துவரம் பருப்பு ஸ்வீட் | Thuvaram paruppu sweet recipe Tamil
ரேஷன் கடையில் கொடுக்கும் துவரம் பருப்பு அவ்வளவு சீக்கிரம் காலியாகவில்லை, ஸ்டாக் வைத்திருக்கிறீர்கள் என்றால் இது போல சிம்பிளான ஸ்வீட் ரெசிபி செய்து பார்க்கலாம். துவரம் பருப்பில் ஸ்வீட்டா? என்று நீங்கள் ஆச்சரியப்படலாம். ரொம்பவே டேஸ்ட்டியான கொஞ்சம் கூட துவரம் பருப்பு வாசம் தெரியாத அளவிற்கு இருக்கக்கூடிய இந்த துவரம் பருப்பு ஸ்வீட் ரெசிபி எப்படி நாமும் தயாரிக்கலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
துவரம் பருப்பு – ஒரு கப், ஏலக்காய் – 3, பொடித்த வெல்லம் – ஒரு கப், தண்ணீர் – அரை கப், நெய் – 2 டேபிள் ஸ்பூன், நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை – ஆப்ஷனல்.
செய்முறை
முதலில் ஒரு கப் அளவிற்கு துவரம் பருப்பை நன்கு சுத்தம் செய்து நாலைந்து முறை தண்ணீர் விட்டு கழுவி சுத்தமான தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற விட்டு விடுங்கள். நன்கு ஊறியதும் தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள், அதில் ஊறிய இந்த துவரம் பருப்பை சேர்த்து இதனுடன் மூன்று ஏலக்காய் போட்டு மாவு போல அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். தண்ணீர் எதுவும் சேர்த்து அரைக்க வேண்டாம். அதில் இருக்கும் ஈரப்பதமே போதுமானது.
கெட்டியான இந்த மாவை தட்டை தட்டையாக தட்டி இட்லி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடம் ஆவியில் நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்வோம். இட்லி போல எல்லாமே வெந்திருக்கும். பிறகு அதனை உதிர்த்து விட்டு வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லம் ஒரு கப் அளவிற்கு சேர்த்து, அரை கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். பாகு காய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை, தண்ணீர் கொதித்தால் போதும்.
உதிர்த்து வைத்துள்ள துவரம்பருப்பை மீண்டும் ஒருமுறை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள். அப்போது தான் பவுடர் போல கொரகொரன்னு கிடைக்கும். இப்போது அடுப்பில் ஒரு பேன் வைத்து அதில் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டுக் கொள்ளுங்கள். பின்னர் நீங்கள் அரைத்த இந்த துவரம் பருப்பை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.
ரெண்டு நிமிடம் நெய்யில் பிரட்டி எடுக்கும் பொழுது துவரம் பருப்பின் வாசம் முற்றிலும் நீங்கிவிடும். பிறகு நீங்கள் காய்ச்சி வைத்துள்ள வெல்ல பாகை ஒரு பில்டரில் வடிகட்டி இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். மாவு லேசாக இளக ஆரம்பிக்கும். ஒரு ஐந்து நிமிடம் நன்கு இதிலேயே பிரட்டி விடுங்கள். அதன் பிறகு மீண்டும் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு நெய் விட்டு பிரட்டுங்கள்.
இதையும் படிக்கலாமே:
ஸ்டார் ஹோட்டலுக்கு போனா கூட இப்படி ஒரு உருளைக்கிழங்கு வருவல் கிடைக்கவே கிடைக்காது. முற்றிலும் வித்தியாசமான பெல்லாரி உருளைக்கிழங்கு வறுவல் ரெசிபி இதோ உங்களுக்காக.
மாவு திரண்டு அல்வா பதம் போல கெட்டியாக வந்ததும், நெய் தடவிய ஒரு பாத்திரத்தில் கொட்டி சமன் செய்து ஆறிய பின்பு வில்லைகள் போட்டு விடலாம். இதில் ஆப்ஷனல் ஆக நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி பருப்புகளையும் நீங்கள் சேர்க்கலாம். ரொம்பவே ஈசியாக செய்யக்கூடிய இந்த துவரம் பருப்பு ஸ்வீட் ரெசிபி இதே மாதிரி நீங்களும் ட்ரை பண்ணி அசத்துங்க.