இட்லி தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட இப்படி கத்தரிக்காய் கடையல் செய்து பாருங்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். பத்து இட்லி கொடுத்தாலும் பத்தாது என்பார்கள்

brinjal
- Advertisement -

பொதுவாகவே இட்லி, தோசையுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட சட்னி, சாம்பார் இவை இரண்டும் தான் அதிகமாக செயல்படுகிறது. ஆனால் ஒருமுறை இந்த கத்தரிக்காய் கடையலை செய்து பாருங்கள். மீண்டும் அடிக்கடி உங்கள் வீட்டில் இதை தான் செய்வீர்கள். கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட இப்படி கத்தரிக்காயை கடைந்து கொடுத்தால் போதும், விருப்பமாக சாப்பிடுவார்கள். இதன் சுவை அவ்வளவு அருமையாக இருக்கும். இந்த கத்தரிக்காய் கடையலை சுடச்சுட இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டாலும் சூப்பரான சுவையில் இருக்கும். வாருங்கள் இப்படி சுவையான கத்தரிக்காய் கடையலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்:
கத்தரிக்காய் – கால் கிலோ, வெங்காயம் – 2, தக்காளி – 2, புளி – சிறிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – அரை ஸ்பூன், மிளகாய்த் தூள் – ஒரு ஸ்பூன், உப்பு – ஒரு ஸ்பூன், பச்சை மிளகாய் – 2, பூண்டு – 5 பல், எண்ணெய் – 4 ஸ்பூன், கடுகு – அரை ஸ்பூன், உளுத்தம்பருப்பு – அரை ஸ்பூன், வர மிளகாய் – 2, கறிவேப்பிலை – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து.

- Advertisement -

செய்முறை:
முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி வைத்து, தண்ணீரில் போட்டு வைக்க வேண்டும். பிறகு வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பிறகு இரண்டு தக்காளி பழங்களை ஒரு கிண்ணத்தில் வைத்து கைகளால் பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஐந்து பல் பூண்டை தட்டி வைக்க வேண்டும். பிறகு அடுப்பை பற்ற வைத்து, அதன் மீது கடாயை வைத்து, இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் தட்டி வைத்துள்ள பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். பிறகு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளி பழத்தையும் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் இவற்றுடன் பொடியாக நறுக்கிய கத்தரிக்காயை சேர்த்து வதக்கிக் கொள்ள வேண்டும். பிறகு உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, இவற்றுடன் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கலந்து கொள்ள வேண்டும். பின்னர் கடாயில் ஒரு தட்டு போட்டு மூடி 10 நிமிடத்திற்கு வேக வைக்க வேண்டும்.

அதன் பின்னர் சிறிய நெல்லிக்காய் அளவு புளியை, ஊறவைத்து அரைத்து அதன் சாறை இவற்றுடன் சேர்த்து கலந்து விட வேண்டும். பின்னர் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அனைத்துவிட்டு, மத்து வைத்து கத்தரிக்காயை நன்றாக கடைந்து கொள்ள வேண்டும்.

பிறகு அடுப்பின் மீது ஒரு தாளிப்பு கரண்டியை வைத்து, அதில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் நன்றாக காய்ந்ததும் அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, வர மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அதனை கத்தரிக்காய் கடையலில் சேர்க்க வேண்டும். பிறகு இறுதியாக கொத்தமல்லித்தழை சேர்த்து கலந்துவிட்டு, ஒரு நிமிடம் கொதிக்க வைத்தால் சுவையான கத்தரிக்காய் கடையல் தயாராகிவிடும்.

- Advertisement -