திருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல்

Thirukkural athikaram 37
- Advertisement -

அதிகாரம் 37 / Chapter 37 – அவா அறுத்தல்

குறள் 361:
அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து

மு.வ விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர்.

கலைஞர் விளக்க உரை:
ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்

- Advertisement -

குறள் 362:
வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்

மு.வ விளக்க உரை:
ஒருவன் ஒன்றை விரும்புவதனால் பிறவா நிலைமையை விரும்ப வேண்டும், அது அவா அற்ற நிலையை விரும்பினால் உண்டாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பிறவாமையை எப்போது விரும்புகிறோமோ அப்போது அந்த நிலை நமக்கு வர வேண்டும். ஆசையற்று இருப்பதை விரும்பும்போதுதான் அந்த நிலை நமக்கு உண்டாகும்.

கலைஞர் விளக்க உரை:
விரும்புவதானால் பிறக்காமலே இருந்திருக்கவேண்டும் என்று ஒருவன் எண்ணுகிற அளவுக்கு ஏற்படுகிற துன்ப நிலை, ஆசைகளை ஒழிக்காவிடில் வரும்

Thiruvalluvar

குறள் 363:
வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்

மு.வ விளக்க உரை:
அவா அற்ற நிலைமை போன்ற சிறந்த செல்வம் இவ்வுலகில் இல்லை, வேறு எங்கும் அதற்க்கு நிகரான ஒன்று இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எந்தப் பொருளையும் விரும்பாமல் இருப்பது போன்ற சிறந்த செல்வம் இப்பூமியில் வேறு ஒன்று இல்லை; வான் உலகத்திலும் இதற்கு ஒப்பானது இல்லை.

கலைஞர் விளக்க உரை:
தீமை விளைவிக்கும் ஆசைகளை வேண்டாம் என்று புறக்கணிப்பதைப் போன்ற செல்வம் இங்கு எதுவுமில்லை; வேறு எங்கும் கூட அத்தகைய ஒப்பற்ற செல்வம் இல்லையென்றே கூறலாம்

குறள் 364:
தூஉய்மை யென்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்

மு.வ விளக்க உரை:
தூயநிலை என்றுக் கூறப்படுவது அவா இல்லா திருத்தலே யாகும், அவா அற்ற அத்தன்மை மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மனத்தூய்மை என்பது ஆசை இல்லாமல் இருப்பதே; ஆசை இல்லாமல் இருப்பதோ மெய்ப்பொருளை விரும்புவதால் உண்டாகும்‌.

கலைஞர் விளக்க உரை:
தூய்மை என்பது பேராசையற்ற தன்மையாகும் அத்தூய்மை வாய்மையை நாடுவோர்க்கே வாய்க்கும்

Thiruvalluvar

குறள் 365:
அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்

மு.வ விளக்க உரை:
பற்றற்றவர் என்றுக் கூறப்படுவோர் அவா அற்றவரே, அவா அறாத மற்றவர் அவ்வளவாகப் பற்று அற்றவர் அல்லர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆசை இல்லாதவரே எதுவும் இல்லாதவர்; மற்றவரோ முழுவதும் இல்லாதவர் ஆகார்.

கலைஞர் விளக்க உரை:
ஆசையனைத்தும் விட்டவரே துறவி எனப்படுவார் முற்றும் துறவாதவர், தூய துறவியாக மாட்டார்

குறள் 366:
அஞ்சுவ தோரும் அறனே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா

மு.வ விளக்க உரை:
ஒருவன் அவாவிற்கு அஞ்சி வாழ்வதே அறம், ஏன் எனில் ஒருவனைச் சோர்வு கண்டுகொடுத்து வஞ்சிப்பது அவாவே.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒருவனை வஞ்சித்துக் கெடுப்பது ஆசையே. அதனால் ஆசை உண்டாகி விடாமல் அஞ்சி வாழ்வதே அறம்.

கலைஞர் விளக்க உரை:
ஒருவரை வஞ்சித்துக் கெடுப்பதற்குக் காரணமாக இருப்பது ஆசையேயாகும் எனவே, ஆசைக்கு அடிமையாகக் கூடாது என்ற அச்சத்துடன் வாழ வேண்டும்

Thiruvalluvar

குறள் 367:
அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்

மு.வ விளக்க உரை:
ஒருவன் ஆசையை முழுதும் ஒழித்தால், அவன் கெடாமல் வாழ்வதற்கு உரிய நல்ல செயல் அவன் விரும்புமாறு வாய்க்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆசையை முழுவதுமாக அறுத்து ஒழித்து விட்டால், தான் விரும்பும் வண்ணமே அழியாமல் வாழ்வதற்கான செயல் உண்டாகும்.

கலைஞர் விளக்க உரை:
கெடாமல் வாழ்வதற்குரிய நிலை, ஒருவன் விரும்புமாறு வாய்ப்பதற்கு, அவன் பேராசைக் குணத்தை முற்றிலும் ஒழித்தவனாக இருக்க வேண்டும்

குறள் 368:
அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்

மு.வ விளக்க உரை:
அவா இல்லாதவர்க்குத் துன்பம் இல்லையாகும், அவா இருந்தால் எல்லாத் துன்பங்களும் மேலும் மேலும் ஒழியாமல் வரும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆசை இல்லாதவர்க்குத் துன்பம் வராது; இருப்பவர்க்கோ இடைவிடாமல், தொடர்ந்து துன்பம் வரும்.

கலைஞர் விளக்க உரை:
ஆசை இல்லாதவர்களுக்குத் துன்பம் இல்லை ஆசை உண்டானால், அதைத் தொடர்ந்து துன்பமும் மேலும் மேலும் வந்து கொண்டிருக்கும்

Thiruvalluvar

குறள் 369:
இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்

மு.வ விளக்க உரை:
அவா என்று சொல்லப்படுகின்ற துன்பங்களுள் பொல்லாதத் துன்பம் கெடுமானால் இவ் வுலகில் இன்பம் இடையறாமல் வாய்க்கும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஆசை எனப்படும் பெருந்துன்பம் இல்லாது போனால், இன்பம் இடைவிடாமல் வரும்.

கலைஞர் விளக்க உரை:
பெருந்துன்பம் தரக்கூடிய பேராசை ஒழிந்தால் வாழ்வில் இன்பம் விடாமல் தொடரும்

குறள் 370:
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்

மு.வ விளக்க உரை:
ஒருபோதும் நிரம்பாத தன்மை உடைய அவாவை ஒழித்தால் ஒழித்த அந்நிலையே எப்போதும் மாறாதிருக்கும் இன்ப வாழ்வைத் தரும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
ஒரு காலமும் முடிவு பெறாத குணத்தை உடைய ஆ‌சையை விட்டுவிட்டால், அதுவே ஒருவனுக்கு நிலைத்து வாழும் இயல்பைக் கொடுக்கும்.

கலைஞர் விளக்க உரை:
இயல்பாகவே எழும் அடங்காத பேராசையை அகற்றி வாழும் நிலை, நீங்காத இன்பத்தை இயல்பாகவே தரக்கூடியதாகும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 37 – Thirukkural Ava aaruthal in Tamil with meaning or Thirukkural Ava aaruthal adhikaram in Tamil. It is also called as Thirukkural Ava aaruthal lyrics or Thirukkural Ava aaruthal kural in Tamil with meaning.

- Advertisement -