4 வெங்காயம் இருந்தா போதும், பார்த்ததுமே நாக்குல எச்சி ஊருற மாதிரி சூப்பரா ஒரு வெங்காய தொக்கு செஞ்சுடலாம். இந்த தொக்குக்கு சுட சுட இட்லி, இருந்தா எவ்வளவு சாப்பிட்டோம் என்று உங்களுக்கே கணக்கு தெரியாது.

kara chutney
- Advertisement -

எப்போதும் இந்த இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார், தக்காளி தொக்கு என செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக, குறைந்த நேரத்திலும் அதிக சுவையுடன் செய்யக்கூடிய ஒரு சூப்பர் ரெசிபி தான் இந்த வெங்காய தொக்கு. இதற்கு அதிக அளவில் பொருட்கள் கூட தேவையில்லை, காலையில் அவசர நேரத்திற்கு சட்டென்று செய்யக் கூடிய ஒரு எளிமையான ரெசிபி. இந்த சுவையான வெங்காய தொக்கு எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க.

வெங்காயத் தொக்கு செய்வதற்கு முதலில் நான்கு பெரிய வெங்காயத்தை எடுத்து நல்ல நீள வாக்கில் அறிந்து எடுத்து வைத்து கொள்ளுங்கள். அரிந்த வெங்காயத்தை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பாக தண்ணீர் ஏதும் சேர்க்காமல் அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள், இது அப்படியே இருக்கட்டும்.

- Advertisement -

இப்போது அடுப்பை பற்ற வைத்து பேனை வைத்து கொள்ளுங்கள் , பேன் சூடான பிறகு ஒரு டீஸ்பூன் தனியா, கால் டீஸ்பூன் வெந்தயம், கால் டீஸ்பூன் கடுகு, அரை டீஸ்பூன் சீரகம், எட்டு காய்ந்த மிளகாய் ஒரு கொத்து கருவேப்பிலை அனைத்தையும் சேர்த்து நன்றாக சிவந்து வரும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ளுங்கள். வறுத்த மசாலா நன்றாக ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து இதை நல்ல ஃபைன் பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து மூன்று டேபிள் ஸ்பூன் அளவிற்கு நல்லெண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். இந்த தொக்கிற்கு எண்ணெய் அதிகமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அதுவும் நல்லெண்ணெயில் செய்தால் தான் இதன் சுவையும் கூடுதலாக இருக்கும். எண்ணெய் காய்ந்தவுடன் கடுகு போட்டு பொரிந்த உடன் அரைத்து எடுத்து வைத்த வெங்காய விழுதை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளுங்கள். வெங்காய விழுது பாதியளவு வதங்கியவுடன் அரைத்து வைத்த மசாலா பவுடரை இதில் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இப்பொழுது ஒரு சின்ன நெல்லிக்காய் அளவு புளி எடுத்து கரைத்து அந்த புளித்தண்ணீரை இந்த வெங்காயத் தொக்கில் ஊற்றி தொக்கிற்கு தேவையான உப்பையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொதிக்க விடுங்கள்.

- Advertisement -

கடைசியாக இறக்க இரண்டு நிமிடம் முன்பு ஒரு டீஸ்பூன் வெல்லம் தூள் செய்து இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். வெல்லம் சேர்க்கும் போது இது சுவை இன்னும் சற்று தூக்கிக் கொடுக்கும், எல்லாம் சேர்த்த பிறகு ஒரு ஐந்து நிமிடம் இந்த தொக்கை வதக்கி எண்ணெய் பிரிந்து வந்தவுடன் இறக்கி பரிமாற வேண்டியது தான் மிக மிக சுலபமாக சுவையான வெங்காய தொக்கு தயார்.

இதில் புளிப்பு,காரம், இனிப்பு சுவை எல்லாம் சேர்ந்து பிரமாதமாக இருக்கும். சுட சுட இட்லி, தோசை வைத்து அதனுடன் இந்த வெங்காய தொக்கு வைத்து சாப்பிட்டு பாருங்கள்.இதன் சுவையே சொல்ல வார்த்தைகள் இல்லை. நீங்களும் உங்கள் வீட்டில் இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -