பூரியுடன் உருளைக்கிழங்கு கிரேவி மற்றும் மசாலா கிரேவி சேர்த்து தான் சாப்பிடுவோம். ஆனால் ஒருமுறை இப்படி சுவையான பால் சேர்த்து பால் பூரி சாப்பிட்டு பாருங்கள்

palpoori1
- Advertisement -

இட்லி, தோசை, சப்பாத்தியை விட பூரி என்றால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விருப்பமாக சாப்பிடுவார்கள். அவ்வாறு பூரி செய்யும் பொழுதெல்லாம் அதனுடன் தொட்டு கொள்ள உருளைக்கிழங்கு மசாலாவை தான் அனைவரும் பெரிதளவில் விரும்புவதுண்டு. இல்லை எனில் தக்காளி தொக்கு, சென்னா மசாலா இதுபோன்ற கிரேவி வகைகளும் பூரிக்கு அருமையாக இருக்கும். இவ்வாறு பூரியை சற்றுக் காரசாரமாக சாப்பிட்டு பழகி விட்டோம். ஆனால் ஒருமுறை இந்த இனிப்பான பூரியை சுவைத்துப் பாருங்கள். இதனுடன் பாதாம், முந்திரி, பால் சேர்த்து செய்வதால் இது குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இனிப்புச் சுவையில் இருக்கும் இந்த பூரியை குழந்தைகளும் விருப்பமாக சாப்பிடுவார்கள். வாருங்கள் இந்த பால் பூரியை எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு – ஒரு கப், பால் – ஒரு லிட்டர், உப்பு – அரை ஸ்பூன், சர்க்கரை – அரை கப், பாதாம் – 15, முந்திரி – 15, மஞ்சள் தூள் – கால் ஸ்பூன், ஏலக்காய் தூள் – ஒரு ஸ்பூன், எண்ணெய் – கால் லிட்டர்.

- Advertisement -

செய்முறை:
முதலில் ஒரு கப் கோதுமை மாவை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் அரை ஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து, பூரி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும். பிறகு இதனை மூடி வைத்து, 30 நிமிடம் அப்படியே வைத்துவிட வேண்டும்.

பின்னர் 15 பாதாம் மற்றும் முந்திரியை ஒரு கிண்ணத்தில் சேர்த்து, அதனுடன் தண்ணீர் ஊற்றி, ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பிறகு தண்ணீரை வடிகட்டி, பாதாம் முந்திரியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து, அதனுடன் அரை டம்ளர் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு ஒரு லிட்டர் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, அடுப்பின் மீது வைத்து, கொதிக்க விட வேண்டும். பால் பொங்கி 15 நிமிடத்திற்கு நன்றாக கொதிக்க வேண்டும். பின்னர் இதில் பேஸ்ட்டாக அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து, நன்றாக கலந்து விட வேண்டும். இந்த விழுதை சேர்த்ததும் அடுப்பை சிம்மில் வைத்துக் கொள்ள வேண்டும்.பின்னர் இதனுடன் கால் ஸ்பூன் மஞ்சள் தூள், அரை கப் சர்க்கரை மற்றும் ஒரு ஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, ஒரு கொதி வந்ததும், அடுப்பை அனைத்துவிட வேண்டும்.

பின்னர் கோதுமை மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, பூரி கட்டையில் வைத்து தேய்த்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, அடுப்பின் மீது வைக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் பூரியை ஒவ்வொன்றாக பொரித்து எடுக்க வேண்டும். பிறகு இந்தப் பூரியை ஒரு தட்டில் பரிமாறி வைத்து, அதன்மீது காய்ச்சிய பாலை ஊற்றி, சிறிது நேரம் ஊறவைத்து, சாப்பிட கொடுத்தால் போதும். சுவையான பால் பூரி தயாராகிவிடும்.

- Advertisement -