காரசாரமான வெங்காய சட்னி செய்ய 5 நிமிஷம் போதுமே! தக்காளியே தேவையில்லை இட்லி, தோசைக்கு இதை விட சூப்பரான சட்னி இல்லைன்னு நீங்களே சொல்லுவீங்க!

big-onion-chutney
- Advertisement -

சுவையான காரசாரமான வெங்காய சட்னி இதே மாதிரி நாம் செய்து பார்த்தால் இனி அடிக்கடி இட்லி, தோசைக்கு இதைத் தான் செய்வோம். அந்த அளவிற்கு இதனுடைய ருசி அபாரமாக இருக்கும். வித்தியாசமான முறையில் தக்காளி எதுவும் சேர்க்காமல் வெங்காயத்தை மட்டும் சேர்த்து செய்யப்படும் இந்த வெங்காய சட்னி இட்லி, தோசைக்கு மட்டுமல்லாமல் எல்லா விதமான டிபன் வகைகளுக்கும் சூப்பராக இருக்கும். வெங்காய சட்னி எப்படி செய்வது? என்பதை இந்த பதிவின் மூலம் இனி தெரிந்து கொள்வோம்.

காரசாரமான வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:
நல்லெண்ணெய் – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 5, மல்லி விதைகள் – ஒரு ஸ்பூன், பூண்டு பற்கள் – 8, பெரிய வெங்காயம் – 2, புளி – சிறு நெல்லி அளவு, நறுக்கிய தேங்காய் – அரை கைப்பிடி, கருவேப்பிலை – ஒரு இணுக்கு, நறுக்கிய மல்லித்தழை – அரை கைப்பிடி, உப்பு – தேவையான அளவு, வெல்லம் – சிறு துண்டு. தாளிக்க: கடுகு – அரை டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், சீரகம் – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு இணுக்கு.

- Advertisement -

காரசாரமான வெங்காய சட்னி செய்முறை விளக்கம்:
முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். காரச் சட்னிக்கு எப்பொழுதும் நல்லெண்ணெய் ஊற்றி செய்வது தான் சுவை தரும். நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் கூட பயன்படுத்தலாம். பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி மெல்லியதாக நீள வாக்கில் நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு வாணலியை வையுங்கள். தேவையான அளவிற்கு நல்லெண்ணெயை விட்டு காய விடுங்கள். எண்ணெய் நன்கு காய்ந்ததும் முதலில் வர மிளகாயை காம்புடன் அப்படியே சேர்த்து லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

காம்பு நீக்கி சேர்த்தால் விதைகள் வெளியில் வந்து விடும். உங்களிடம் காஷ்மீரி மிளகாய் இருந்தால் எட்டு என்கிற எண்ணிக்கையில் சேர்த்துக் கொள்ளுங்கள். மிளகாயை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த எண்ணெயில் மல்லி விதைகளை சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். வாசம் வர மல்லி விதை வறுபட்டதும் தோல் உரித்த பூண்டு பற்கள் சேர்த்து லேசாக வதக்குங்கள். பூண்டு பற்கள் நன்கு வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள வெங்காய துண்டுகளை சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் மெல்லியதாக நறுக்கும் போது சீக்கிரம் வதங்கும்.

- Advertisement -

இதில் நாம் தக்காளி சேர்க்க போவது இல்லை. இதனால் ஒரு சிறு நெல்லிக்காய் அளவிற்கு புளியை உருட்டி சேர்த்துக் கொள்ளுங்கள். இது புளிப்புச் சுவையை கொடுக்கும். வெங்காயம் கண்ணாடி பதம் வந்ததும் பொடி பொடியாக நறுக்கிய தேங்காய் துண்டுகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பொதுவாக கார சட்னியின் சுவைக்கு கருவேப்பிலை, கொத்தமல்லி சேர்ப்பது முக்கிய காரணமாக இருக்கும். எனவே கொஞ்சம் கருவேப்பிலை, கொஞ்சம் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு வதக்கிய பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள்.

பிறகு ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் வறுத்து வைத்துள்ள வர மிளகாயை முதலில் சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பின்பு நீங்கள் மீதி பொருட்களை சேர்த்து அதிகம் நைசாக இல்லாமல் சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் இதற்கு ஒரு சிறிய தாளிப்பு கொடுக்க வேண்டும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை பொன்னிறமாக தாளித்துக் கொட்டுங்கள். அட்டகாசமான காரசாரமான வெங்காய சட்னி நொடியில் தயார்! இதே மாதிரி நீங்களும் செய்து பார்த்து அசத்துங்கள்.

- Advertisement -