இட்லி, தோசை, சப்பாத்தி, அடை போன்றவற்றுக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட ருசியான, கெட்டியான கார சட்னி இதை விட சுலபமா அரைத்து விட முடியாது!

kara-chutney---milagai
- Advertisement -

பொதுவாக இட்லி, தோசை, அடை போன்றவற்றிற்கு தொட்டுக் கொள்ள காரசாரமான கார சட்னி சரியான காம்பினேஷன் ஆக இருக்கும். மற்ற சட்னி வகைகளை காட்டிலும் கார சட்னி இன்னும் ரெண்டு தோசை கூடுதலாக சாப்பிட வைக்கும். அந்த அளவிற்கு அனைவருக்கும் பிடித்தமான இந்த கார சட்னியை வித்தியாசமான முறையில் கூடுதல் சுவையில் எளிதாக எப்படி நம் வீட்டிலேயே அரைப்பது என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

காரச் சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
மிளகாய் வற்றல் – 5, பூண்டு பல் – 6, சின்ன வெங்காயம் – 100 கிராம், பழுத்த தக்காளிப் பழங்கள் – 4, சீரகம் – கால் டீஸ்பூன், நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு, பெருங்காயத் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

கார சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கார சட்னி செய்வதற்கு முதலில் கடாயில் போட்டு வதக்க வேண்டிய அவசியமில்லை! அரைத்து பின்னர் நாம் தாளித்து வதக்க வேண்டியது தான். கழுவிய மிக்ஸி ஜாரில் ஐந்து மிளகாய் வற்றலை சேர்த்து கொள்ளுங்கள். இவற்றுடன் பூண்டு பற்களை தோலுரித்து சேருங்கள். பின்னர் 100 கிராம் அளவிற்கு சின்ன வெங்காயத்தை தோலுரித்து அப்படியே முழுதாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

நன்கு பழுத்த தக்காளிப் பழங்கள் நான்கினை வேர் பகுதியை நீக்கி விட்டு நான்காக வெட்டி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் கால் டீஸ்பூன் மட்டும் சீரகம் சேர்த்து நைஸாக தண்ணீர் எதுவும் சேர்க்காமல் அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். தக்காளியில் இருக்கும் தண்ணீரே போதுமானது, எனவே தண்ணீர் சேர்க்காதீர்கள். நன்கு நைஸாக அரைத்து எடுத்த பின்பு அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள் அதில் தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை ஊற்றி காய விடுங்கள்.

- Advertisement -

காரச் சட்னிக்கு நல்லெண்ணெய் ஊற்றினால் ரொம்பவே சுவையாக இருக்கும். நல்லெண்ணெயை நன்கு காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் உளுந்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் சீரகம் சேர்த்து கலந்து விடுங்கள். பின் ஒரு இணுக்கு கறிவேப்பிலையை கழுவி உருவி தாளித்துக் கொள்ளுங்கள். சட்னிக்கு கொஞ்சம் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து கொள்ளுங்கள். பின்னர் அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து நன்கு 10 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

தண்ணீர் இல்லாததால் தெறிக்க ஆரம்பிக்கும் எனவே அடுப்பை மிதமான தீயில் வைத்து தொடர்ந்து கரண்டியை வைத்து கிண்டிக் கொண்டே இருங்கள். சட்னி கொதித்து கெட்டியாகி பச்சை வாசம் போய், நல்ல மணம் வீசத் தொடங்கும். அவ்வளவுதாங்க ரொம்பவே ருசியான காரசாரமான கார சட்னி நொடியில் தயார்! இதே மாதிரி மிக்ஸியில் எல்லா பொருட்களையும் ஒன்றாக சேர்த்து அரைத்து பின்னர் தாளித்து கொதிக்க வைத்தால் நீங்களும் சுவையான கார சட்னி தயார் செய்து விடலாம். இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -