20 நிமிடத்தில் பாய் வீட்டு சுவையில் மணக்க மணக்க சூப்பரான குஸ்கா செய்யும் முறை.

- Advertisement -

சைவம், அசைவம் என இருவகை உணவு பிரியர்களுக்கும் பிரியாணி என்பது மிகவும் பிடித்தமான ஒரு உணவாகவே உள்ளது. சைவத்தில் காய்கறிகளை சேர்த்தும், அசைவத்தில் சிக்கன் அல்லது மட்டனை சேர்த்தும் வீட்டில் பிரியாணி செய்வது வழக்கம். பிரியாணி எதுவாக இருந்தாலும் அதன் குஸ்காவை சாப்பிட பலரும் ஆர்வம் காட்டுவதுண்டு. அந்த வகையில் பாய் வீட்டில் செய்யக்கூடிய சுவையில் மணக்க, மணக்க சூப்பரான ஒரு குஸ்காவை நம் வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

குஸ்கா செய்ய தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 4 முதல் 5 டீ ஸ்பூன், பட்டை – 2, லவங்கம் – 4, ஏலக்காய் – 4, பிரிஞ்சி இலை – 3, பெரிய வெங்காயம் – 3, பச்சை மிளகாய் – 3, தக்காளி (பெரியது) – 2, கொத்தமல்லி, புதினா – சிறிதளவு, இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 1/2 டீ ஸ்பூன், பிளைன் ரெட் சில்லி பவுடர் – 1 டீ ஸ்பூன், கரம் மசாலா (அ) பிரியாணி மசாலா – 1/2 டீ ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தயிர் – 1 கப், பாசுமதி அரிசி – 5 கப், எலுமிச்சை பழம் – 1/2

- Advertisement -

குஸ்கா செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை 20 நிமிடங்கள் ஊறவிடவேண்டும். அரிசி ஊறிக்கொண்டிருக்கும் வேலையில் குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் நன்கு சூடானதும் அதில் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை ஆகியவற்றை சேர்த்து சில நொடிகள் விட்டு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, வெங்காயம் பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்குவதற்கு தேவை பட்டால் உப்பை சேர்த்துக்கொள்ளலாம்.

வெங்காயம் வதங்கியதும், கீறிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும். பிறகு நறுக்கிய கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து வதக்கிவிட்டு, அதோடு இஞ்சி பூண்டு பேஸ்ட், ரெட் சில்லி பவுடர், கரம் மசாலா (அ) பிரியாணி மசாலா சேர்த்து வதக்க வேண்டும்.

- Advertisement -

அனைத்தும் நன்றாக வதங்கியதும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பிறகு அதோடு தயிர் சேர்த்து கலக்கி விடவும் (தயிர் அதிகம் புளிக்காமல் இருப்பது அவசியம்). இப்போது அரசிக்கு தேவையான அளவு தண்ணீரை இந்த கலவையோடு சேர்க்கவும் (பொதுவாக 1 கப் பாசுமதி அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்ப்பது வழக்கம்). பிறகு அதில் எலுமிச்சை பழத்தை பிழிந்து விட்டு இந்த கலவையை கொதிக்க விட வேண்டும்.

கலவை நன்கு கொதிக்கத் துவங்கியதும் அதில் அரிசியை சேர்க்க வேண்டும்( ஊரவைத்த தண்ணீரை நன்கு வடிகட்டி, அரிசியில் தண்ணீர் இல்லாத அளவுக்கு பார்த்துக்கொள்ள வேண்டும்). பிறகு அனைத்தையும் கிளறிவிட்டு, உப்பு சரியாக உள்ளதா என்பதை ஒருமுறை சரிபார்த்து கொண்டு, குக்கரை மூடி ஒரு விசில் விட வேண்டும்.

விசில் வந்ததும் அடுப்பை அனைத்துவிட்டு, குக்கரில் இருக்கும் பிரஷர் அனைத்தும் வெளியேறும் வரை காத்திருக்க வேண்டும். அதன் பிறகு குக்கரை திறந்து பார்த்தல் சூப்பரான குஸ்கா தயார்.

- Advertisement -