திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல்

Thirukkural athikaram 45
- Advertisement -

அதிகாரம் 45 / Chapter 45 – பெரியாரைத் துணைக்கோடல்

குறள் 441:
அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறனறிந்து தேர்ந்து கொளல்

மு.வ விளக்க உரை:
அறம் உணர்ந்தவராய்த் தன்னை விட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறத்தின் நுண்மையை அறிந்து, குறிப்பிட்ட துறையிலும் வளர்ந்த அறிவுடையவரின் நட்பை, அதன் அருமையையும், அதைப் பெறும் திறத்தையும் அறிந்து பெறுக.

கலைஞர் விளக்க உரை:
அறமுணர்ந்த மூதறிஞர்களின் நட்பைப் பெறும் வகை அறிந்து, அதனைத் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்

- Advertisement -

குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை முற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்

மு.வ விளக்க உரை:
வந்துள்ள துன்பத்தை நீக்கி, இனித் துன்பம் வராதபடி முன்னதாகவே காக்கவல்ல தன்மையுடையவரைப் போற்றி நட்புக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சாலமன் பாப்பையா விளக்க உரை:
வந்த துன்பங்களைப் போக்கும் வழி அறிந்து போக்கி, அவை திரும்பவும் வராமல் முன்னதாகவே காக்கும் ஆற்றல் மிக்கவரை, அவருக்கு வேண்டியதைச் செய்து, துணையாகப் பெறுக.

கலைஞர் விளக்க உரை:
வந்துள்ள துன்பத்தைப் போக்கி, மேலும் துன்பம் நேராமல் காக்கவல்ல பெரியோர்களைத் துணையாகக் கொள்ள வேண்டும்

Thiruvalluvar

குறள் 443:
அரியவற்று ளெல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்

மு.வ விளக்க உரை:
பெரியாரைப் போற்றி தமக்குச் சுற்றத்தாராக்கிக் கொள்ளுதல், பெறத்தக்க அரிய பேறுகள் எல்லாவற்றிலும் அருமையானதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
துறைப் பெரியவர்களுக்கு அவர் விரும்புகின்றவற்றைச் செய்து, அவரைத் தமக்கு உரியவராகச் செய்து கொள்வது அரிய பேறுகளுள் எல்லாம் அரிது.

கலைஞர் விளக்க உரை:
பெரியவர்களைப் போற்றிப் பாராட்டி அவர்களுடன் உறவாடுதல் எல்லாப் பேறுகளையும் விடப் பெரும் பேறாகும்

குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையு ளெல்லாந் தலை

மு.வ விளக்க உரை:
தம்மைவிட (அறிவு முதலியவற்றால் ) பெரியவர் தமக்குச் சுற்றத்தராகுமாறு நடத்தல், வல்லமை எல்லாவற்றிலும் சிறந்ததாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
அறிவு முதலியவற்றால் தம்மைக் காட்டிலும் சிறந்த துறை அறிவுடையவரைத் தமக்கு உரியவராகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பது, வலிமையுள் எல்லாம் முதன்மை ஆனதாகும்.

கலைஞர் விளக்க உரை:
அறிவு ஆற்றல் ஆகியவற்றில் தம்மைக் காட்டிலும் சிறந்த பெரியவராய் இருப்பவரோடு உறவுகொண்டு அவர்வழி நடப்பது மிகப்பெரும் வலிமையாக அமையும்

Thiruvalluvar

குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்

மு.வ விளக்க உரை:
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் அறிஞரையே உலகம் கண்ணாகக் கொண்டு நடத்தலால், மன்னவனும் அத்தகையாரைக் ஆராய்ந்து நட்புக்கொள்ள வேண்டும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தன்னைச் சூழ இருப்பவரைக் கண்ணாகக் கொண்டு அரசு இயங்குவதால் அப்படியே சூழும் துறைப் பெரியவரையே துணையாகக் கொள்க.

கலைஞர் விளக்க உரை:
கண்ணாக இருந்து எதனையும் கண்டறிந்து கூறும் அறிஞர் பெருமக்களைச் சூழ வைத்துக் கொண்டிருப்பதே ஆட்சியாளர்க்கு நன்மை பயக்கும்

குறள் 446:
தக்கா ரினத்தனாய்த் தானொழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்

மு.வ விளக்க உரை:
தக்க பெரியாரின் கூட்டத்தில் உள்ளனவாய் நடக்கவல்ல ஒருவனுக்கு,அவனுடைய பகைவர் செய்யக்கூடியத் தீங்கு ஒன்றும் இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தகுதி மிக்க துறைப்பெரியவரை நட்பாகக் கொண்டு, அவர் காட்டும் வழியில் நடப்பவரைப் பகைவர் ஏதும் செய்ய இயலாது.

கலைஞர் விளக்க உரை:
அறிவும், ஆற்றலும் கொண்ட ஒருவன், தன்னைச் சூழவும் அத்தகையோரையே கொண்டிருந்தால் பகைவர்களால் எந்தத் தீங்கையும் விளைவிக்க முடியாது

Thiruvalluvar

குறள் 447:
இடிக்குந் துணையாரை யாள்வாரை யாரே
கெடுக்குந் தகைமை யவர்

மு.வ விளக்க உரை:
கடிந்து அறிவுரைக் கூறவல்ல பெரியாரின் துணை கொண்டு நடப்பவரை கெடுக்கும் ஆற்றல் உள்ளவர் எவர் இருக்கின்றனர்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீயன கண்டபோது நெருங்கிச் சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொண்டு செயல்படுபவரைக் கெடுக்கக் கூடியவர் எவர்?

கலைஞர் விளக்க உரை:
இடித்துரைத்து நல்வழி காட்டுபவரின் துணையைப் பெற்று நடப்பவர்களைக் கெடுக்கும் ஆற்றல் யாருக்கு உண்டு?

குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும்

மு.வ விளக்க உரை:
கடிந்து அறிவுரைக் கூறும் பெரியாரின் துணை இல்லாதக் காவலற்ற அரசன், தன்னைக் கெடுக்ககும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
தீயன கண்டபோது கடிந்து சொல்லும் துறைப் பெரியவரைத் துணையாகக் கொள்ளாத பாதுகாப்பு அற்ற அரசு, அதைக் கெடுப்பார் இல்லாமலேயே தானாகவே கெடும்.

கலைஞர் விளக்க உரை:
குறையை உணர்த்துவோர் இல்லாத அரசு தானாகவே கெடும்

Thiruvalluvar

குறள் 449:
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை

மு.வ விளக்க உரை:
முதல் இல்லாத வணிகர்க்கு அதனால் வரும் ஊதியம் இல்லை, அதுபோல் தம்மைத் தாங்கிக் காப்பாற்றும் துணை இல்லாதவர்க்கு நிலைபேறு இல்லை.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
முதல் இல்லாதவர்களுக்கு அதனால் வரும் லாபம் இல்லை, அதுபோலவே தன்னைத் தாங்கும் துறைப் பெரியவர் துணை இல்லாத அரசுக்கு அவர்களால் வரும் பயனும் இல்லை.

கலைஞர் விளக்க உரை:
கட்டடத்தைத் தாங்கும் தூண் போலத் தம்மைத் தாங்கி நிற்கக் கூடிய துணையில்லாதவர்களின் நிலை, முதலீடு செய்யாத வாணிபத்தில் வருவாய் இல்லாத நிலையைப் போன்றதேயாகும்

குறள் 450:
பல்லார் பகைகொளலிற் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

மு.வ விளக்க உரை:
நல்லவராகிய பெரியாரின் தொடர்பைக் கைவிடுதல் பலருடைய பகையைத் தேடிக்கொள்வதைவிடப் பத்து மடங்கு தீமை உடையதாகும்.

சாலமன் பாப்பையா விளக்க உரை:
துறைப் பெரியவர் நட்பைப் பெறாமல் அதை விட்டுவிடுவது, தனியனாய் நின்று, பலரோடும் பகை கொள்வதைக் காட்டிலும், பல பத்து மடங்கு தீமை ஆகும்.

கலைஞர் விளக்க உரை:
நல்லவர்களின் தொடர்பைக் கைவிடுவது என்பது பலருடைய பகையைத் தேடிக் கொள்வதை விடக் கேடு விளைவிக்கக் கூடியதாகும்

இதையும் படிக்கலாமே:
திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி

திருக்குறள் அனைத்தையும் இயற்றியவர் திருவள்ளுவர்.

Here we have Thirukkural adhikaram 45 – Thirukkural Periyarai thunai kodal in Tamil with meaning or Thirukkural Periyarai thunai kodal adhikaram in Tamil. It is also called as Thirukkural Periyarai thunai kodal lyrics or Thirukkural Periyarai thunai kodal kural in Tamil with meaning.

- Advertisement -