திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல்

Thirukkural athikaram 44
- Advertisement -

அதிகாரம் 44 / Chapter 44 – குற்றங்கடிதல்

குறள் 431:
செருக்குஞ் சினமுஞ் சிறுமையும் இல்லார்
பெருக்கம் பெருமித நீர்த்து

மு.வ விளக்க உரை:
செருக்கும் சினமும் காமமும் ஆகிய இந்தக் குற்றங்கள் இல்லாதவனுடைய வாழ்வில் காணும் பெருக்கம் மேம்பாடு உடையதாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தான் என்னும் அகங்காரம், கோபம், பெண்ணாசை என்னும் சிறுமை இவை இல்லாத ஆட்சியாளர்களின் செல்வம் மேன்மையானது.

கலைஞர் விளக்க உரை:
இறுமாப்பு, ஆத்திரம், இழிவான நடத்தை இவைகள் இல்லாதவர்களுடைய செல்வாக்குதான் மதிக்கத் தக்கதாகும்

- Advertisement -

குறள் 432:
இவறலும் மாண்பிறந்த மானமும் மாணா
உவகையும் ஏதம் இறைக்கு

மு.வ விளக்க உரை:
பொருள் கொடாத தன்மையும் மாட்சியில்லாத மானமும், தகுதியற்ற மகிழ்ச்சியும் தலைவனாக இருப்பனுக்கு குற்றங்களாகும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
நியாயமாகத் தேவைப்படுவோர்க்குத் தேவையானவற்றைக் கொடாதிருப்பது, பெரியோர் என்று தெரிந்தும் தம் பதவிப் பெருமை கருதி வணங்காதிருப்பது, தீயவற்றில் மகிழ்வது – இவை ஆட்சியாளர்க்குக் குற்றங்களாம்.

கலைஞர் விளக்க உரை:
மனத்தில் பேராசை, மான உணர்வில் ஊனம், மாசுபடியும் செயல்களில் மகிழ்ச்சி ஆகியவை தலைமைக்குரிய தகுதிக்கே பெருங்கேடுகளாகும்

Thiruvalluvar

குறள் 433:
தினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்
கொள்வர் பழிநாணு வார்

மு.வ விளக்க உரை:
பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
பழிபாவங்களுக்கு அஞ்சி, நானும் பெரியோர், தினை என மிகச்சிறிய அளவே குற்றம் வந்தாலும், அதனைப் பனை என மிகப்பெரிய அளவாகக் கொள்வர்.

கலைஞர் விளக்க உரை:
பழிக்கு நாணுகின்றவர்கள், தினையளவு குற்றத்தையும் பனையளவாகக் கருதி, அதைச் செய்யாமல், தங்களைக் காத்துக் கொள்வார்கள்

குறள் 434:
குற்றமே காக்க பொருளாகக் குற்றமே
அற்றந் தரூஉம் பகை

மு.வ விளக்க உரை:
குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அரசிற்கு அழிவுதரும் பகை மனக்குற்றந்தான். அதனால் அக்குற்றம் தன்னிடம் வராமல் காப்பதையே பொருளாகக் கொள்ள வேண்டும்.

கலைஞர் விளக்க உரை:
குற்றம் புரிவது அழிவை உண்டாக்கக் கூடிய பகையாக மாறுவதால் குற்றம் புரியாமல் இருப்பது என்பதையே நோக்கமாகக் கொள்ள வேண்டும்

Thiruvalluvar

குறள் 435:
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

மு.வ விளக்க உரை:
குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தனக்கு ஒரு குற்றம் வருவதற்கு முன்பே வராமல் காத்துக் கொள்ளாத அரசு, நெருப்பிற்கு முன் வைக்கப்பட்ட வைக்கோல் போல அழிந்துபோகும்.

கலைஞர் விளக்க உரை:
முன்கூட்டியே எச்சரிக்கையாக இருந்து ஒரு தவறான செயலைத் தவிர்த்துக் கொள்ளாதவருடைய வாழ்க்கையானது நெருப்பின் முன்னால் உள்ள வைக்கோல் போர் போலக் கருகிவிடும்

குறள் 436:
தன்குற்ற நீக்கிப் பிறர்குற்றங் காண்கிற்பின்
என்குற்ற மாகும் இறைக்கு

மு.வ விளக்க உரை:
முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கி பிறகு பிறருடையக் குற்றத்தை
ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்றமாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முதலில் தன் குற்றத்தைக் கண்டு விலக்கிப் பிறகு அடுத்தவர் குற்றத்தைக் காணும் ஆற்றல் மிக்க அரசிற்குக் குற்றம் ஏதும் வராது!

கலைஞர் விளக்க உரை:
முதலில் தனக்குள்ள குறையை நீக்கிக் கொண்டு அதன் பின்னர் பிறர் குறையைக் கண்டு சொல்லும் தலைவனுக்கு என்ன குறை நேரும்?

Thiruvalluvar

குறள் 437:
செயற்பால செய்யா திவறியான் செல்வம்
உயற்பால தன்றிக் கெடும்

மு.வ விளக்க உரை:
செய்யத்தக்க நன்மைகளைச் செய்யாமல் பொருளைச் சேர்த்து வைத்திருப்பவனுடைய செல்வம், உய்யுந் தன்மை இல்லாமல் அழியும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செல்வத்தால் தனக்குச் செய்து கொள்ள வேண்டியவற்றைப் பொருள்மீது கொண்ட பற்றினால் செய்யாமல், கஞ்சனாய் வாழும் ஆட்சியாளனின் செல்வம் வீணே கெட்டு, அழிந்து போகும்.

கலைஞர் விளக்க உரை:
நற்பணிகளைச் செய்யாமல் சேமித்து வைக்கப்படும் கருமியின் செல்வம் பயன் ஏதுமின்றிப் பாழாகிவிடும்

குறள் 438:
பற்றுள்ள மென்னும் இவறன்மை எற்றுள்ளும்
எண்ணப் படுவதொன் றன்று

மு.வ விளக்க உரை:
பொருளினிடத்தில் பற்றுக் கொள்ளும் உள்ளமாகிய ஈயாத்தன்மை, குற்றம் எதனோடும் சேர்ந்து எண்ணத்தகாத ஒரு தனிக் குற்றமாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
செலவிட வேண்டியவற்றிற்குச் செலவிடாமல் செல்வத்தின் மீது ஆசை கொண்ட கஞ்ச மனத்தைப் பெற்றிருப்பது குற்றங்கள் எல்லாவற்றிலும் கொடிய குற்றமாகும்.

கலைஞர் விளக்க உரை:
எல்லாக் குற்றங்களையும்விடத் தனிப்பெருங் குற்றமாகக் கருதப்படுவது பொருள் சேர்ப்பதில் பற்றுக்கொண்டு எவருக்கும் எதுவும் ஈயாமல் வாழ்வதுதான்

Thiruvalluvar

குறள் 439:
வியவற்க எஞ்ஞான்றுந் தன்னை நயவற்க
நன்றி பயவா வினை

மு.வ விளக்க உரை:
எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
எவ்வளவு பெரிதாக வளர்ந்தாலும் அகங்காரம் கொண்டு பெரிதாகப் பேசாதே; நாட்டுக்கும் ஆட்சிக்கும் நன்மை தராத செயல்களைச் செய்ய விரும்பாதே.

கலைஞர் விளக்க உரை:
எந்தவொரு காலகட்டத்திலும் தன்னைத்தானே உயர்வாக எண்ணிடும் தற்பெருமைகொண்டு நன்மை தராத செயல்களில் ஈடுபடக் கூடாது

குறள் 440:
காதல காதல் அறியாமை உய்க்கிற்பின்
ஏதில ஏதிலார் நூல்

மு.வ விளக்க உரை:
தன் விருப்பம் பிறர்க்கு தெரியாதபடி விருப்பமான வற்றை நுகர வல்லவனானால், பகைவர் தன்னை வஞ்சிப்பதற்காகச் செய்யும் சூழ்ச்சிகள் பலிக்காமல் போகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தான் செய்ய எண்ணியவற்றைப் பிறர் முன்னதாகவே அறிந்துவிடாதபடி காத்தால், அவனை அழிக்க எண்ணும் பகைவர் எண்ணம் பழுதுபடும்.

கலைஞர் விளக்க உரை:
தமது விருப்பத்தைப் பகைவர் அறிந்து கொள்ள முடியாமல் நிறைவேற்றுபவரிடம் அந்தப் பகைவரின் எண்ணம் பலிக்காமற் போய்விடும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 44 – Thirukkural Kuttram kadithal in Tamil with meaning or Thirukkural Kuttram kadithal adhikaram in Tamil. It is also called as Thirukkural Kuttram kadithal lyrics or Thirukkural Kuttram kadithal kural in Tamil with meaning.

- Advertisement -