பாரம்பரிய முறையில் நிறைய மசாலா பொருட்கள் சேர்க்காமல் ஜம்முனு ஒரு தக்காளி சாதம் இப்படி செஞ்சு பாருங்க! அடிக்கடி இதைத்தான் செய்வீங்க.

tomato-rice-recipe
- Advertisement -

தக்காளி சாதம் என்றாலே பிரியாணி அல்லது பிரிஞ்சி சுவையில் இருக்க வேண்டும் என்று பலரும் நினைக்கின்றனர். வெறும் தக்காளியை மட்டும் சேர்த்து செய்யும் பொழுது அதில் நிறைய மசாலா பொருட்கள் சேர்த்தால் சுவை மாறுவதோடு மட்டுமல்லாமல், வயிறு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே பாரம்பரியமான முறையில் இப்படி ஒரு முறை தக்காளி சாதம் செஞ்சு பாருங்க இனி அடிக்கடி இதையே செய்ய ஆரம்பித்து விடுவீர்கள்! சுவையான தக்காளி சாதம் எளிதாக செய்வது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம்.

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பெரிய வெங்காயம் – 5, பட்டை – ஒரு துண்டு, கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், பச்சை மிளகாய் – 3, கறிவேப்பிலை – ஒரு கொத்து, இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பெரிய தக்காளி – 4, உப்பு – தேவையான அளவு, வெறும் மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், பச்சரிசி – 2 ஆழாக்கு, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு.

- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை விளக்கம்:
தக்காளி சாதம் செய்ய முதலில் அரிசியை குழையாமல் உதிரி உதிரியாக வடித்துக் கொள்ள வேண்டும். தக்காளி சாதம் செய்ய பச்சரிசி பயன்படுத்துவது வழக்கம். நீங்கள் புழுங்கல் அரிசி அல்லது பாசுமதி அரிசியையும் கொண்டு இந்த தக்காளி சாதம் செய்தால் ரொம்பவே சுவையாக இருக்கும். சாதத்தை வடித்து உதிரி உதிரியாக ஆற வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் தேவையான காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு அடிகனமான பெரிய வாணலி ஒன்றை வைத்து கொள்ளுங்கள். அதில் தேவையான அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள். கூடுதலாக ஒரு டேபிள் ஸ்பூன் நெய் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். எண்ணெய் காய்ந்ததும் வாசனைக்கு ஒரு துண்டு பட்டை மட்டும் போட்டுக் கொள்ளுங்கள். அதனுடன் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கொத்து கறிவேப்பிலை தாளித்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

பொடிப் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் சேர்த்து வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போனதும் நீங்கள் பொடி பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எந்த அளவிற்கு பொடி பொடியாக நறுக்க முடியுமோ, அந்த அளவிற்கு சிறிய அளவில் நறுக்கி சேர்த்தால் வதங்குவதற்கு ரொம்பவே சுலபமாக இருக்கும். வெங்காயம் ஓரளவுக்கு நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்குங்கள். இவற்றின் பச்சை வாசம் போனதும், தக்காளி துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம், தக்காளி ஆகியவற்றை சாறு இறங்க, சுருள, மசிய வதக்க வேண்டும்.

இப்போது தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின்னர் காரத்துக்கு மிளகாய்த் தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்குங்கள். இவை ஒன்றோடு ஒன்று நன்கு கலந்து வர வதக்கிய பின்பு, நீங்கள் ஆற வைத்துள்ள உதிரி உதிரியான சாதத்தை இதனுடன் சேர்த்து எல்லா இடங்களிலும் ஒன்று சேர பிரட்டி விட வேண்டும். பின்னர் நறுக்கிய கொத்தமல்லி தழைகளை தூவி சமமாக கரண்டியை வைத்து அழுத்தம் கொடுத்துக் கொள்ளுங்கள். பிறகு ஒரு மணி நேரம் கழித்து சாப்பிட்டால், ரொம்பவே ருசியான பாரம்பரிய தக்காளி சாதம் தயார்! இதே முறையில் நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -