10 நிமிடத்தில் உதிரி உதிரியான பிரியாணி சுவையில் இருக்கும் இந்த தக்காளி சாதத்தை நீங்களும் செய்து பார்க்கலாமே!

tomato-rice-recipe
- Advertisement -

தக்காளி சாதம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது? அதுவும் பாஸ்மதி அரிசியில் பிரியாணி சுவையில் தக்காளி சாதம் செய்து கொடுத்தால் தட்டு மொத்தமும் ஒரு பருக்கை கூட இல்லாமல் காலியாகி விட்டிருக்கும். இதை எல்லாருமே விரும்பி சாப்பிடுவார்கள். நேரமில்லாத அவசரமான நேரத்தில் குழையாமல் குக்கரில் பத்தே நிமிடத்தில் உதிரி உதிரியான தக்காளி பிரியாணி எளிதாக நாமும் எப்படி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

தக்காளி

தக்காளி சாதம் செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி – ஒரு ஆழாக்கு, சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், பசு நெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கிராம்பு – 4, பட்டை – 2, ஏலக்காய் – 2, அன்னாசிப்பூ – 1, கல்பாசி – 1, சோம்பு – ஒரு ஸ்பூன், பெரிய வெங்காயம் – 2, தக்காளி – 3, தக்காளி சாறு – 2 டீஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், பச்சை மிளகாய் – 2, கொத்தமல்லித்தழை – சிறிதளவு, புதினா – ஒரு கைப்பிடி, மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், காஷ்மீரி மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

- Advertisement -

தக்காளி சாதம் செய்முறை விளக்கம்:
முதலில் ஒரு ஆழாக்கு அளவிற்கு பாஸ்மதி அரிசியை எடுத்து நன்கு கழுவி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு குக்கரை வையுங்கள். அதில் தேவையான அளவிற்கு நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து காய விடுங்கள். இவை நன்கு காய்ந்து வந்ததும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், சோம்பு, கல்பாசி, அண்ணாச்சி பூ ஆகிய மசாலா பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும். பின்னர் வெங்காயத்தை தோல் உரித்து நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் நன்கு கண்ணாடி பதம் வரும் வரை வதக்க வேண்டும்.

kushka

இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்க வேண்டும். இவற்றின் பச்சை வாசம் போனதும் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி துண்டுகளை சேர்த்து அதனுடன் பச்சை மிளகாய்களை முழுதாக அப்படியே சேர்த்து நன்கு வதக்க வேண்டும். தக்காளி மசிய வதங்கியதும் மல்லி தழை மற்றும் புதினா இலைகளை நன்கு அலசி சுத்தம் செய்து இவற்றுடன் சேர்த்து சுருங்க வதக்க வேண்டும். பின்னர் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், கரம் மசாலா ஆகிய மசாலாக்களை சேர்க்க வேண்டும்.

- Advertisement -

காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் பிரியாணி கலரில் நன்கு தூக்கலாக நிறத்தைக் கொடுக்கும் எனவே இவற்றை தவிர்க்க வேண்டாம். பின்னர் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து எல்லாமே ஒன்றுடன் ஒன்று கலந்து கிரேவி போல மசிய வதக்க வேண்டும். ஊற வைத்துள்ள பாஸ்மதி அரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி இதனுடன் சேர்த்து ஒருமுறை உடையாமல் லேசாக கலந்து விட்டு, ஒன்றரை ஆழாக்கு அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஆழாக்கு பாசுமதி அரிசிக்கு ஒன்றரை ஆழாக்கு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.

cooker-tomato-rice

பின்னர் குக்கரை ஒரு தட்டு போட்டு மூடி நன்கு கொதிக்க விடுங்கள். அரிசி கொதித்து வந்ததும் குக்கரின் மூடி போட்டு மூடி மிதமான தீயில் ஒரு விசில் விட்டு எடுத்தால் கமகமக்கும் மணத்துடன் பிரியாணி சுவையில் எளிதாக உதிரி உதிரியான தக்காளி சாதம் தயாராகிவிடும். மூடியை திறந்ததும் 2 ஸ்பூன் தக்காளி சாற்றை பச்சையாக அப்படியே சூட்டோடு ஊற்றுங்கள், சூப்பராக இருக்கும். இதனை இதே அளவுகளில் இதே முறையில் நீங்களும் ஒருமுறை செய்து பார்த்து வீட்டில் இருக்கும் அனைவரையும் அசத்தி விடுங்கள்.

- Advertisement -