இட்லி, தோசையுடன் தொட்டுக்கொள்ள இந்த கார சட்னிக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது, நாவில் பட்டவுடன் சுண்டி இழுக்கும் கார சுவையில் அவ்வளவு அட்டகாசமாக இருக்கும்

chutni
- Advertisement -

இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பலவித சைடிஷ்கள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் செய்யக்கூடியது சட்னி வகைகள் தான். அதிலும் தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி தான் அதிகமாக செய்வதுண்டு. அவ்வாறு தேங்காய் சட்னி, பொட்டுக்கடலை சட்னி, சாம்பார், குருமா இவற்றை விட சற்று காரசாரமாக இருக்கக்கூடிய இந்த கார சட்னி தான் இட்லி, தோசைக்கு ஏற்ற சைட் டிஷ்ஷாக இருக்கும். எப்போதும் செய்யும் சட்னியை விட இந்த கார சட்னியை செய்து கொடுத்தால் இன்னும் இரண்டு தோசை, இட்லி அதிகமாக சாப்பிடுவார்கள். அந்த அளவிற்கு இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும். வாருங்கள் இந்த சுவையான கார சட்னியை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – ஒன்று, தக்காளி – 3, பச்சை மிளகாய் – ஒன்று, காய்ந்த மிளகாய் – 6, இஞ்சி சிறிய துண்டு – ஒன்று, புளி சிறிய துண்டு – ஒன்று, உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன், சீரகம் – அரை ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, பூண்டு – பத்து பல், எண்ணெய் – 3 ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதேபோல் இஞ்சி மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்க வேண்டும். பின்னர் 10 பல் பூண்டை தோலுரித்து சுத்தம் செய்ய வேண்டும். பிறகு 6 காய்ந்த மிளகாயைக் காம்பு கிள்ளி வைக்க வேண்டும்.

பின்னர் அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக சூடானதும் அதில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து வறுக்க வேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் 10 பல் பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு இவற்றுடன் 6 வரமிளகாய் மற்றும் ஒரு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி விட்டு, நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும் வரை வதக்க வேண்டும். வெங்காயம் நன்றாக வதங்கியதும் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளி பழங்களை சேர்த்து நன்றாக குழைந்து வரும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இவற்றுடன் ஒரு ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட்டு, இறுதியாக சிறிய துண்டு புளி சேர்த்து வதக்கி விட்டு, அடுப்பை அனைத்து விட வேண்டும். பின்னர் இவற்றை நன்றாக ஆற வைத்து, மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவேண்டும். பின்னர் ஒரு தெளிப்பு கரண்டியை அடுப்பின் மீது வைத்து, ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, அரை ஸ்பூன் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, சட்னியுடன் கலந்துவிட வேண்டும். இறுதியாக ஒரு கொத்து கொத்தமல்லி தழை சேர்த்து கலந்து விட வேண்டும்.

- Advertisement -