அசல் பாய் வீட்டு குஸ்கா இப்படித்தான் இருக்கும். பாய் வீட்டு குஸ்காவில் இந்த பொருட்கள் எல்லாம் நிச்சயம் சேர்க்கவே மாட்டாங்க.

kuska
- Advertisement -

ஒரு பாய் வீட்டில் கறி சேர்க்காமல்  குஸ்கா எப்படி செய்வாங்க உங்களுக்கு தெரியுமா? குஸ்கா என்றாலே ஒவ்வொரு வீடுகளில் ஒவ்வொரு மாதிரி செய்வார்கள். அதாவது அதில் சேர்க்கக்கூடிய மசாலாக்களில் வித்தியாசம் இருக்கும். இன்று நாம் பார்க்கப் போவது ஒரு விதமான பாய் வீட்டு ஸ்டைல் குஸ்கா தான். நிறைய பாய் வீடுகளில் இப்படியும் குஸ்கா செய்வார்கள். அதாவது இதில் சில பிரியாணி மசாலா பொருட்களை சேர்க்காமல் தான் குஸ்கா தயார் செய்வாங்க. ஆனால் இதனுடைய சுவையில் ஒரு தனித்துவம் இருக்கும். சூப்பரான பிளைன் பாய் வீட்டு குஸ்கா ரெசிபி இதோ உங்களுக்காக.

300 கிராம் அளவு அரிசியை எடுத்துக் கொண்டால் பின் சொல்லக்கூடிய அளவுகள் சரியாக இருக்கும். அதாவது கப்பில் அலைந்தால் 1 1/2 கப் அளவு அரிசி எடுத்துக் கொள்ளுங்கள். அரிசியை எடுத்து தண்ணீரில் போட்டு இரண்டு அல்லது மூன்று முறை கழுவி நல்ல தண்ணீரில் ஊற்றி 20 நிமிடம் வரை அரிசியை ஊற வைக்க வேண்டும்.

- Advertisement -

அதன் பின்பு குக்கரை அடுப்பில் வைத்துக் கொள்ளுங்கள். எண்ணெய் – 3 ஸ்பூன், நெய் – 3 ஸ்பூன் ஊற்றி, காய்ந்ததும் சிறிய பட்டை துண்டு – 2, ஏலக்காய் – 6, கிராம்பு – 6, பிரியாணி இலை – 1, இந்த பொருட்களை போட்டு சிவக்க விட்டு அதன் பின்பு பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2 போட்டு, 1/4 ஸ்பூன் உப்பு போட்டு வெங்காயத்தை வதக்குங்கள்.

வெங்காயத்தை ஒரு நிமிடம் வதக்கிய பின்பு பச்சை மிளகாய் – 4, இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – 1/4 ஸ்பூன் சேர்த்து வெங்காயத்தை பிரவுன் கலர் வரும் அளவிற்கு நன்றாக வதக்கி விட வேண்டும். அதன் பின்பு பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் – 2 சேர்த்து, ஒரு நிமிடம் போல வதக்கி விட்டு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி அளவு, பொடியாக நறுக்கிய புதினா தழை – 1 கைப்பிடி அளவு, சேர்த்து மீண்டும் வதக்க தொடங்குங்கள். நம் சேர்ந்து இருக்கக்கூடிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது எல்லாம் அப்படியே மசிந்து வதங்கி வந்துவிடும். (புதினா கொத்தமல்லி தழையை பொடியாக நறுக்கி அவசியம் சேர்க்க வேண்டும். இந்த வாசம் தான் இந்த பிரியாணிக்கு ஹைலைட்.)

- Advertisement -

இந்த இடத்தில் காஷ்மீரி மிளகாய் தூள் – 1 ஸ்பூன், தனி மிளகாய் தூள் – 1/2 ஸ்பூன், கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1 ஸ்பூன், சேர்த்து ஒரு நிமிடம் போல தயிரை நன்றாக கலக்கி விட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்ற வேண்டும். 1 1/2 கப் பாசுமதி அரிசிக்கு 3 கப் அளவு தண்ணீர் சரியாக இருக்கும். தண்ணீரை ஊற்றி பிரியாணிக்கு தேவையான அளவு உப்பு போட்டு தண்ணீர் நன்றாக கொதித்து வந்தவுடன், ஊறிய பாசுமதி அரிசியை இதில் போட்டு லேசாக கலந்து விட்டு பிரியாணி தல தலவென கொதித்து வந்த உடன், குக்கரை மூடி விசில் விட்டு இறக்கினால் பிரியாணி தயார் ஆகிவிடும். (வெங்காயம் வதக்கும் போது கொஞ்சம் உப்பு சேர்த்து இருக்கின்றோம் பார்த்து போட்டுக் கொள்ளுங்கள்.)

பின்குறிப்பு: இந்த பிரியாணியில் நன்றாக கவனித்தால் நட்சத்திர சோம்பு, கல்பாசி, பிரியாணி மசாலா, கரம் மசாலா என்று எந்த பொருட்களையும் நாம் சேர்க்கவில்லை. ஆனால் இந்த குஸ்காவின் சுவை அத்தனை அருமையாக இருக்கும். மேலே உள்ள குறிப்புகளை அப்படியே பின்பற்றி ட்ரை பண்ணி பாருங்க. உங்களுடைய வீட்டில் காஷ்மீரி மிளகாய் பொடி இல்லை என்றால் பரவாயில்லை. அதை தவிர்த்துக் கொள்ளலாம். அப்போது உங்களுக்கு கலரில் மட்டும்தான் வித்தியாசம் தெரியும். சுவையில் எந்த வித்தியாசமும் இருக்காது. உங்களுக்கு இந்த பிளைன் சிம்பிள் குஸ்கா பிடித்திருந்தால் மிஸ் பண்ணாம ஒரு நாள் உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -