தக்காளி, புளி சேர்க்காமல் அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார் இப்படி ஒரு முறை செய்து பாருங்கள், இனி வேறு சாம்பாரே செய்ய மாட்டீர்கள்!

small-onion-sambar
- Advertisement -

சாம்பார் என்றாலே அதில் தக்காளி, புளி போன்றவற்றுக்கு முதல் இடம் உண்டு. ஆனால் இந்த இரண்டு பொருட்களையும் சேர்க்காமல் சின்ன வெங்காயத்தை பிரதானமாக வைத்து அட்டகாசமான சுவையில் அரைத்து விட்ட சாம்பார் செய்யப் போகிறோம். கிராமப்புறங்களில் அதிகமாக செய்யும் இந்த சாம்பாரை, நகர்புறங்களில் பலரும் ருசித்து பார்த்திருக்க மாட்டார்கள். குறைந்த பொருட்களை வைத்து அலாதியான சுவை தரக்கூடிய இந்த அரைத்து விட்ட சின்ன வெங்காய சாம்பார், நாமும் எப்படி செய்யலாம்? என்பதை இந்த பதிவின் மூலம் கற்றுக் கொள்வோம் வாருங்கள்.

chinna-vengayam

சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு – 100 கிராம், சின்ன வெங்காயம் – ஒரு கப், காய்கறிகள் – 200 கிராம், சீரகம் – ஒரு டேபிள் ஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, பூண்டு பற்கள் – 4, பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை அளவு, பச்சை மிளகாய் – 3, தாளிக்க: கடுகு – கால் டீஸ்பூன், உளுந்து – கால் டீஸ்பூன், கருவேப்பிலை – ஒரு கொத்து, சின்ன வெங்காயம் – 4.

- Advertisement -

சாம்பார் செய்முறை விளக்கம்:
முதலில் நூறு கிராம் துவரம் பருப்பை அலசி சுத்தம் செய்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக் கொள்ளுங்கள். ஒரு பதினைந்து நிமிடம் நன்கு ஊறியதும் அதனை ஒரு குக்கரில் சேர்த்து விடுங்கள். பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், கொஞ்சம் உப்பு, பெருங்காயத்தூள், 4 பூண்டு பற்களை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவிற்கு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அடுப்பை பற்ற வைத்து 3 விசில் விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள்.

பின்னர் அடுப்பில் ஒரு வாணலியை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் தோல் உரித்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை ஒரு கப் அளவிற்கு சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் பெரிய வெங்காயத்தையும் சேர்க்கலாம் ஆனால் சின்ன வெங்காயம் சேர்த்தால் ருசி அதிகம். நீங்கள் விருப்பப்பட்ட காய்கறிகள் 200 கிராம் அளவிற்கு விருப்பப்பட்ட அளவுகளில் நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். கத்தரிக்காய், முருங்கைக்காய், கேரட், பீன்ஸ் போன்றவற்றை சேர்த்தால் ருசி அபாரமாக இருக்கும்.

- Advertisement -

காரத்திற்கு 3 பச்சை மிளகாயை அப்படியே காம்பு நீக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். காய் வேக கால் ஸ்பூன் உப்பு போட்டு வேக விடுங்கள். காய்கறிகள் பாதி அளவிற்கு வெந்ததும் நீங்கள் வேக வைத்த துவரம் பருப்பை இதனுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும். துவரம் பருப்புடன் இந்த காய்கறிகள் வெந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பூ போல துருவிய தேங்காய் துருவலை சேர்த்துக் கொள்ளுங்கள். அல்லது தேங்காய் பத்தைகளை சிறு சிறு துண்டுகளாக்கியும் சேர்க்கலாம். ஒரு ஸ்பூன் சீரகம் மற்றும் கொஞ்சம் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

sambar6

அரைத்த விழுதையும், சாம்பாருடன் சேர்த்து கொதிக்க விட வேண்டும். 5 நிமிடம் கொதித்ததும் அடுப்பை அணைத்து தாளிக்க வேண்டியது தான். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, நான்கு சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி சேர்த்து பொன்னிறமாக கருக விட்டு தாளித்துக் கொட்ட வேண்டும். வெங்காயம் கருகுவதில் தான் ருசி உண்டு. அவ்வளவுதாங்க! ரொம்ப ரொம்ப சூப்பராக சுலபமாக செய்யக்கூடிய இந்த சாம்பாரை நீங்களும் செய்து பாருங்க இனி அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -