வறுத்து அரைத்த இட்லி, வடை சாம்பார் இப்படி ஒரு முறை செஞ்சா இனி வேற சாம்பாரே நீங்க செய்ய மாட்டீங்க!

- Advertisement -

உயர்தர சைவ உணவகங்களில் கிடைக்கும் சாம்பாரை விட அதீத ருசியைக் கொடுக்கும் இந்த சாம்பார் இட்லி, தோசை, ஊத்தாப்பம், வடை போன்ற டிபன் வகைகளுக்கு ரொம்பவே சூப்பராக இருக்கும். காய்கறிகள் எல்லாம் போட்டு செய்யும் இந்த சாம்பார் ஒருமுறை நீங்கள் செய்து விட்டால் போதும்! பிறகு வேறு சாம்பாரே நீங்கள் செய்ய மாட்டீர்கள். உங்கள் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் தொடர்ந்து இடையே செய்யும்படி வலியுறுத்துவார்கள். அந்த அளவிற்கு அனைவரையும் கவரும் இந்த இட்லி சாம்பார் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணியுங்கள்.

idli-sambar

இட்லி, வடை சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
வறுத்து அரைக்க: எண்ணெய் – 4 டீஸ்பூன், வர மிளகாய் – 5, தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு – 2 டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், பெரிய வெங்காயம் – பாதி, தக்காளி – ஒன்று, துருவிய தேங்காய் – 4 டேபிள்ஸ்பூன்.

- Advertisement -

துவரம் பருப்பு – 100 கிராம், எண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், சின்ன வெங்காயம் – ஒரு கப், பச்சை மிளகாய் – ஒன்று, தக்காளி – 1, உருளைக்கிழங்கு – ஒன்று, கேரட் – ஒன்று, முருங்கைக்காய் – ஒன்று, புளி – 25 கிராம், உப்பு – தேவையான அளவு, வெல்லம் – ஒரு துண்டு. தாளிக்க: நெய் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, துருவிய தேங்காய் – 3 டேபிள்ஸ்பூன்.

idli-sambar1

இட்லி, வடை சாம்பார் செய்யும் முறை:
முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காய்கறிகளை வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் வறுக்க தேவையான பொருட்களை எடுத்து வைத்து அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் 2 ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள். வர மிளகாய், தனியா, கடலைப்பருப்பு, உளுந்து, வெந்தயம், சீரகம் ஆகிய பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு நன்கு வதக்க வேண்டும்.

- Advertisement -

பின்னர் மிக்ஸி ஜாரை கழுவி அதில் இவற்றை சேர்த்து ஆறவிட்டு கொரகொரவென்று அரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதே வாணலியில் மீண்டும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு அரை வெங்காயம் பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து கொள்ளுங்கள். வெங்காயம் வதங்கியதும், தக்காளி சேர்த்து வதக்கவும். பின்னர் 4 டேபிள்ஸ்பூன் துருவிய தேங்காய் சேர்த்து நன்கு வதக்கிய பின்பு இதனையும் ஜாரில் சேர்த்து மீண்டும் தண்ணீர் ஊற்றி நைஸாக அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது சாம்பாருக்கு தேவையான மசாலா தயார்.

idli-sambar2

பின்னர் அடுப்பை பற்ற வைத்து ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் 1 கப் தோலுரித்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி வாருங்கள். பின்னர் பொடி பொடியாக வெட்டி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்குங்கள். ஒரு இரண்டு நிமிடம் மூடி வைத்தால் காய்கறிகள் நன்கு வெந்து விடும்.

vadai-sambar

பின்னர் கரைத்து வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு கொதிக்க விடுங்கள். புளியின் பச்சை வாசம் போனதும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் சாம்பாருக்கு தேவையான தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். நன்கு கொதித்ததும் வேக வைத்த துவரம் பருப்பை சேர்த்து, ஒரு துண்டு வெல்லம் போட்டு நன்கு கொதிக்க விடுங்கள். இட்லி சாம்பார் தண்ணியாக இருக்க வேண்டும் எனவே சரியாக தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். பின்னர் சாம்பாரை நன்கு கொதிக்க விட்டு தாளிக்க வேண்டியது தான்.

idli-sambar3

தாளிப்பு கரண்டியில் நெய் விட்டு, கடுகு, பெருங்காயத் தூள், வர மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து தேங்காய் துருவல் இறுதியாக சேர்த்து ஒருமுறை கலந்து சாம்பாரில் கொட்டி அடுப்பை அணைத்து மூடி வைத்தால் போதும். மணக்க மணக்க இட்லி, வடை சாம்பார் தயாராகிவிடும். இட்லி, வடை போன்றவை மூழ்கும் அளவிற்கு இந்த சாம்பாரை ஊற்றி ஊற வைத்து சாப்பிட்டு பாருங்கள். ஹோட்டல் சாம்பாரே தோற்றுவிடும் அளவிற்கு அவ்வளவு ருசியாக இருக்கும். நீங்களும் இதே போல உங்கள் வீட்டில் முயற்சி செய்து அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -