குருமா வைக்க இனி வெங்காயம் தக்காளி, இஞ்சி பூண்டு விழுது வதக்கி கஷ்டப்பட அவசியமே கிடையாது. குறைந்த நேரத்தில் 1 விசிலில் மணக்க மணக்க இப்படியும் குருமா செய்யலாம்.

veg-kurma2
- Advertisement -

பொதுவாகவே நாம் வெஜிடபிள் குருமா செய்ய வேண்டுமென்றால் இஞ்சி பூண்டு விழுது அரைத்து, தேங்காய் விழுது அரைத்து, குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் தக்காளி வதக்கி, சிரமப்பட்டுதான் செய்வோம். ஆனால் அப்படி எல்லாம் இல்லாமல் மிக மிக சுலபமான முறையில் ஒரே ஒரு விசிலில் சூப்பரான குருமா ருசி குறையாமல் எப்படி தயார் செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் சாதாரணமாக வைக்கக்கூடிய குருமாவை விட இதனுடைய ருசி சூப்பராக இருக்கும். மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க.

முதலில் ஒரு குக்கரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நறுக்கிய கேரட் – 1/2 கப், பீன்ஸ் – 1/2 கப், உருளைக்கிழங்கு – 1/2 கப், நீள வாக்கில் வெட்டிய பெரிய வெங்காயம் – 1/2 கப், பச்சை பட்டாணி – 1/2 கப், பிரியாணி இலை – 2 தண்ணீர் – 1 கப் ஊற்றி இதை அப்படியே மூடி போட்டு ஒரே ஒரு விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

காய்கறிகளை ரொம்பவும் பொடியாக வெட்ட வேண்டாம். கொஞ்சம் நீள வாக்கில் மொத்தமாக வெட்டிக் கொள்ளுங்கள். இதில் இன்னும் உங்களுக்கு காலிஃப்ளவர் மஸ்ரூம் போன்ற மற்ற காய்கறிகளை சேர்க்க வேண்டியதாக இருந்தாலும் சேர்த்துக் கொள்ளலாம். அது அவரவர் விருப்பம் தான்.

இந்த குருமாவுக்கு நாம் ஒரு தேங்காய் மசாலா விழுது தயார் செய்ய வேண்டும். தேங்காய் துருவல் – 1/2 கப், பச்சை மிளகாய் – 2, தோல் சீவிய இஞ்சி – 1 இன்ச், பூண்டு பல் – 10, முந்திரி – 10, சோம்பு – 1 ஸ்பூன், கசகசா – 1 ஸ்பூன், மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன், லவங்கம் – 2, ஏலக்காய் – 2, பட்டை – 1 சிறிய துண்டு, இந்த எல்லா பொருட்களையும் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதுபோல் அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த விழுது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

குக்கரில் காய்கறிகள் விசில் வந்திருக்கும் அல்லவா. குக்கரை திறந்து அதில் ரொம்பவும் பொடியாக சாப் செய்த தக்காளி பழம் – 2, மிக்ஸி ஜாரில் அரைத்து வைத்திருக்கும் விழுதை ஊற்றி, 2 கப் அளவு தண்ணீரை ஊற்றி, தேவையான அளவு உப்பு போட்டு, தேங்காய் எண்ணெய் 1 டேபிள்ஸ்பூன் ஊற்றி நன்றாக கலந்து விட்டு, இந்த குக்கரை மீண்டும் அடுப்பில் வைத்து, குருமாவை மூன்றில் இருந்து நான்கு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைக்கவேண்டும்.

அடுப்பு தீயை முழுமையாக வைத்து விட்டு கொதிக்க வையுங்கள். இடையிடையே குருமாவை கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். குருமா கொதிக்க கொதிக்க நன்றாக வரும். குருமா பச்சை வாடை அடங்கியதும் அடுப்பை அணைத்து விட்டு, மேலே கொத்தமல்லித் தழையை ஊற்றி இந்த குருமாவை இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு பரிமாறி பாருங்கள். மிக மிக அட்டகாசமாக இருக்கும்.

- Advertisement -