திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல்

Thirukkural athikaram 118
- Advertisement -

அதிகாரம் 118 / Chapter 118 – கண் விதுப்பழிதல்

குறள் 1171:
கண்டாம் கலுழ்வ தெவன்கொலோ தண்டாநோய்
தாங்காட்ட யாங்கண் டது

மு.வ விளக்க உரை:
தீராத இக்காமநோய், கண்கள் காட்ட யாம் கண்டதால் விளைந்தது; அவ்வாறிருக்க, காட்டிய கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தணியாத காதல் துன்பத்தை நான் அறிந்ததே இந்தக் கண்கள் எனக்கு அவரைக் காட்டியதால்தானே? இப்போது அவரைக் காட்டு என என்னிடம் அழுவது எதற்கு?

கலைஞர் விளக்க உரை:
கண்கள் செய்த குற்றத்தால்தானே காதல் நோய் ஏற்பட்டது? அதே கண்கள் அந்தக் காதலரைக் காட்டுமாறு கேட்டு அழுவது ஏன்?

- Advertisement -

குறள் 1172:
தெரிந்துணரா நோக்கிய உண்கண் பரிந்துணராப்
பைதல் உழப்ப தெவன்

மு.வ விளக்க உரை:
ஆராய்ந்து உணராமல் அன்று நோக்கிக் காதல் கொண்ட கண்கள், இன்று அன்பு கொண்டு உணராமல் துன்பத்தால் வருந்துவது ஏன்?

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வரப்போவதை அறியாமல் அன்று அவரை எனக்குக் காட்டிய என் மை தீட்டப்பட்ட கண்கள், இன்று இது நம்மால் வந்தது; நாம்தாம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணாமல் துன்பப்படுகின்றனவே எதற்காக?

கலைஞர் விளக்க உரை:
விளைவுகளை உணராமல் மயங்கி நோக்கிய மைவிழிகள், இன்று, காதலரைப் பிரிந்ததால் துன்பமுறுவது தம்மால் தான் என அறியாமல் தவிப்பது ஏன்?

Thiruvalluvar

குறள் 1173:
கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும்
இதுநகத் தக்க துடைத்து

மு.வ விளக்க உரை:
அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

கலைஞர் விளக்க உரை:
தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

குறள் 1174:
பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா
உய்வில்நோய் என்கண் நிறுத்து

மு.வ விளக்க உரை:
என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

கலைஞர் விளக்க உரை:
தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன

Thiruvalluvar

குறள் 1175:
படலாற்றா பைதல் உழக்கும் கடலாற்றக்
காமநோய் செய்தவென் கண்

மு.வ விளக்க உரை:
அன்று கடலும் தாங்கமுடியாத காமநோயை உண்டாக்கிய என் கண்கள், இன்று உறங்க முடியாமல் துன்பத்தால் வருந்துகின்றன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
கடலைவிடப் பெரிதாகும் காதல் துன்பத்தை எனக்குத் தந்த கண்கள், தாமும் தூங்காமல், துன்பத்தையும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றன.

கலைஞர் விளக்க உரை:
கடல் கொள்ளாத அளவுக்குக் காதல் நோய் உருவாகக் காரணமாக இருந்த என் கண்கள், இப்போது தூங்க முடியாமல் துன்பத்தால் வாடுகின்றன

குறள் 1176:
ஓஒ இனிதே எமக்கிந் நோய் செய்தகண்
தாஅம் இதற்பட் டது

மு.வ விளக்க உரை:
எமக்கு இந்தக் காமநோயைஉண்டாக்கிய கண்கள், தாமும் இத்தகைய துன்பத்தைப்பட்டு வருந்துவது மிகவும் நல்லதே!

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எனக்கு இந்தக் காதல் துன்பத்தைத் தந்த கண்கள் தாமும் தூங்காமல் அழுவது நன்றாகத்தான் இருக்கிறது.

கலைஞர் விளக்க உரை:
ஓ! என் காதல் நோய்க்குக் காரணமான கண்கள், என்னைப் போலவே வாடி வருந்துகின்றன. இது எனக்கு மகிழ்ச்சியே!

Thiruvalluvar

குறள் 1177:
உழந்துழந் துள்நீர் அறுக விழைந்திழைந்து
வேண்டி அவர்க்கண்ட கண்

மு.வ விளக்க உரை:
அன்று விரும்பி நெகிழ்ந்து காதலரைக் கண்ட கண்கள் இன்று உறக்கமில்லாத துன்பத்தால் வருந்தி வருந்திக் கண்ணீரும் அற்றுப் போகட்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
விரும்பி மகிழ்ந்து விடாமல் அன்று அவரைக் கண்ட கண்களின் உள் இருக்கும் கண்ணீர் எல்லாம் இன்று வருந்தி வருந்தி வற்றிப் போகட்டும்!

கலைஞர் விளக்க உரை:
அன்று, இழைந்து குழைந்து ஆசையுடன் அவரைக் கண்ட கண்களே! இன்று பிரிந்து சென்றுள்ள அவரை நினைத்துக் தூங்காமலும், துளிக் கண்ணீரும் அற்றுப்போகும் நிலையிலும் துன்பப்படுங்கள்

குறள் 1178:
பேணாது பெட்டார் உளர்மன்னோ மற்றவர்க்
காணா தமைவில கண்

மு.வ விளக்க உரை:
உள்ளத்தால் விரும்பாமலே சொல்லளவில் விரும்பிப் பழகியவர் ஒருவர் இருக்கின்றார்; அவரைக் காணாமல் கண்கள் அமைதியுறவில்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
உள்ளத்தால் என்னை விரும்பாமல் வாயால் மட்டுமே விரும்பியவர் நன்றாக இருக்கட்டும்; ஆனால், அவரைக் காண முடியாமல் என் கண்கள் தூங்காமல் இருக்கின்றன.!

கலைஞர் விளக்க உரை:
என்னை அரவணைக்கும் எண்ணமின்றிக் காதலித்த ஒருவர் இருக்கின்றனர்; அவரைக் காணாமல் என் கண்களுக்கு அமைதியில்லையே!

Thiruvalluvar

குறள் 1179:
வாராக்கால் துஞ்சா வரின்துஞ்சா ஆயிடை
ஆரஞர் உற்றன கண்

மு.வ விளக்க உரை:
காதலர் வாராவிட்டால் தூங்குவதில்லை; வந்தாலும் தூங்குவதில்லை; இவற்றுக்கி‌டையே என் கண்கள் மிக்க துன்பத்தை அடைந்தன.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அவர் வராதபோது வரவை எதிர்பார்த்துத் தூங்குவதில்லை. வந்தபோதோ, எப்போது பிரிவாரோ என்று அஞ்சி் தூங்குவதில்லை; இரண்டு வழியிலும் என் கண்களுக்குத் தூங்க முடியாத துன்பந்தான்.

கலைஞர் விளக்க உரை:
இன்னும் வரவில்லையே என்பதாலும் தூங்குவதில்லை; வந்துவிட்டாலும் பிறகு தூங்குவதில்லை இப்படியொரு துன்பத்தை அனுபவிப்பவை காதலர்களின் கண்களாகத் தானே இருக்க முடியும்

குறள் 1180:
மறைபெறல் ஊராhக் கரிதன்றால் எம்போல்
அறைபறை கண்ணார் அகத்து

மு.வ விளக்க உரை:
அறையப்படும் பறைபோல் துன்பத்தை வெளிப்படுத்தும் கண்களை உடைய எம்மைப் போன்றவரிடத்தில் மறைபொருளான செய்தியை அறிதல் ஊரார்க்கு அரிது அன்று.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அடிக்கப்படும் பறைபோன்று மனத்துள் இருப்பதை அழுது வெளியே காட்டிவிடும் எம்போன்ற பெண்களின் ரகசியத்தை அறிந்து கொள்வது இவ்வூரில் இருப்பவர்க்கு எளிது.

கலைஞர் விளக்க உரை:
காதல் வேதனையைப் பறைசாற்றிக் காட்டிக் கொடுக்க எம் கண்களேயிருக்கும்போது, யாம் மறைப்பதை அறிந்து கொள்வது ஊரார்க்குக் கடினமல்ல

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல்

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 118 – Thirukkural Kan Vithuppazhithal in Tamil with meaning or Thirukkural Kan Vithuppazhithal adhikaram in Tamil. It is also called as Thirukkural Kan Vithuppazhithal lyrics or Thirukkural Kan Vithuppazhithal kural in Tamil with meaning.

- Advertisement -