன் வெல்லம் சேர்த்து இனிப்புப் பணியாரமும் செய்து கொடுக்கின்றனர். ஆனால் சற்று வித்தியாசமாக அரிசி மாவுடன் முட்டை சேர்த்து செய்யக்கூடிய இந்த முட்டை பணியாரத்தை ஒரு முறை இந்த முறையில் செய்து பாருங்கள்.

இதன் சுவை சாப்பிடுவதற்கு மிகவும் வித்தியாசமாகவும், விருப்பமாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தட்டாமல் சாப்பிடுவார்கள். இதனுடன் தொட்டுக்கொள்ள காரச்சட்னி செய்து சாப்பிட்டு பாருங்கள். அவ்வளவு அருமையான சுவையில் இருக்கும். இந்த முட்டை பணியாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – ஒரு கப், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 1, எண்ணெய் – 50 கிராம், முட்டை – 3, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் ஸ்பூன், உப்பு – முக்கால் ஸ்பூன், ஆப்ப சோடா மாவு – கால் ஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லி தழை – அரை கைப்பிடி.

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். பிறகு கருவேப்பிலை மற்றும் கொத்தமல்லி தழையும் மிகவும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு வாயகன்ற கிண்ணத்தில் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை, கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், கால் ஸ்பூன் பெருங்காயத்தூள், கால் ஸ்பூன் ஆப்ப சோடா மாவு மற்றும் முக்கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.

பின்னர் இவற்றுடன் மூன்று முட்டைகளை உடைத்து ஊற்றி, கரண்டி வைத்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு இந்த கலவையுடன் ஒரு கப் இட்லி மாவு சேர்த்து, அனைத்தும் ஒன்றாக கலந்து வரும் வரை நன்றாக கலக்கிவிட வேண்டும். பிறகு இந்த கலவையை 5 நிமிடம் அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு குழிப்பணியாரக் கல்லை வைத்து, ஒவ்வொரு குழியிலும் லேசாக எண்ணெய் விடவேண்டும். இவை நன்றாக சூடானதும் ஒவ்வொரு குழியிலும் ஒரு கரண்டி மாவை ஊற்ற வேண்டும். சிறிது நேரத்தில் இவை நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு, மறுபுறமும் பொன்னிறமாக மாறியதும் ஒவ்வொன்றாக வெளியே எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு குழிபணியாரம் நல்ல புசுபுசுவென மிகவும் சாஃப்டாக, அருமையான சுவையில் வரும். பிறகு இவற்றுடன் சற்று காரமான வெங்காய சட்னி அல்லது தக்காளி சட்னி சேர்த்து அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்துப் பாருங்கள். எவ்வளவு கொடுத்தாலும் பத்தாது மீண்டும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -