எந்த தேதியில் பிறந்தவர்கள் எந்த நவகிரகத்தை வழிபட்டால் முன்னேறலாம் தெரியுமா ?

astrology

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் :

one

இவர்கள் விதி எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 1-ஆக அமையப் பெற்றவர்கள், சிம்ம ராசி, லக்னக்காரர்கள், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோருக்கு சூரியதேவன் மூலம் பலன் உண்டாகும்.
சாதக பலன்கள்

சூரியன் ஒருவரது ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம், நட்பு ராசி, சுப கிரகச் சேர்க்கை, சுபகிரகப் பார்வை பெற்று இருந்தால், பலம் மிகுந்தவர் ஆவார். இவர்களுக்கு சூரியன் மூலம் சுப பலன்கள் உண்டாகும். அதாவது ஆத்ம பலம் கூடும்.

Lord sooriyan

இவர்களின் மதிப்பு உயரும். தன்னைத்தானே உணரும் நிலை உண்டாகும். பிறரால் பாராட்டப்படும் நிலை அமையும். உடல் சக்தி கூடும். பராக்கிரமம் உண்டாகும். ஆரோக்கியம் நன்கு அமையும். வலது கண் பார்வை பலம் கூடும். இதய பலம் உண்டாகும். தந்தையாலும் அரசாங்கம் மூலமும் அனுகூலம் ஏற்படும்.

- Advertisement -

உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். பிறரை வேலை வாங்கும் தகுதி உண்டாகும். அரசியல் ஞானம் அதிகம் இருக்கும். மருத்துவம், விஞ்ஞானம், எரிபொருள், சூரிய சக்தி ஆகிய இனங்களால் வருவாய் பெற வாய்ப்பு உண்டாகும். உடலில் உஷ்ணாதிக்கம் அதிகம் இருக்கும். கம்பீரமான தோற்றம் அமையும். காடு, மலை, வனாந்தரங்களில் வசிக்கப் பிடிக்கும். சூடான உணவை ரசித்து உண்பீர்கள்.

பாதக பலன்கள்

மாறாக நீசம், பகை, பாபக் கிரகச் சேர்க்கை, பாபக் கிரகப் பார்வை, பாப கர்த்தரி யோகத்தில் (சூரியனுக்கு இருபுறமும் செவ்வாய், சனி, ராகு, கேது இருப்பது) இருந்து, மிகவும் பலவீனமாக இருந்தால் குறிப்பிட்ட ஜாதகருக்குக் கெடு பலன்கள் உண்டாகும். மேற்சொன்ன சுபபலன்கள் கிடைக்காமல் போகும். பித்ரு தோஷம் ஏற்படும். அரசாங்க தண்டனை பெறவோ, அபராதம் கட்டவோ வேண்டிவரும்.

Sooriyan

பலன் தரும் வழிபாடுகள்

ஜாதகத்தில் சூரிய பலம் குறைந்தவர்கள் சூரியனார் கோயில் சென்று வழிபடுவது நல்லது. சூரியனின் கிழமை ஞாயிறு. அன்று காலை சூரிய உதயத்திலிருந்து ஒரு மணி நேரத்துக்குள் பரிகாரம் செய்து கொள்ளலாம். 11 மணி முதல் 12 மணிக்குள் குரு ஹோரையிலும் செய்யலாம்.

சூரியனுக்கு செந்தாமரை மலர் சூட்டி, செந்நிறப் பட்டு ஆடை அணிவித்து, அர்ச்சனை செய்யலாம். கோதுமை தானம் கொடுப்பது நல்லது. சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து, தானும் உண்டு பிறருக்கும் கொடுக்கலாம்.

2, 11, 20, 29  தேதிகளில் பிறந்தவர்கள் :

two

இவர்கள் விதி எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 2-ஆக அமையப் பெற்றவர்கள், கடக ராசி, கடக லக்னக்காரர்கள், ரோகிணி, ஹஸ்தம், திருவோண நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

சாதக பலன்கள் 

இவர்களுக்கு சந்திரன் ஆட்சி, உச்ச, மூலத்திரிகோண ஸ்தானங்களில் இருப்பது நல்லது. சந்திரன் தனித்து நில்லாமல் சுபக்கிரகங்களின் சேர்க்கையோ, பார்வையோ பெற்றிருப்பது சிறப்பாகும். சந்திரனின் ஆதிபத்திய விசேஷமுள்ள சுபக் கிரகங்களின் சாரத்தில் இருப்பது சிறப்பாகும்.

Chandra Baghavan

இதனால் சந்திரனின் பலம் கூடும். இதயத்துக்கும் இடது கண் பார்வைக்கும் மனதுக்கும் சந்திரன் காரகர் ஆவார். இவரது பலம் பெற்றவர்களுக்கு விசேஷமான நன்மைகள் உண்டாகும். தாய் பராசக்தியின் அருள் பெற்றவர்கள் என்று இவர்களைச் சொல்லலாம். எதற்கும் உணர்ச்சிவசப் படுபவர்கள். நற்பெயரும் புகழும் உண்டாகும். அழகான முகம் அமையும். தாய்ப் பாசம் அதிகம் இருக்கும். அரசு ஆதரவு கிடைக்கும். செல்வம் சேரும். பயணத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். ஜலப்பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். மன நிலை நன்கு அமையும்.

பாதக பலன்கள்

சந்திரன் தேய்பிறையாக அமைந்தாலும், நீசம், பகை பெற்று இருந்தாலும், பாபக்கிரகங் களுடன் சேர்ந்தோ, பாபக் கிரகங்களின் மத்தியிலோ இருந்தாலும் பலம் குறைந்தவர் ஆவார். குறிப்பிட்ட ஜாதகர்களுக்கு மனநிலை பாதிக்கும். தூக்கம் கெடும். பயம் உண்டாகும். பெண்களால் சங்கடம் ஏற்படும்.

Chandra graganam 2018

பலன் தரும் வழிபாடுகள்

சந்திர பலம் குறைந்தவர்கள் வெள்ளை அல்லி மலர்களைச் சந்திரனுக்கு அணி வித்து வணங்கலாம். தியானம், யோகா செய்யலாம். வெள்ளை நிற வஸ்திரத்தை அணிவிக்கலாம். நெய் கலந்த பால் பாயசம் நைவேத்யம் செய்து தானும் உண்டு பிறருக்கும் அளிக்கலாம்.

பெளர்ணமி கிரிவலம் நல்லது. திங்கட்கிழமைகளில் சிவனாருக்கு பால் அபிஷேகம் செய்யலாம். திங் களூர் சென்று மாலை வேளையில் சந்திரனை வழிபடலாம். திருப்பதி மலையின் மேல் உள்ள பாபநாச (சந்திர தீர்த்தம்) தீர்த்தத்தில் நீராடி, திருவேங்கடவனைத் தரிசிப்பது நல்லது.

3, 12, 21, 30  தேதிகளில் பிறந்தவர்கள் :

three

இவர்கள் விதி எண் 3-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 3-ஆக அமையப் பெற்றவர்களுக்கு குருவருள் கைகூடும்.

மேலும் தனுசு, மீன ராசி, லக்னக்காரர்கள், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ஆகியோரும் குரு பகவானின் ஆதிக்கத்தில் இருப்பவர்கள் ஆவார்கள். குருவானவர் ஜாதகத்தில் ஆட்சி, உச்சம், மூலத்திரிகோண ஸ்தானத்தில் இருந்தால் பலம் மிகுந்தவர் ஆவார். சுபக் கிரகச் சேர்க்கை, பார்வை இருந்தால் அதிகம் நலம் புரிவார்.

Guru astrology

சாதக பலன்கள்

குரு பலம் உள்ளவர்கள் உலகியல் ஞானம் பெற்றவர்கள் ஆவார்கள். பல விஷயங்களையும் அறிந்து வைத்திருப்பார்கள். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி இருக்கும். ஆன்மிக உபதேசம் செய்யும் தகுதியும் அமையும். செல்வந்தர் ஆவார்கள். தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும்.

பெரியவர்கள், மூத்த சகோதரர்கள் மூலமும், பெண் என்றால் கணவர் மூலமும் அனுகூலம் உண்டாகும். புனிதமான தலங்களுக்குச் சென்று வழிபடவும், புனித நதிகளில் நீராடும் பாக்கியமும் கிடைக்கும். நன்மக்கட்பேறு அமையும். பழ மரங்களால் அதிக லாபம் பெறலாம். சிறந்த ஆசிரியராகலாம்.

பாதக பலன்கள்

குரு நீசம், பகை, அஸ்தமனம், பாபக்கிரகச் சேர்க்கை, பாபக் கிரகப் பார்வை பெற்றிருந்தால் சங்கடங்கள் சூழும். நல்லவர்களின் அதிருப்திக்கு ஆளாக வேண்டிவரும். கெட்ட காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். குறுக்கு வழிகளில் பொருள் திரட்டும் எண்ணம் ஏற்படும்.

Guru Baghavan

பலன் தரும் வழிபாடுகள்

குரு பலம் குறைந்தவர்கள் குரு பகவானுக்கு மஞ்சள் வஸ்திரம் அணிவித்து, முல்லை மலர்களைச் சமர்ப்பித்து அர்ச்சிப்பது வழிபடுவது விசேஷம். நெய் தீபம் ஏற்றுவதும் சிறப்பாகும். தயிர் சாதம் நைவேத்தியம் செய்து, தானும் உண்டு, பிறருக்கும் கொடுப்பது நல்லது. திருச்செந்தூருக்கும், சுவாமிமலைக்கும், ஆலங்குடிக்கும் சென்று வழிபடுவது சிறப்பாகும்.

4, 13, 22, 31  தேதிகளில் பிறந்தவர்கள் :

four

இவர்கள் விதி எண் 4-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 4-ஆக அமையப் பெற்றவர்கள், திருவாதிரை, சுவாதி, சதய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் ராகுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

astrology

சாதக பலன்கள்

ராகுவுக்கு தனிப்பட்ட பலம் இல்லை. சாயா கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு இருக்கும் வீடு, சேர்ந்த கிரகம், பார்க்கும் கிரகம் ஆகியவற்றின் பலத்தை அபகரித்துக் கொண்டு தன் பலமாக பலனைக் கொடுப்பார். ராகு கொடுத்துக் கெடுப்பார். இதனால் ராகு தசை, புக்தி, அந்தரம், சூட்சும அந்தரம் ஆகியவற்றில் பெரும் செல்வத்தை ஸ்திரச் சொத்தாக மாற்றி அமைத்துக் கொள்வது நல்லது.  ராகு வலுத்திருந்தால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

பாதக பலன்கள்

பலம் குறைந்த ராகு விஷ பயத்தைத் தருவார். விஷப் பூச்சிகளால் ஆபத்து ஏற்படும். உங்களின் பேச்சின் மூலம் மற்றவர்களது அதிருப்திக்கு ஆளாகவும் நேரும். பணம் களவு போகவும் வாய்ப்பு உண்டு.

Rahu mantra

பலன் தரும் வழிபாடுகள்

மந்தாரை மலர்களால் ராகுவை அர்ச்சிப்பது நல்லது. கருப்பு உளுந்து தானம் செய்யலாம். கறுப்பு நிற வஸ்திரத்தை ராகுவுக்கு அணிவிக்கலாம். நாகப் பிரதிஷ்டை செய்யலாம். திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், காளஹஸ்தி ஆகிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் சிறந்தது தெரியுமா ?

5, 14, 23  தேதிகளில் பிறந்தவர்கள் :

five

இவர்கள் விதி எண் 5-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 5-ஆக அமையப் பெற்றவர்கள் புதன் பலம் பெற்றவர்கள்.

மேலும், மிதுன, கன்னி ராசி, லக்னக்காரர்கள், ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புதனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். புதன் ஆட்சி, உச்சம், மூலத் திரி கோணம் பெற்றிருந்தாலோ, சுபக் கிரகச் சேர்க்கை, பார்வை பெற்று இருந்தாலோ பலம் பெற்றவர் ஆவார்.

Budhan Manthiram

சாதக பலன்கள்

புதன் பலம் பெற்றவர்களுக்கு அறிவாற்றல் சிறக்கும். வாக்கு வன்மை கூடும். படிப்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். கணித ஞானம் ஏற்படும். வியாபார நுணுக்கம் தெரிய வரும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் அதிகம் இருக்கும்.

தகவல் தொடர்பு இனங்களில் நாட்டம் இருக்கும். சிறந்த ஜோதி டராக முடியும். எழுத்து, பத்திரிகை, தரகு, நடனம், நாடகம், நவரத்தின ஆராய்ச்சி ஆகிய இனங்களால் வருவாய் கிடைக்கும். தாய் மாமனா லும், நண்பர்களாலும் நலம் விளையும்.

பாதக பலன்கள்

புதன் நீசம், பகை, பாபக்கிரகச் சேர்க்கை, பார்வை பெற்றிருந்தால் மந்த புத்தி உண்டாகும். நண்பர்களே எதிரிகள் ஆவார்கள். வியாபாரம் நஷ்டமாகும். கெட்ட வழிகளில் ஈடுபட வேண்டிவரும். நரம்புத் தளர்ச்சி ஏற்படும்.

பலன் தரும் வழிபாடுகள்

புதன் பலம் இல்லாதவர்கள், புதன் கிழமைகளில், அருகிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று, அங்கிருக்கும் நவகிரக மூர்த்திகளில் புதன் பகவானுக்கு வெண்காந்தள் மலர்களைச் சூட்டி, பச்சை வஸ்திரம் அணிவித்து, தீபாராதனை செய்யச் செய்து தரிசித்து வழிபட்டு வரலாம்.

Budhan

புதன் பகவானுக்கு பால் அன்னம் நைவேத்தியம் செய்து தானும் உண்டு, பிறருக்கும் கொடுக்கலாம். பச்சைப் பயிறு தானம் கொடுப்பதும் நல்லது.

அதேபோல், அனுதினமும் மகா விஷ்ணுவுக்கு உரிய ஸ்லோகங்களைச் சொல்லி அவரை வழிபட்டு வருவதாலும் நலம் உண்டாகும். திருவெண்காடு அகோரமூர்த்தியையும், புதனையும்  மற்றும் மதுரை சொக்கநாதரை யும் வழிபடுவது நல்லது.

6, 15, 24  தேதிகளில் பிறந்தவர்கள் :

six

விதி எண் 6-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 6-ஆக அமையப் பெற்றவர்கள், ரிஷப, துலா ராசி, லக்னக்காரர்கள், பரணி, பூரம், பூராட நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சுக்கிரனின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.  ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்ச, மூலத் திரிகோணத்தில் இருந்தால் பலம் பெற்றவர் ஆவார். சுபக் கிரகச் சேர்க்கை, சுபக் கிரகப் பார்வை பெற்று இருந்தாலும் நலம் புரிவார்.

Sukran

சாதக பலன்கள்

சுக்கிர பலம் உள்ளவர்களுக்கு மனைவியால் நலம் உண்டாகும். திருமண வாழ்க்கை நன்கு அமையும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். நல்லுணர்வுகள் உண்டாகும். அழகு அம்சம் கூடும். ஆடல், பாடல், சங்கீதம், நாடகம் போன்ற கலைத்துறைகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். கவித்துவம் உண்டாகும். அழகு மற்றும் ஆடம்பரப்  பொருட்கள் சேரும். மலர்கள், வெள்ளி, ஆடை, அணிமணிகள் லாபம் தரும். கொடுக்கல்-வாங்கல், விற்பனை மூலம் லாபம் கிடைக்கும். பசுக்களைப் போஷிப்பார் ஜாதகர். நீர் நிறைந்த இடத்துக்குச் சென்று வாழப் பிடிக்கும். தூய்மையை விரும்புவார்.

பாதக பலன்கள்

சுக்கிரன் பகை, நீசம் பெற்று, பாபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று இருப்பது குறை ஆகும். திருமண வாழ்வு பாதிக்கும். கெட்ட பெண்களின் தொடர்பும் அதனால் அவமானமும் ஏற்படும். பெண் சம்பந்தமான நோய் உண்டாகும். அழகு கெடும்.

Sukran mantra in tamil

பலன் தரும் வழிபாடுகள்

சுக்கிர பலம் இல்லாதவர்கள் வெண்தாமரை மலர்களை சுக்கிர கிரகத்துக்கும் மகாலட்சுமிக்கும் சூட்டுவது நல்லது. வெள்ளை பட்டு வஸ்திரம் அணிவிப்பதும் சிறப்பாகும். நெய் அன்னம் நைவேத்தியம் செய்து, தானும் உண்டு, பிறருக்கும் கொடுப்பது நல்லது. ஸ்ரீரங்கம், கஞ்சனூர் போன்ற திருத்தலங்களுக்குச் சென்று வழிபடுவது சிறப்பாகும். லட்சுமி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், ஸ்ரீசூக்தம் படிக்கலாம். கேட்கலாம்.

7, 16, 25  தேதிகளில் பிறந்தவர்கள் :

seven

இவர்கள் விதி எண் 7-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 7-ஆக அமையப் பெற்றவர் கள், அசுவினி, மகம், மூல  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள்.

சாதக பலன்கள்

கேது சாயா கிரகம் ஆவார். தன்னுடன் சேர்ந்த, பார்த்த, தான் இருக்கும் இடத்தின் தன்மைக்கு ஏற்ப சுப பலன்களைத் தருவார். யோக காரகத்துவம் பெற்ற கிரகத்தின் சாரத்திலோ, யோக காரகத்துவம் பெற்ற கிரகத்துடனோ சேர்ந்திருந்தால் நற்பலன்கள் கூடும். கேது ஆன்மிகக் கிரகம் ஆவார். கேதுவும் குருவும் சம்பந்தம் பெற்றிருந்தால் ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு உண்டாகும்.

Astrology ketu

தெய்வப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். த்யானம், யோகா, தவம், மற்றும் அறப்பணிகளில் நாட்டம் அதிகம் இருக்கும். சாது, சந்நியாசி, மகான், யோகி, சித்தர் ஆக முடியும். ஆசைகள் குறையும். ஞான மார்க்கத்திலும் பக்தி மார்க்கத்திலும் ஈடுபாடு அதிகரிக்கும். தான் நல்லவராக இருப்பதுடன் பிறரையும் நல்வழிப்படுத்தும் திறமை உண்டாகும்.  தாய் வழித் தந்தையால் அனுகூலம் ஏற்படும்.  மந்திர, தந்திர, யந்திர சாஸ்திரங்களில் ஈடுபாடும் அதன்மூலம் வருமானமும் கிடைக்கும். மோட்ச சாதனங்களில் ஈடுபாடு உண்டாகும்.

 பாதக பலன்கள்

கேது பலம் குறைந்திருந்தால் தாய் வழித் தாத்தாவின் ஆரோக்கியம் பாதிக்கும். கெட்ட வழிகளில் சித்து வேலைகாட்டி குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசை உண்டாகும். விஷ ஜுரம் வரும். விஷத்தால் கண்டம் ஏற்படும். உடலில் காயம்படும். பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றால் பாதிக்கப்பட நேரும். ராகு சனியைப் போலவும் கேது செவ்வாயைப் போலவும் பலன்கள் தருவார்கள்.

Rahu Kethu

 பலன் தரும் வழிபாடுகள்

கேது பலம் குறைந்தவர்கள் கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது. சிவப்பு அல்லி மலர்களை கேதுவுக்கும் பிள்ளையாருக்கும் சூட்டுவது சிறப்பாகும். பல நிறமுள்ள வஸ்திரத்தைக் கேதுவுக்கு அணிவிப்பது சிறப்பாகும். எலுமிச்சை சாதம், புளி சாதம், தேங்காய் சாதம் ஆகிய ஏதாவது ஒன்றை கேதுவுக்கும் விநாயகருக்கும் நைவேத்தியம் செய்து உண்பது நல்லது. காளஹஸ்தி, கீழ்ப்பெரும்பள்ளம், காணிப்பாக்கம், பிள்ளையார்பட்டி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபடுவது நல்லது.

8, 17, 26  தேதிகளில் பிறந்தவர்கள் :

eight

விதி எண் 8-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 8-ஆக அமையப் பெற்றவர்கள், மகர, கும்ப ராசி, லக்னக்காரர்கள், பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் சனிபகவானின் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள் ஆவார்கள். சனியானவர் ஆட்சி, உச்சம், மூலத் திரிகோணம் பெற்றிருந்தால் நலம் புரிவார். சுபக் கிரகப் பார்வையுடன் இருப்பது சிறப்பாகும். சுபக் கிரகச் சேர்க்கையும் நலம் தரும்.

Sani Baghavan

சாதக பலன்கள்

சனி பலம் உள்ளவர்கள் பொதுமக்களுக்கு நற்பணிகள் செய்து புகழ் பெறுவார்கள். தீர்க்க ஆயுள் உண்டாகும். அந்நிய, வெளிநாட்டு மொழிகளில் தேர்ச்சி பெறமுடியும். விஞ்ஞானத்தில் நாட்டம் உண்டாகும். விவசாயப் பணிகளில் ஈடுபாடு அதிகம் இருக்கும். தாதுப் பொருட்கள், திரவப்பொருட்கள், எண்ணெய் வகையறாக்கள், பூமியின் அடியிலிருந்து வெட்டி எடுக்கப்படும் பொருட்கள் மூலம் லாபம் கிடைக்கும். நல்ல வேலையாட்கள் அமைவார்கள்.

பாதக பலன்கள்

சனி நீசம், அஸ்தமனம், பகை, பாபக்கிரகப் பார்வை, சேர்க்கை பெற்று இருந்தால் பலம் குறைந்தவர் ஆவார். இதனால் ஆயுளுக்குப் பங்கம் உண்டாகும். நீண்ட கால நோய்நொடிக்கு ஆளாக வேண்டிவரும். வாயுத் தொல்லை உண்டாகும். கெட்ட பெயர் ஏற்படும். அருவருக்கத்தக்க காரியங்களில் ஈடுபட நேரும். கெட்ட பழக்கவழக்கங்கள் இருக்கும். தீய குணம் உண்டாகும். பிறருக்குத் தொல்லை தருவார் ஜாதகர். வறுமை வாட்டும். சமூக விரோதியாக நேரும்.

 பலன் தரும் வழிபாடுகள்

சனி பலம் குறைந்தவர்கள் சனிக்கிழமைகளில் சனிக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது.

sani bagavaan

மேலும், மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுவது நல்லது. கருநீல சங்கு புஷ்ப மலர்களையும், கருநீல நிற வஸ்திரத்தையும்  சனிக்கு அணிவித்து அர்ச்சனை செய்வது நல்லது. அனாதைகளுக்கும் வயோதிகர்களுக்கும் உதவி செய்வது சிறப்பாகும். திருநள்ளாறு சென்று நள தீர்த்தத்தில் நீராடி முறைப்படி வழிபடுவது நல்லது.

9, 18, 27  தேதிகளில் பிறந்தவர்கள் :

nine

விதி எண் 9-ஆக அமையப் பெற்றவர்கள், பெயர் எண் 9-ஆக அமையப் பெற்றவர்கள், மேஷ, விருச்சிக ராசி, லக்னக்காரர்கள், மிருகசீரிடம், சித்திரை, அவிட்ட  நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள்.

சாதக பலன்கள்

செவ்வாய் ஆட்சி, உச்ச, மூலத் திரிகோணம் பெற்றிருந்தால் பலம் பெற்றவர் ஆவார். சுபக் கிரகப் பார்வை, சுபக் கிரகச் சேர்க்கை பெற்றிருந்தாலும் நலம் புரிவார். செவ்வாய் பலம் உள்ளவர்களுக்கு உடல் சக்தி கூடும். துணிவு நிறைந்திருப்பார்கள்.

chevvai

செவ்வாய் பலம் பெற்ற அன்பர்கள் வீர, தீர சாகஸங் களை ஆற்றுவார்கள். தனிச்சிறப்பான அம்சங்கள் இருக்கும்.  பூமி பாக்கியம் உண்டு. உடன் பிறந்தவர்கள் இருப்பார்கள். அவர்களால் அனுகூலமும் உண்டாகும்.

அரசியல், மருத்துவம், விஞ்ஞானம், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங், அறுவை சிகிச்சை மருத்துவர், ஆயுதங்களைக் கையாளும் திறன் பெற்றவர் ஆகியோருக்கெல்லாம் செவ்வாய் பலத்தால் விசேஷமான நன்மைகள் உண்டாகும்.

பாதக பலன்கள்

செவ்வாய் நீசம் பெற்றோ, பாபக்கிரகங்களின் பார்வை, சேர்க்கை பெற்றோ இருந்தால் விபத்து ஏற்படும். உடல் பலம் குறையும். ரத்த சம்பந்தமான நோய் ஏற்படும். எதிரிகள் இருப்பர். கெட்ட காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போர்க் குணம் அமையும்.

மேலும் வீண் வழக்குகளில் சிக்கிக் கொள்ள நேரும். கடனாளி ஆவார். மனோ பயம் உண்டாகும். தீயினாலும், கூரிய ஆயுதங்களாலும், சமூக விரோதிகளாலும் பாதிப்பு உண்டாகும்.

பலன் தரும் வழிபாடுகள்

செவ்வாய் பலம் குறைந்தவர்கள் செண்பக மலர்களால் செவ்வாயையும் திருமுருகனையும் அர்ச்சிப்பது நல்லது. செந்நிற வஸ்திரத்தை செவ்வாய்க்கும் முருகனுக்கும் அணிவித்து வழிபடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எதெல்லாம் அதிஷ்டமானவை தெரியுமா ?

துவரை தானம் கொடுக்கலாம். செம்பு உலோகத்தைத் தானம் கொடுப்பதும் நல்லது. வைத்தீஸ்வரன் கோயில் சென்று அங்காரகனையும், ஸ்ரீமுத்துக்குமார சுவாமியையும் வழிபடுவது நல்லது.

English Overview:
Here we have Birthday palan in Tamil. It is also called as Pirantha en palan in Tamil or Pirantha naal palangal in Tamil or Pirantha date palangal in Tamil